பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

குல்உ சம்பந்தமான கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,??

? மே 2006 இதழில் குல்உ சம்பந்தமான கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டிய தில்லை என்று கூறியிருக்கின்றீர்கள். ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று திர்மிதி, அஹ்மத், அபூதாவூதில் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குல்உ பெற்று கணவனைப் பிரிந்த பெண்கள் நயவஞ்சகர்கள் ஆவர் என்று ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் படி குல்உ பெறும் பெண்கள் தகுந்த காரணத்தோடு தான் குல்உ பெற வேண்டும் என்று தெரிகின்றதே, இதற்கு மாற்றமாகப் பதிலளித்தது ஏன்?
தாங்கள் குறிப்பிடும் ஹதீஸ் திர்மிதீ 1108 மற்றும் அஹ்மத் 21345 ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஸவ்பானிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் யாரென்று அறியப்படாதவர். எனவே இது ஆதாரப்பூர்வமானதல்ல.

இதே கருத்தில் இடம் பெற்றுள்ள திர்மிதீ 1107, நஸயீ 3407, அஹ்மத் 8990 ஆகிய ஹதீஸ்களும் பலவீனமானவையாகும். இந்த ஹதீஸை அபூஹுரைராவிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் என்பார் அபூஹுரைராவிடம் இருந்து எதையும் செவியுற்றதில்லை. இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸ் சரியானது அல்ல என்று குறிப்பிடுகின்றார்.

இந்தக் கருத்தில் பல்வேறு பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அஹ்மதில் 21404வது ஹதீஸ் மட்டும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் இடம் பெற்றுள்ளது.

தகுந்த காரணமின்றி விவாகரத்துக் கோரிய பெண்ணுக்கு சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

குல்உ சம்பந்தமாக நாம் எழுதும் போது, காரணமே இல்லாமல் பெண் விவாகரத்து கோரலாம் என்று எழுதவில்லை. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தான் எழுதியிருந்தோம். காரணம் சொல்ல வேண்டியதில்லை என்பதற்கும், காரணம் இல்லாமல் என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

தகுந்த காரணமின்றி ஒரு பெண் விவாரத்து கோரினால் அல்லாஹ்வின் பார்வையில் அவள் பாவியாகி விடுகின்றாள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.

ஆனால் கணவனைப் பிடிக்காததற்கான காரணத்தை ஜமாஅத் தலைவரிடம் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் இல்லை.

காரணத்தைச் சொல்லத் தேவை இல்லை என்று நாம் குறிப்பிட்டதற்கு இந்த ஹதீஸ் முரணாக இல்லை.

ஒரு பெண் தன் கணவரை விட்டுப் பிரிவதற்காக விவாகரத்து கோருகிறாள் என்றால் அதற்குக் காரணம் இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம். தகுந்த காரணத்துடன் விவாகரத்து கோரியிருந்தால் அவள் மீது குற்றமில்லை. காரணம் இல்லாமல் விவாகரத்து கோரியிருந்தால் அவள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகி விடுகின்றாள்.

அந்தக் காரணத்தை அவள் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ காணப்படவில்லை.

''தகுந்த காரணமின்றி விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கக் கூடாது'' என்று சொல்லாமல் ''சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே, அவள் அந்தக் காரணத்தை வெளியில் சொல்லத் தேவையில்லை என்பதை விளங்கலாம்.

-> Q/A Ehathuvam July 06

No comments:

Post a Comment