பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, July 24, 2010

சீர், நகை திருப்பிக் கொடுத்தாலும் ?

? எனக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றது. என் அண்ணனுக்கு என் கணவருடைய தங்கையைக் கொடுத்தார்கள். அதாவது பெண் கொடுத்து பெண் எடுத்தோம். வரதட்சணை எதுவும் வாங்கவில்லை. நகை, சீர் போன்றவற்றை இரு தரப்புமே கட்டாயப்படுத்தி கேட்காமல் அவரவர் சக்திக்குட்பட்டதைச் செய்தார்கள். சீர், நகை போன்றவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகின்றது. என் அண்ணன்கள் மூன்று பேருக்கும் திருமணமாகி தனியாக இருக்கிறார்கள். நாங்கள் பெண் கொடுத்து எடுத்திருப்பதால் திருப்பிக் கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. இந்நிலையில் நாங்கள் என்ன செய்வது?



பொதுவாக பெண் கொடுத்து பெண் எடுப்பதே ஒரு மறைமுக வரதட்சணையாகத் தான் நடைபெறுகிறது. நீ என் தங்கையைத் திருமணம் முடித்தால் நான் உன் தங்கையைத் திருமணம் முடிக்கிறேன் என்று நிபந்தனை வைத்து நடைபெறுவதால் எது நடந்தாலும் அது இரண்டு வீடுகளிலும் எதிரொலிக்கிறது. கொடுக்கல் வாங்கலிலும் இதே நிலை தான். நான் ஃபிரிட்ஜ் கொடுத்தால் நீயும் தர வேண்டும் என்ற அடிப்படை தான் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது. இதில் விதிவிலக்காக சிலர் இருக்கலாம்.

திருமணத்தின் போது நகை, சீர் போன்றவற்றை வாங்குவது மார்க்க அடிப்படையில் தவறு என்பதால் அதற்குப் பரிகாரமாகத் தான் அதைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

மார்க்க அடிப்படையில் திருப்பிக் கொடுப்பது தான் சரி எனும் போது, அதனால் பயன் இருக்குமா? இருக்காதா? என்றெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.

திருப்பிக் கொடுப்பதால் பயனில்லை என்று முடிவு செய்து கொடுக்காமல் இருப்பதை விட, அல்லாஹ்வுக்குப் பயந்து பரஸ்பரம் திருப்பிக் கொடுத்து விட்டால் செய்த தவறுக்குப் பரிகாரம் செய்து விட்டோம் என்ற நிம்மதி கிடைக்கும். இறைவனிடமும் அதற்கான கூலியைப் பெற முடியும்.

உங்களுக்கு மூன்று சகோதரர்கள் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். பரஸ்பரம் திருப்பிக் கொடுப்பதன் மூலம் உங்கள் கணவரின் தங்கையை மணமுடித்த ஒரு சகோதரரிடம் இருக்கும் நகை, சீர் போன்றவற்றை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும். அவ்வாறு கொடுக்காவிட்டால் ஒருவர் மட்டுமே அதன் மூலம் பயனடைந்து கொண்டிருப்பார்.

இரண்டு தரப்பிலும் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் அவரவர் சக்திக்கேற்ப செய்ததாகக் கூறியுள்ளீர்கள். அனைவரும் மனப்பூர்வமாக பொருந்திக் கொண்டு பரஸ்பரம் மன்னித்து விட்டால் குற்றமில்லை. எனினும் பொருளாதார விஷயத்தில் யாரும் இவ்வாறு மனப்பூர்வமாகப் பொருந்திக் கொள்வதில்லை. எனவே மறுமையில் யாரும் பிடித்து விடக் கூடாது என்பதைப் பயந்து திருப்பிக் கொடுப்பது தான் சிறந்தது.

--> Q/A Ehathuvam Mar 07

No comments:

Post a Comment