பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 14, 2010

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வது

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வது

பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை.



பதில் பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை தான். அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் சிலை வழிபாடு செய்தால் அவர்களின் வழிபாட்டு உரிமை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை அவர்கள் செய்யும் போது அதை அந்த சபையில் நாம் இருப்பதற்கு இது எப்படி ஆதாரமாக அமையும்?

முஸ்லிமல்லாதவர்கள் நடித்துள்ள ஆபாசக் காட்சியை நாம் பார்ப்பது கூடுமா? அவர்கள் பன்றியைச் சாப்பிடுவதால் அதை அவர்கள் நமக்குத் தரும் போது நாம் சாப்பிட முடியுமா?

இறைவன் கட்டளையும் நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும் மாற்று மதத்தினர்களுக்குப் பொருந்துமா? பொருந்தாதா? என்ற அடிப்படையில் இப்பிரச்சனையை நாம் அனுகக் கூடாது. மார்க்கம் தடை செய்த காரியங்களில் பங்கெடுப்பது கூடுமா? கூடாதா? என்ற அடிப்படையில் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாம் செய்யக் கூடாது என்று முஸ்லிம்களாகிய நமக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அக்காரியங்கள் நடைபெறும் சபையில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் நமக்கு கட்டளையிட்டிருக்கின்றான்.

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் வைபவங்களில் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்து.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

(அல்குர்ஆன் 4:140)

பொதுவாக அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்யும் வகையிலும் அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் சேர்ந்து நாம் அமரக் கூடாது என்று இவ்வசனம் கூறுகின்றது.

இத்தடையை மீறி அமர்ந்தால் நாமும் அவர்களைப் போன்றவர்களே என்று எச்சரிக்கின்றது.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவ்வாறு செய்தால் அமரக் கூடாது மற்றவர்கள் செய்தால் அமரலாம் என்று அல்லாஹ் வேறுபடுத்தி சட்டத்தைக் கூறவில்லை. மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை யார் செய்தாலும் அந்தச் சபையில் இருக்கக்கூடாது என்று பொதுவாகவே கூறுகிறான்.

தீமை நடக்கக் கண்டால் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 70

முடிந்தால் கையால் தடுக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் வெறுத்து ஒதுங்க வேண்டும்.

மூன்றாவதாக கூறப்பட்ட வெறுத்து ஒதுங்குவது என்ற நிலை கூட பலவீனமான நிலை என்று கூறப்படுகின்றது. மார்க்கத்திற்குப் புறம்பான சபைகளை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். அந்த சபைகளில் கலந்து அவைகளுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு நான் மனதால் வெறுத்து விட்டேன் என்று கூற முடியாது.

மாற்று மதத்தவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிகளில் இணைவைப்பு மூடநம்பிக்கைகள் இசை போன்ற அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும். இந்நிகழ்ச்சிகளில் நாம் பங்கெடுத்துவிட்டு வந்தால் இத்தீமைகளை நாம் ஆதாரித்ததாக ஆகிவிடும். நாமே இவற்றை செய்த குற்றமும் ஏற்படும்.

மேலும் ஒருவர் தவறு செய்வதைக் கண்டால் ஏதோ ஒரு வகையில் அத்தவறை அவருக்கு உணர்த்துவது நமது கடமை. மார்க்கத்திற்கு மாற்றமான நிகழ்ச்சிகளை நாம் புறக்கணித்தால் தான் அவற்றை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது தவறு என்பதை உணருவார்கள். இந்நிகழ்ச்சிகளில் நமது பங்களிப்பை அளித்தால் தங்களது தவறுகளை அவர்களால் உணர முடியாமல் போகின்றது.

அழகிய முறையில் திருமணத்தை நடத்தி நாம் தான் அவர்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்காக மாற்று மதத்தினர்களை நமது திருமணங்களுக்கு அழைக்கலாம். ஆனால் நாம் அவர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனத்துக்கும் நபிமொழிக்கும் மாற்றமாக நடக்கும் நிலை உருவாகிறது.

மேலும் மாற்று மதத்தவர்களின் திருமண விஷயத்தில் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று கூறி அதில் கலந்து கொள்வதை நாம் கூடும் என்று சொன்னால் அவர்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம் என்றே கூற வேண்டும். அவர்கள் நடத்தும் கும்பாபிஷேகம் கோவில் திருவிழாக்கள் சிலை திறப்பு விழா கிரகப் பிரவேசம் பூப்புனித நீராட்டு விழா காது குத்தும் விழா என்று இன்னும் மார்க்கத்திற்கு மாற்றமான ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம் என்று கூற வேண்டி வரும்.

முடிவில் தீமையைக் கண்டால் அதை வெறுக்கும் குணம் காலப்போக்கில் அத்தீமைகளை ஆதரிக்கும் குணமாக மாறிவிடும். மேலும் அவர்களின் கலாச்சாரம் நமது சமுதாயத்திலும் தொற்றிக்கொள்ளும். எனவே தான் மார்க்கம் இதைத் தடைசெய்கின்றது.

மாற்றார்களின் திருமணத்தில் ந்மது மார்க்கம் தடுத்துள்ளவை நடக்குமானால் பங்கெடுக்கக் கூடாது என்றாலும் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தீமைகள் அரங்கேராத போது மணமக்களைப் பார்த்துவிட்டு வந்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.

இது முஸ்லிமல்லாதவர் என்ற இனவேறுபாட்டினால் அல்ல. ஒரு முஸ்லிம் இப்படிச் செய்தாலும் நாம் புறக்கணிப்போம் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். செயலின் அடிப்படையில் தான் நாம் முடிவு செய்கிறோம் என்று நடப்பவர்களுக்கு இது பிரச்சனை இல்லை. முஸ்லிம்கள் நடத்தும் அனாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறு நிலை எடுப்பவர்களூக்குத் தான் இது கடினமானது.

அதே அல்லாஹ்வும் அவனது தூதரும் வேறுபடுத்தி காட்டிய விஷயங்களில் முஸ்லிமல்லாதவர் விஷயத்தில் நாமும் வேறு நிலை எடுக்கலாம்.

மேலும் விபரம் அறிய கீழ்க்காணும் செய்திகளைப் பார்க்கவும்

வீடியோ1

வீடியோ2

கட்டுரை 1 , கட்டுரை 2 , கட்டுரை 3

****************************************************************************************

கட்டுரை 1 :

புத்தாண்டு கொண்டாடலாமா?
புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா?

கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்ட நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (959)

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.



ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்.

மாற்று மதத்தினர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லலாமா? என்ற கேள்விக்கு ஏற்கனவே நாம் அளித்த பதிலை பார்க்கவும்

***********************************************************************************************

கட்டுரை 2

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

முஸ்லிம்கள்மட்டும் வாழும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற்சமுதாய மக்களுடன் வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துசொல்லி அனபைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்றஎண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடுஇல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாகக்கருத்தும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்க்ளுக்கு எடுத்துச்சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும்.

இதன் காரணமாகவே இது குறித்து கேள்விகள் எழுகின்றன.

நம்முடைய மார்க்க வரம்பை மீறாமலும் அவர்கள் தவறாக எண்ணாமலும் இருக்கும் வகையிலான் வழிமுறைகள் இருந்தால் அதைக் கடைப்பிடிப்பதில் தவறு இல்லை.

பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார்.நான் நோயாளி எனக் கூறினார்.

அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.

திருக்குர் ஆன் 37:89

இவ்வசனத்தில் நான் நோயாளியாக இருக்கிறேன் என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.

இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4371)

இப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாவிட்டாலும், இறைவனுக்காக நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.

இது போல் ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது.

பண்டிகைக்கும் வாழ்த்துக்கும் தான் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் முஸ்லிம் அல்லாத மக்கள் இவ்வுலகில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனிடம் பிரர்த்தனை செய்ய அனுமதி இருக்கிறது. அது போல் அவர்கள் நேர்வழி சென்று மறுமை வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனை செய்வதற்கும் அனுமதி இருக்கிறது.

இந்த அனுமதிக்கு உட்பட்டு நல் வழி நடந்து எல்லா நாட்களும் எல்லா வளமும் உங்களுக்குக் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று (இதே வார்த்தையை அல்ல) இது போன்ற கருத்தைத் தரும் வார்த்தைகளைத் தேர்வு செய்து கூறினால் அவர்கள் அதை வாழ்த்து என்று புரிந்து கொள்வார்கள். நாமும் வரம்பு மீறியவராக மாட்டோம்.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பயன்படுத்தும் வாழ்த்துக்களை விட இது அதிக மன நிறைவைத் தரும். நம்முடைய துஆ அல்லாஹ்வால் ஏற்கப்பட்டால் அவர்கள் இஸ்லாத்தில் ஈர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு.

மேலும் அந்தப் பண்டிகை தினத்தில் மட்டும் இன்றி அவ்வப்போது இது போல் பயன்படுத்திக் கொண்டால் பண்டிகைக்காக வாழ்த்தியதாக ஆகாது.

************************************************************************************************
கட்டுரை 3

மாற்று மதத்தினர் தங்களது பண்டிகைகளின் போது தரும் பலகாரங்களை உண்ணலாமா? அவர்களுக்கு வாழ்த்து கூறலாமா?

ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது. சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 16:115)

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

இது குறித்து நேரடி கேள்விகளுக்கும் பதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை வீடியோ வடிவில் காண

பிற மதத்தவரின் உணவை சாப்பிடலாமா

மேலும் பார்க்க

பிற மதப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லலாமா என்ற கேள்விக்கு முன்னரே பதில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பார்க்கவும்

மேலும் இதையும் பார்க்கவும்
***********************************************************************************************

No comments:

Post a Comment