? இஸ்லாமியச் சட்டம் உள்ள இடத்தில் முஸ்லிமல்லாத ஒருவர் விபச்சாரம் செய்து பிடிபட்டால் அவருக்கு இஸ்லாமியச் சட்டப்படி தண்டனை உண்டா? இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால் நாமாக எங்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை வழங்குங்கள் என்று கேட்கலாம் அல்லவா? ஏன் தவ்ஹீத் ஜமாஅத் உட்பட யாரும் அவ்வாறு கோருவதில்லை?
இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே அமைந்துள்ளது. திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு என்றும் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்றும் தனித்தனியான சட்டத்தைக் கூறவில்லை. எனவே இஸ்லாமிய சட்டம் உள்ள நாட்டில் முஸ்லிமல்லாதவர்கள் விபச்சாரம் செய்து பிடிபட்டாலும் அவர்களுக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப் பட வேண்டும். ஹதீஸ்களிலும் இதற்கு ஆதாரம் உள்ளது.
(விபச்சாரம் செய்து விட்ட) யூத இனத்தைச் சேர்ந்த ஆணையும் பெண்ணையும், பள்ளியின் வாசலில் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)
நூல்: அஹ்மத் 2250
இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவான சட்டமாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சி அல்லாத நாடுகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை. இந்தியாவில் முஸ்லிம்களுக்குத் தனி சிவில் சட்டம் கோரும் நாம் கிரிமினல் சட்டத்தைக் கோருவதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இஸ்லாமிய சிவில் சட்டம் என்பது தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டது ஆகும். சொத்துரிமை, திருமணம் போன்ற விவகாரங்களில் தனியான சட்டம் இருப்பதால் பிற மக்களுக்கு எந்தப் பாதிப்போ, பாகுபாடோ ஏற்படப் போவதில்லை.
ஆனால் குற்றவியல் சட்டம் என்பது அவ்வாறல்ல! குற்றங்களைக் குறைப்பதற்காகவே தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
திருமணம் செய்த ஒருவன் விபச்சாரம் செய்து விட்டால் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். ஆனால் இந்தியத் தண்டனைச் சட்டப்படி ஒரு சில ஆண்டுகள் சிறையில் இருந்தால் போதுமானது. இந்தப் பாரபட்சம் சாதாரண ஒன்றல்ல! மரண தண்டனைக்கும், சாதாரண சிறைத் தண்டனைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது.
அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழக்கூடிய ஒரு நாட்டில் ஒரே குற்றத்தைச் செய்த ஒரு பிரிவினருக்கு மரண தண்டனையும் மற்றொரு பிரிவினருக்கு சாதாரண தண்டனையும் அளித்தால் அதனால் குற்றங்கள் குறைவதை விட அதிகரிக்கவே செய்யும்.
உதாரணமாக முஸ்லிம் பெண்ணுடன் முஸ்லிமல்லாத ஒருவர் விபச்சாரம் செய்து விட்டால் ஒரே குற்றத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கினால் இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தி விடும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைப் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாகி விடும்.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, ஓரளவாவது மார்க்கத்திற்கு உட்பட்டு நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். முஸ்லிமல்லாதவர்கள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, மறுமையைப் பயந்து, மார்க்கத்திற்கு உட்பட்டு நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால் இந்தச் சட்டங்களை ஆட்சியாளர்கள் தவறாகக் கையாளும் நிலை ஏற்படும்.
முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டுத் துன்புறுத்தும் நிலையைப் பல்வேறு சமயங்களில், பல்வேறு ஆட்சிகளில் நாம் அனுபவித்து உள்ளோம். இது கடுமை குறைந்த இந்தியத் தண்டனைச் சட்டம் என்பதால் இதன் பாதிப்பு அவ்வளவாகத் தெரியவில்லை. பொய் வழக்குப் போட்டு, இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு சாதாரணமாக இருக்காது.
முஸ்லிம்களைக் கருவருக்க நினைக்கும் மோடி போன்ற ஆட்சியாளர்கள் அதற்குக் கருவியாக இஸ்லாமியச் சட்டங்களையே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விடும்.
இது போன்ற பல்வேறு காரணங்களால் தான் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நமக்கு வழங்க வேண்டும் என்று நாம் கோருவதில்லை.
-> Q/A Ehathuvam July 06
No comments:
Post a Comment