பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, July 26, 2010

தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் நபி (ஸல்) அவர்கள் பார்த்ததாக ??

?தஜ்ஜால் செல்லாத இடங்களில் கஅபாவும் ஒன்று. அப்படியிருக்க, தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் நபி (ஸல்) அவர்கள் பார்த்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே? விளக்கம் தரவும்.நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் தூங்கிக் கொண்டிருக் கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய, தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க... அல்லது வழிந்து கொண்டிருக்க... (நின்றிருந்தார்). அங்கே இருந்த நான், ''இவர் யார்?'' என்று கேட்டேன். ''மர்யமின் குமாரர்'' என்று பதிலளித்தார். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலைமுடியுள்ள, வலக்கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ''யாரது?'' என்று கேட்டேன். ''தஜ்ஜால்'' என்று பதிலளித்தார்கள். (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் இப்னு கத்தன் தான்.

இமாம் ஸுஹர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு கத்தன் குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன். அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.

நூல்: புகாரி 3441

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கனவில் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகின்றார்கள். ஈஸா (அலை) அவர்களையும், தஜ்ஜாலையும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கா, மதீனாவிற்குள் தஜ்ஜால் நுழைய முடியாது என்று இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்கு உள்ளாகும். அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1881

இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாள் பற்றிய முன்னறிவிப்பாகவே கூறப்படுகின்றன. அதாவது கியாமத் நாள் நெருங்கும் போது தஜ்ஜால் வருவான். அவ்வாறு வரும் போது அவனால் மக்கா, மதீனாவிற்குள் நுழைய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இதற்கும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

--> Q/A Ehathuvam Aug 2007

No comments:

Post a Comment