பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

குளிப்பு கடமையான நிலையில் தயம்மும் செய்யலாமா ...?

? குளிப்பு கடமையான நிலையில் நோயின் காரணமாகவோ அல்லது தண்ணீர் இல்லாமலோ தயம்மும் செய்யலாமா? தயம்மும் செய்து சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழலாமா?




குளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு, குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கா விட்டால் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் குளிப்பதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:43)

உளூ நீங்கியவர் எவ்வாறு தயம்மும் செய்யலாமோ அது போல் குளிப்பு கடமையானவரும் தயம்மும் செய்யலாம் என்பது இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரிடத்தில், ''நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை'' என்றார். அப்போது, ''மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் அல்குஸாயீ (ரலி)
நூல்: புகாரி 348, 344



ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ''எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை'' என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ''உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டுத் தொழுதேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங் கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும் முன் கைகளையும் தடவிக் காட்டி, இப்படிச் செய்வது உமக்குப் போதுமே! எனக் கூறினார்கள்'' என்று தெரிவித்தார்கள். (நூல்: புகாரி 338)

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் குளிப்பு கடமையான நிலையில் நோயுற்றிருந்தாலோ அல்லது தண்ணீர் கிடைக்காவிட்டாலோ தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாம்.

--Q/A  Ehathuvam Magazine Mar 06

No comments:

Post a Comment