ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?
ஆண்கள் பிளாட்டினம் என்று சொல்லக்கூடிய அணிகலன்களை அணியலாமா?
தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي رواه النسائي
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் பட்டை தனது வலக்கரத்திலும் தங்கத்தை தனது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ (5055)
எனவே ஆண்கள் தங்கம் அணிவது மட்டுமே தடைசெய்யப்பட்டிருக்கின்றது. பிளாட்டினம் தங்கத்தை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அணிவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.
கூடுதல் விபரங்களுக்கு ”ஆண்கள் கவரிங் அணியலாமா?” என்ற லிங்கையும் பார்க்க
*******************************************************************************************************************
ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?
*******************************************************************************************************************
தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை.
(வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 2783
கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம் உள்ளதாகச் சொல்லியோ விற்றால் அது கூடாது. அதன் தரம் என்னவோ அதைச் சொல்லி விற்பதில் தவறில்லை.
பட்டாடை, தங்கம் அணிய ஆண்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவற்றில் விதி விலக்குகளும் உள்ளன.
தங்கத்தில் சிறிய அளவைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி)
நூல் : அஹ்மத் 16230, 16241, 16261, 16297, 16304 அபூதாவூத் 3701, நஸயீ 5060, 5061, 5068, 5069
இந்த அடிப்படையில் கவரிங், ஐம்பொன் போன்றவற்றை ஆண்கள் அணியலாம். ஏனெனில் இவற்றில் அடங்கியுள்ள தங்கம் இவற்றில் அடங்கியுள்ள மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவே உள்ளது.
பாதி தங்கமும், பாதி செம்பும் கலந்திருந்தால் அதில் உள்ள தங்கத்தை சிறிதளவு என்று யாரும் கூறுவதில்லை. அதனால் அதை ஆண்கள் அணியலாகாது.
அதிக விலையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தைத் தடுக்கவில்லை. தங்கம் இலவசமாகக் கிடைக்கும் காலம் வந்தாலும் அப்போதும் ஆண்கள் தங்கம் அணியக் கூடாது.
தங்கத்திற்குத் தடை விதித்தால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பிளாட்டினம், வைரம் மற்றும் அதை விட மதிப்புள்ள பொருட்கள் எதுவானாலும் அணியலாம். இதையெல்லாம் கூடாது என்றால் அதை அல்லாஹ் சொல்லியிருப்பான்.
"உமது இறைவன் எதையும் மறப்பவனல்லன்'' (அல்குர்ஆன் 19:64)
No comments:
Post a Comment