பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

பெருங்கூட்டத்தை பின்பற்ற வேண்டுமா?

? பெருங்கூட்டத்தை பின்பற்றுங்கள்; எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா?



இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளதாக மிஷ்காத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்னுமாஜாவில் மேற்கண்ட கருத்தில் எந்த ஹதீசும் இல்லை. இப்னுமாஜாவில் இடம் பெறும் ஹதீஸ் இது தான்.

''என்னுடைய சமுதாயத்தினர் வழிகேட்டில் ஒன்றுபட மாட்டார்கள். நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கண்டால் பெரும் கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: இப்னு மாஜா 3940

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூகலஃப் அல் அஃமா என்பவர் பலவீனமானவர். இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார். இவரது ஹதீஸ் நிகாகரிக்கப்படும் என்று அபூஹாத்தம் கூறுகிறார்.

இதே தொடரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான வலீத் பின் முஸ்லிம் என்பவர், தனக்கு அறிவித்தவர்களில் பலவீனமான அறிவிப்பாளரை மறைத்து விட்டு அறிவிப்பவர் ஆவார்.

இப்படி இரு அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

''என்னுடைய சமுதாயத்தை அல்லது முஹம்மது நபியின் சமுதாயத்தை அல்லாஹ் வழிகேட்டில் ஒன்று சேர்த்து விட மாட்டான். அல்லாஹ்வுடைய அருள் ஜமாஅத்துடன் தான் இருக்கிறது. யார் தனித்து இருக்கிறானோ அவன் தனித்து நரகத்தில் இருப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ 2093

இந்த ஹதீஸில் இடம் பெறும் சுலைமான் அல் மதனீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீசும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

இதே கருத்தில் ஹாகிமில் இடம் பெறும் ஹதீஸை அறிவிக்கும் முஃதமர் பின் சுலைமான் என்பவர், இந்த ஹதீஸை தனக்கு யார் அறிவித்தார் என்பது குறித்து ஏழு விதமான கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

'இந்த ஹதீஸ் சரியானதாக இருந்தால் இதிலிருந்து சட்டம் எடுத்திருப்போம்' என்று இதைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்களே தெரிவித்துள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

''இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஹதீசுமே விமர்சனத்திலிருந்து தப்பவில்லை'' என்று இப்னு ஹஜர் கூறுகின்றார்கள்.

நூல்: தல்கீஸ் 3/141

பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன. மேலும் இது திருக்குர்ஆன் வசனத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

அல்குர்ஆன் 6:116

இந்த வசனம், பெரும்பான்மைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று அறிவிக்கின்றது. இதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலும் மேற்கண்ட ஹதீஸ்கள் மேலும் பலவீனம் அடைகின்றன.

மேலும் இந்த ஹதீஸ்கள் சரியானவை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் பெரும் கூட்டம் என்பதற்கு அளவு கோல் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

இன்று பெரும்பான்மையானவர்கள் வரதட்சணை வாங்குகிறார்கள்; சினிமா பார்க்கிறார்கள்; பல்வேறு தீமைகளைச் செய்கிறார்கள். இவர்களைப் பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே கருத்து அடிப்படையிலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமடைகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஹதீஸ்களில் மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. காரணம், இந்த ஹதீஸ் பெரும் கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றது. மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் கூட ஒரே மத்ஹபைப் பின்பற்றுவதில்லை. நான்கு மத்ஹபுகள் என்று கூறுகின்றார்கள். இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்த்தால் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது; ஒரே மத்ஹபை பின்பற்ற வேண்டும் என்று தான் கூற வேண்டும். எனவே மத்ஹபுகளுக்கு இந்த ஹதீஸ் எதிரானது என்று தான் கூற வேண்டும்.

--> Q/A Ehathuvam Mar 07

No comments:

Post a Comment