? நான் தொழ ஆரம்பித்தால் எனக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தால் ஆடையில் பட்டிருக்குமோ என்ற சந்தேகம். தண்ணீர் பட்டாலும் அது சிறுநீராக இருக்குமோ என்ற சந்தேகம். தூங்கி எழுந்தால் விந்து வெளியாகி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதனால் தொழ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் இக்குழப்பத்தால் தொழ முடியாமல் போகின்றது. இதற்கு என்ன செய்வது?
''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர் மீது தொழுகை கட்டாயக் கடமையாகி விடுகின்றது. இந்தத் தொழுகையை எக்காரணத்தைக் கூறியும் விடுவதற்கு அனுமதியில்லை.
எனக்கு மூல வியாதி இருந்தது. ''எவ்வாறு தொழுவது?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீ நின்று தொழ இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல் : புகாரி
நோயாளியாக இருந்தால் படுத்தாவது தொழ வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. எனவே ஆடையில் சிறுநீர் பட்டிருக்குமோ, தூக்கத்தில் ஸ்கலிதம் ஆகியிருக்குமோ என்பது போன்ற தேவையற்ற சந்தேகங்களைக் காரணம் காட்டித் தொழுகையை விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகின்றது என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 137, 177, 2056
தொழுது கொண்டிருக்கும் போது இது போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டால் கூட திட்டவட்டமாகத் தெரியாமல் வீண் சந்தேகத்தின் அடிப்படையில் தொழுகையை முறிக்கக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
சிறுநீர் ஆடையில் பட்டது உறுதியாகத் தெரிந்தால் அதைக் கழுவி விட்டுத் தொழ வேண்டும்.
சிலருக்குத் தூக்கத்தின் போது விந்து வெளிப்படுவதுண்டு. சில நேரங்களில் விந்து வெளிப்படுவது போன்ற கனவுகள் ஏற்படும். ஆனால் விழித்துப் பார்த்தால் விந்து வெளிப் பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது.
விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். குளித்து விட்டுத் தொழ வேண்டும்.
விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.
''அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசுவதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?'' என்று உம்மு சுலைம் (ரலி) என்ற பெண்மணி கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''விந்து வெளிப்பட்டதை அவள் கண்டால் குளிப்பது அவசியம்'' என்று விடை அளித்தார்கள். இதைக் கேட்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ''பெண்களுக்கும் விந்து வெளிப்படுமா?'' என்று கேட்டு விட்டுச் சிரித்தார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''சில நேரங்களில் தாயைப் போல் குழந்தை எப்படிப் பிறக்கின்றது?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: புகாரி 3328, 130, 282, 6091, 6121
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு அருகில் நான் வசித்தேன். அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே வந்த போது, ''அல்லாஹ்வின் தூதரே! தன் கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வது போல் ஒரு பெண் கனவு கண்டால் அவள் குளிக்க வேண்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''விந்து வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்'' என்று விடை அளித்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி)
நூல்: அஹ்மத் 25869
கனவிலோ. விழிப்பிலோ விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பது கடமை என்பதையும், விந்து வெளிப்படுவது போல் தோன்றினால் குளிப்பது கடமையில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
குளிப்பு கடமையானால் குளித்து விட்டுத் தொழ வேண்டுமே தவிர அதைக் காரணம் காட்டித் தொழாமல் இருக்கக் கூடாது.
எதையெடுத்தாலும் சந்தேகம் ஏற்படுவதாகக் கூறியுள்ளீர்கள். இது போன்ற மனக் குழப்பங்கள் ஷைத்தானால் ஏற்படுவதாகும். இதிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையின் 114வது அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது போன்ற மனக் குழப்பங்கள் ஏற்படும் போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 3276)
--> Q/A Ehathuvam Jan 07
No comments:
Post a Comment