பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, July 18, 2010

பெருநாள் தொழுகைக்குப் பின்னர் ஃபித்ரா

? பெருநாள் தொழுகைக்குப் பின்னர் ஃபித்ரா கொடுக்கக்கூடாது. பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுத்துவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். ஆனால் சவூதியில் வசிக்கும் நாங்கள் எங்கள் ஃபித்ராவை தாயகம் அனுப்பி வைக் கிறோம். அவர்களுக்கு ஒருநாள் முன்னதாக எங்களுக்கு பெருநாள் வந்தால் நாங்கள் பெருநாள் தொழுத பின்னர் அதை விநியோகிக்கும் நிலை ஏற்படுமே? இதனால் எங்கள் ஃபித்ரா வீணாகிவிடாதா?




! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அனுப்பப்படும் ஃபித்ரா தொகை உடன டியாக கிளைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். ரமளான் 28, 29 ஆகிய இரு தினங்களைத் தாண்டாமல் விநியோகிக்கு மாறு அனைத்துக் கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். எனவே ஒரு நாள் முன்னதாகவே நீங்கள் பெருநாள் கொண்டாடினாலும் அதற்கு முன்பாகவே இங்கே விநியோகம் முடிந்து விடும் என்பதால் நீங்கள் குழம்பத் தேவையில்லை. மேலும் பித்ராவை விநியோகிக்கும் கமிட்டியிடம் நீங்கள் பெருநாளைக்கு முன்பே ஓப்படைத்து விட்டதுடன் உங்கள் கடமை முடிந்து விடுகிறது. அவர்கள் தாமதமாக மக்களுக்கு விநியோகம் செய்தால்கூட நீங்கள் பெருநாளுக்கு முன்பே வழங்கி விட்டதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஏழைகளுக்கு தர்மம் செய்யும் எண்ணத்தில் சில தங்கக் காசுகளை எடுத்துச் சென்ற யஸீத் (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரின் அருகில் வைத்து விட்டு வந்து விட்டார். ஆனால் அதை யஸீதின் மகன் மஅன் (ரலி) அவர்கள் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார். இதைக் கண்ட தந்தை யஸீத் ''உனக்காக நான் அதைப் பள்ளிவாசலில் வைக்கவில்லை'' என்று மகனிடம் சண்டை போட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''யஸீதே உனது எண்ணப்படி உனக்கு நன்மை கிடைத்து விடும். மஅனே நீ எடுத்ததை நீயே வைத்துக்கொள்'' என்று தீர்ப்பளித்தார்கள். (புகாரி : 1422)

ஒரு ஏழைக்கு தர்மம் செய்வதாக நினைத்து அவர் பள்ளியில் வைத்தவுடன் அதற்கான நன்மை அவருக்குக் கிடைத்து விட்டது. அதன் பின்னர் அதை பணக்காரர் எடுத்தாலும் பெற்ற மகனே எடுத்தாலும், ஒரு திருடன் எடுத்துச் சென்று விட்டாலும் அதனால் அவர்களது நன்மையில் எந்தக் குறையும் ஏற்படாது என்பதை இதிலிருந்து அறிகிறோம். எனவே ஃபித்ராவை திரட்டுவோரிடம் நீங்கள் பெருநாளுக்கு முன்பே வழங்கி விட்டார்களா என்பது தான் இறைவனால் பார்க்கப்படும். திரட்டுவோர் தாமதமாக விநியோகித்தால் அதன் காரணமாக நீங்கள் ஃபித்ரா கொடுக்கவில்லை என்று ஆகாது. ஆனாலும் தவ்ஹீத் ஜமாஅத் 29க்குள் ஃபித்ராவை வழங்கி விடும் என்ற உத்தரவாதத்தைத் தருகிறது.

No comments:

Post a Comment