பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? அல்லது ஓரிரு நாட்கள் கழித்துத் தான் வைக்க வேண்டுமா?

? திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? அல்லது ஓரிரு நாட்கள் கழித்துத் தான் வைக்க வேண்டுமா?திருமணம் முடித்த மணமகனை வலீமா விருந்து கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். அவர்கள் திருமணம் முடித்த போதும் வலீமா விருந்தளித்துள்ளார்கள். எனவே ஒருவர் திருமணம் முடித்தால் அவர் விருந்தளிப்பது நபிவழியாகும்.

அதே சமயம், திருமணம் நடந்த அன்றே வைக்க வேண்டும் என்றோ, அல்லது ஓரிரு நாட்கள் கழித்து வைக்க வேண்டும் என்றோ நபி (ஸல்) அவர்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ்ஸஹ்பா என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா லி மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 4213

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பிறகு விருந்தளித்துள்ளதால், திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் விருந்தளிப்பது தான் நபிவழி என்று சிலர் வாதிடுகின்றனர்.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும், ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், ''எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்'' என்று கூறினார்.

அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), ''உமது குடும்பத்திலும், செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்'' என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும், நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார்.

சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ''என்ன விசேஷம்?'' என்று கேட்டார்கள். அதற்கவர், ''அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டார்கள். ''ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்'' என்று பதில் கூறினார். அதற்கு, ''ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2048, 2049

''ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டேன்'' என்று கூறும் நபித் தோழரிடம், ''நீ இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா?'' என்று கேட்டு விட்டு விருந்தளிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் மண விருந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடியும். எனவே ஒருவர் மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம்.

ஆனால் அதே சமயம், திருமணம் நடப்பதற்கு முன்னரே சிலர் விருந்து வைக்கின்றனர். விருந்து முடிந்த பின்னர் திருமண ஒப்பந்தம் செய்கின்றனர். இவ்வாறு திருமணமே நடக்காத நிலையில் வைக்கப்படும் விருந்து மண விருந்தாக ஆகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-> Q/A Ehathuvam Oct 06

No comments:

Post a Comment