பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

ஜும்ஆ உரையை மிம்பரின் மீது ??

?நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையை மிம்பரின் மீது தான் ஆற்றினார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படும் சில பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரையை மிம்பர் போன்ற உயரமான இடத்தில் (மிம்பரில்) நடத்துவது இல்லையே! இது நபிவழிக்கு முரணில்லையா? என்று என் நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.


ஜும்ஆ உரையை நபி (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடை மீது தான் நிகழ்த்தினார்கள் என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. எனினும் மிம்பர் என்பது ஒரு வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மேடை தான் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸைச் சிந்தித்தால் விளங்க முடியும்.

நபி (ஸல்) அவர்கள், ஜும்ஆ நாளின் போது ஒரு மரம் அல்லது பேரீச்ச மரத்தின் (அடிபாகத்தின்) மீது சாய்ந்தபடி (உரையாற்றிய வண்ணம்) நின்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அன்சாரிப் பெண்மணி.... அல்லது அன்சாரித் தோழர்...., ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)'' என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரைமேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள்.
நூல்: புகாரி 3584

நபித்தோழர் மிம்பர் செய்து கொடுப்பதற்கு முன்பு வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு மரப் பலகையின் மீது சாய்ந்தவாறு அல்லது ஊன்றியவாறு நின்று தான் உரையாற்றியுள்ளார்கள். நபித்தோழர் கேட்ட பின்னர், விரும்பினால் செய்து தாருங்கள் என்று கேட்டு, அதன் மீது நின்று உரையாற்றியுள்ளார்கள்.

எனவே மிம்பர் என்பது ஒரு வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மேடை தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனினும் அதன் பின்னர் அந்த மேடையின் மீது தான் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தியுள்ளனர் என்பதற்குப் பல்வேறு ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.

 முறையாகப் பள்ளிவாசல் ஏற்படுத்தி, ஜும்ஆ நடத்தப்படும் இடங்களில் மிம்பர் அமைத்தே உரை நிகழ்த்துகின்றனர். ஆனால் சில பகுதிகளில் இணை கற்பிப்பவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவதைத் தவிர்த்து, தவ்ஹீது சகோதரர்கள் சிலர் சேர்ந்து தனியாக ஜும்ஆ நடத்தும் போது மிம்பர் அமைக்க முடிவதில்லை.

இவர்களும் இயன்ற வரை மேடை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றாலும் மேற்கண்ட நபிமொழியின் படி மிம்பர் இல்லாதபட்சத்தில் தரையில் நின்று உரை நிகழ்த்துவதைக் குறை கூற முடியாது.

மிம்பர் என்றால் மத்ஹபுகளில் உள்ளது போன்று இத்தனை படிகள் இருக்க வேண்டும், இன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

தொழுகையை எப்படித் தொழ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, மிம்பரின் மீது நின்று தொழுது காட்டியுள்ளார்கள். எனவே மிம்பர் என்பது தற்போது நாம் விளங்கி வைத்திருக்கும் குறிப்பிட்ட வடிவம் கொண்டதல்ல! அது ஒரு மேடை தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

--> Q/A Ehathuvam Aug 2007

No comments:

Post a Comment