பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

மற்றவர்களுக்காக எழுந்து நிற்கலாமா ?

மற்றவர்களுக்காக எழுந்து நிற்கலாமா ?

? கருணாநிதி கழிவறைக்குச் செல்ல எழுந்த போதெல்லாம் தாமும் எழுந்தது மார்க்க அடிப்படையில் சரிதான் என்று வாதிட்டு நியாயப்படுத்துபவர்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?


! மார்க்க அடிப்படையில் தான் எழுந்தது சரி தான் என்பது அவர் கொள்கையாக இருந்ததில்லை. ஏற்கனவே பல தடவை மற்றவர்கள் எழுந்த போதெல்லாம் அவர் எழாமல் இருந்துள்ளார். அதை ஒரு வாசகரும் சுட்டிக்காட்டி இருந்தார். (9 : 32)


அது மட்டுமின்றி அவர் ஆசிரியராக இருந்தபோது வெளியிடப்பட்ட ஒற்றுமை இதழில் பி.ஜே.யின் தொடர் கட்டுரை ஒன்று இடம்பெற்றது. அந்தக் கட்டுரையில் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டே மேடையில் அவருக்காக எழக்கூடாது என்று தெளிவாக எழுதப்பட்டது. அது தவறு என்றால் அந்தக் கட்டுரையை அவர் வெளியிட்டிருக்க மாட்டார். இத்தனை ஆண்டுகளாக அக் கட்டுரைக்கு எதிராக ஒரு வார்த்தையும் கூறியதில்லை. அக்கட்டுரையை அப்படியே தருகிறோம்.

வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம். மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். எழுந்து நிற்பவனும் நம்மைப் போன்ற மனிதன் தானே! நமக்காக எழுந்து நின்றால் அவரது சுயமரியாதைக்கு அது இழுக்கு அல்லவா? என்று ஒரு தலைவரும் சிந்தித்ததாக உலக வரலாற்றில் நாம் அறியவில்லை.

மேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப்பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம். நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே! எனக்காக எழுந்து நிற்பது உங்களுக்கு இருக்க வேண்டிய சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா? என்ற எந்தத் தலைவரும் அறிவுரை கூறியதாக நாம் காணவில்லை.

அரசியல் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. சுயமரியாதைத் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. ஆன்மீகத் தலைவர்களும் கூறியதில்லை. இந்த மாமனிதரோ எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி) அவர்கள். அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும் இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ''அமருங்கள்'' என்றனர். தனக்காக மக்கள் எழுந்து நிற்கவேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தமது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமிஜ்லஸ் நூல் : அபூதாவூத் (2679)

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழவேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம். மற்றவர்களுக்கு இவ்வாறு போதித்தாலும் தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால் தமக்காக மட்டும் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை விரும்பினார்களா? நிச்சயமாக இல்லை.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும்போது நாங்கள் அவர்களுக்காக எழமாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள். நூல்: அஹ்மத் (12068,11895) திர்மிதீ (2678)

நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக்கூடாது என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவித் திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

தமக்காக மக்கள் எழக்கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம்(ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழு தோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டுவிட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். (இது பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்று ஹுமைதி கூறுவதாக புகாரி 689-வது ஹதீஸின் கடைசியில் கூறுவது தவறான தகவலாகும். ஹுமைதியும்இ இமாம் ஷாபியும் கூறும் இந்தக் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை.)

தொழுகையில் பல்வேறு நிலைகள் உள்ளன. சிறிது நேரம் நிற்க வேண்டும். சிறிது நேரம் குனிந்த நிலையில் இருக்க வேண்டும். சிறிது நேரம் நெற்றியையும் மூக்கையும் முட்டுக்கால்களையும் இரு கைகளையும் கால் விரல்களையும் தரையில் படுமாறு இருக்கவேண்டும். சிறிது நேரம் மண்டியிட்டு அமர வேண்டும். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் மட்டும் அதற்குப் பதிலாக உட்கார அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுத வர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு (ஸல்) மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத் தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம்மீது வீசக்கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள். தமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்ததை அறியும்போது இந்த மாமனிதரின் அப்பழுக்கற்றத் தூய்மை நம் கண்களைக் கலங்க வைக்கிறது.

பள்ளிக்கூடத்தின் வாத்தியார் கூட தியாகம் செய்ய முடியாத மரியாதையை மாமனிதரும், மாபெரும் ஆன்மீகத் தலை வருமான நபிகளார் (ஸல்) சர்வ சாதாரணமாக தியாகம் செய்கிறார்கள். தமக்காக நிற்காவிட்டாலும் தமக்காக நிற்கிறார்கள் என்ற எண்ணமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி மற்றவர்களின் சுயமரியாதையைக் காக்கிறார்கள்.

கண்ணை மூடிக் கொண்டு ஒருவரின் பின்னே செல்ல நினைத்தால் அதற்கான முழுத்தகுதியும் இவருக்கு மட்டுமே உள்ளது. எந்த வகையிலும் இவர் நம்மை ஏமாற்றவே மாட்டார். தமது அற்பமான சுயநலனுக்குக் கூட நம்மைப் பயன்படுத்த மாட்டார் என்று ஒருவரைப் பற்றிக் கருதுவதாக இருந்தால் இவர் ஒருவருக்கு மட்டும்தான் அந்தத் தகுதியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ் லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரவேற்பதற்காகவும் அன்பை வெளிப் படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது. என் வீட்டுக்கு நீங்கள் வரும் போது நான் எழலாம். அது போல் உங்கள் வீட்டுக்கு நான் வரும் போது நீங்கள் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

என் வீட்டுக்கு நீங்கள் வந்தால் நான் எழும் நிலையில் உங்கள் வீட்டுக்கு நான் வரும் போது நீங்கள் எழாமல் இருந்தால் நான் மரியாதைக்காகவே எழுந்ததாக ஆகும். பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம்(ஸல்) வரவேற்றுள்ளனர்.

மேடையில் அமர்ந்திருக்கும் நான் கருணாநிதி வருகிறார் என்பதற்காக எழக்கூடாது. ஏனெனில், கருணாநிதி அமர்ந்திருக்கும் மேடைக்கு நான் சென்றால் அவர் எனக்காக எழ மாட்டார். எனது வீட்டுக்கு கருணாநிதி வந்தால் நான் எழுந்து அவரை வரவேற்கலாம். ஏனெனில், அவரது வீட்டுக்கு நான் செல்லும் போது எழுந்து வரவேற்பார்.

இந்த வேறுபாட்டை கவனமாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமக்காக எழுந்து நிற்பதைக் கூட நிராகரித்த ஒரே தலைவராக நபிகள் திகழ்வதால் தான் முஸ்லிம்கள் அவரை நூறு சதவிகிதம் பின்பற்றுகின்றனர். மேடைக்கு கருணாநிதி வரும்போதே எழக்கூடாது என்பதுதான் அவரது கொள்கையாக இருந்தது. இப்போது கருணாநிதி வரும்போது எழவில்லை. அதையும் தாண்டி அவர் எழுந்த போதெல்லாம் எழுந்திருக்கிறார். கொள்கையில் தடம் புரண்டால் அனைவருமே இது போல்தான் சமரசம் செய்வார்கள் என்ற நமது கருத்து மேலும் வலுவடைகின்றது.

No comments:

Post a Comment