பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

ஓதிப் பார்த்தால் ???

?ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்று ஹதீஸ் உள்ளதா? எவ்வாறு ஓதிப் பார்ப்பது கூடாது? நபி (ஸல்) அவர்கள் தூங்கும் முன் அல்முஅவ்விதாத் (எனும் 112, 113, 114) அத்தியாயங்களை ஓதி விட்டுத் தூங்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது போன்று மரணத் தருவாயில் வேதனை குறைவதற்காக ஓதிப் பார்க்க அனுமதியுள்ளது. இவ்வாறு ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா?



ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்று எந்த ஹதீசும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நோய்க்காக குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பதை அனுமதித்துள்ளார்கள். ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். எனவே இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

மறுமையில் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் ஒரு கூட்டத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் போது, ''அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள்'' என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மிஃராஜின் போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப் பட்டனர். அப்போது இறைத் தூதர்களில் ஓரிருவருடன் ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத் தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காண்பிக்கப்பட்டது. நான், ''இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?'' என்று கேட்டேன். அப்போது, ''இல்லை! இது மூஸாவும் அவருடைய சமுதாயமும்'' என்று சொல்லப்பட்டது.

அப்போது, ''அடிவானத்தைப் பாருங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பின்னர், ''அடிவானங்களில் இங்கும் பாருங்கள்'' என்று சொல்லப்பட்டது. அப்போது வானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் கண்டேன். 'இது உங்கள் சமுதாயம்! விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இதில் அடங்குவர்' என்று சொல்லப்பட்டது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். மக்கள் விவாதிக்கத் துவங்கினார்கள். ''நாம் தான் அவர்கள்; நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனது தூதரைப் பின்பற்றினோம். அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள்; நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்'' என்று சொன்னார்கள்.

இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே அவர்கள் புறப்பட்டு வந்து ''அவர்கள் யாரெனில் அவர்கள் ஓதிப் பார்க்க மாட்டார்கள். பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள். (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள்.

அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) எழுந்து, ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் நானும் ஒருவனா?'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ''அவர்களில் நானும் ஒருவனா?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ''இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டு விட்டார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5705

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகள், உறங்கும் போது முஅவ்விதாத் (எனும் 112, 113, 114) சூராக்களை ஓதுதல் போன்றவை இதில் அடங்காது. ஏனெனில் 'ஓதிப் பார்த்தல்' என்பது ஒருவருக்கு ஒரு நோய் ஏற்பட்டு, அது குணமடைவதற்காக மந்திரிப்பதாகும்.

இறைவனுக்கு இணை கற்பிக்காமல் குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பதற்கு நபியவர்கள் அனுமதித்துள்ளதால் அதைச் செய்வது குற்றமில்லை. ஆனால் அது போன்று எதையும் செய்யாமல் இறைவன் மீதே முழுமையாக தவக்கல் வைக்கக் கூடியவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு அந்தஸ்து தான் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் பாக்கியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் ஓதிப் பார்த்தாலும் இந்தப் பாக்கியம் கிடைக்காது என்றால் அதை ஏன் நபியவர்கள் கற்றுத் தர வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.

ஓதிப் பார்க்க விரும்புவோர் எதைக் கொண்டு ஓதிப் பார்க்க வேண்டும்? என்று கற்றுத் தருவது நபி (ஸல்) அவர்களின் பொறுப்புகளில் உள்ளது என்பதால் அதைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அதே சமயம் ஓதிப் பார்க்காமல் இருப்பது சிறந்த செயல் என்பதை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.

--Q/A Ehathuvam May 07

No comments:

Post a Comment