கஃபாவில் தொழுவது
கஃபாவில் தொழுவது மார்க்கச் சொற்பொழிவைக் கேட்பது இரண்டில் எது சிறந்தது?
நான் மக்கா நகரில் பணியில் இருக்கிறேன். வார விடுமுறையான வெள்ளிக்கிழமையில் மக்ரிபிலிருந்து இஷா வரை இஸ்லாமிய சென்டரில் மார்க்க பயான் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு வருகின்றேன். இருந்தாலும் இந்த நேரத்தில் இறை இல்லம் கஅபா சென்று தவாஃப் செய்து, மக்ரிப், இஷா தொழுதால் ஒரு லட்சம் நன்மை கிடைக்குமே என்று நினைக்கிறேன். இதில் எது சிறந்த அமல்? நன்மைகள் அதிகம் தரும் என்பதை விளக்கவும்.
மக்காவில் தொழுவது நன்மையான காரியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயத்தில் மார்க்க விளக்கங்களைக் கேட்பதற்காக நேரம் ஒதுக்குவதும் நன்மையான காரியம் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ قَالَ أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا
அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்-ரலி) ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, 'அபூ அப்துர்ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகின்றேன்' என்றார். அதற்கு, 'உங்களை சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதை விட்டும் என்னைத் தடுக்கின்றது. நான் உங்களுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கவனித்து அறிவுரை கூறுகின்றேன். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாயில்
நூல்: புகாரி 70
எந்தெந்தக் காரியத்தை எப்போது செய்ய வேண்டுமோ அப்போது தான் செய்ய வேண்டும். கஅபாவில் தொழுவதை விட, மார்க்க விளக்கத்தைக் கேட்பது சிறந்ததா? என்பது போன்ற ஒப்பீடுகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, தொழுகைக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளைக் கூறுகின்றோம். இதைவிட குர்ஆன் ஓதினால் எழுத்துக்குப் பத்து நன்மை கிடைக்குமே என்று கூறக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய முடியாது.
கஅபாவில் தொழுதால் நன்மை கிடைக்கும் என்று சொன்ன அதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் மற்ற வணக்கங்களையும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதையும் கற்றுத் தந்துள்ளார்கள்.
அப்படிப் பார்த்தால் கஅபாவில் நிரந்தரமாகத் தங்கி தொழுது கொண்டே இருக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித்தோழர்கள் அவ்வாறு செய்திக்க வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் செய்ததாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை.
எனவே கஅபாவில் தொழுவதன் சிறப்பை அந்த ஹதீஸ் கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அது மட்டும் தான் நன்மையான காரியம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
No comments:
Post a Comment