பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?
பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத் வேண்டும் என்ற ஹதீஸ் பலவீனமானதா?
பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒரு அறிஞர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.
பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும் என்று ஸஹீஹ் முஸ்லிம் நூலில் பின் வரும் ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
صحيح مسلم – (ج 2 / ص 4)
875 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِىُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்பவரின் தொழுகை அழைப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது ஸலவாத்’ சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை ஸலவாத்’ சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலா’வைக் கேளுங்கள். வஸீலா’ என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 577
இந்த ஹதீஸ் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ்களில் நீங்கள் குறிப்பிடுவது போல் அனைத்து நூல்களிலும் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளர் தான் இடம் பெறுகிறார்.
இவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. இவரைப் பற்றி எந்த ஹதீஸ் கலை அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இப்னு ஹிப்பான் மட்டுமே இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். எனவே இது ஏற்கப்படாது என்பது நீங்கள் குறிப்பிடும் அறிஞரின் வாதம்.
ஒருவரை இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்கக் கூடாது என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இது பற்றி ஜகாத் என்ற நூலில் நாமே பின் வருமாறு தெளிவுபடுத்தியுள்ளோம்.
அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.
இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை ஒருவரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.
எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று அறியப்படாதவராகவும் இருக்கலாம்.
இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, ‘நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்’ என்று கூறுவார். இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்’ என்பதே இதன் பொருளாகும்.
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை
இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.
இதே அடிப்படையில் கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளரைப் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும், இவர் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்’ என்று தஹபீ கூறியுள்ளதாலும், இதைத் தவிர வேறு யாரும் இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாததாலும், பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லும் ஹதீஸ் பலவீனமானது என்று கூற வேண்டியது தானே என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
கஅப் பின் அல்கமா குறித்து இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று சான்றளித்திருந்து, வேறு யாரும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்றால் அவர் யாரென்று அறியப்படாதவர் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
ஆனால் கஅப் பின் அல்கமா அவர்கள் யாரென அறியப்படாதவர் அல்ல. மாறாக அவர் அறியப்பட்டவர் தான். ஹதீஸ் கலையின் சரியான விதியை அறியாததால் சிலர் இவ்வாறு வாதிடுகின்றனர்.
ஒரு அறிவிப்பாளர் குறித்து யாரென அறியப்படாதவர் என்று ஒரு அறிஞரோ பல அறிஞரோ கூறினால் அவர் அறியப்படாதவர் என்ற முடிவுக்கு உடனே வரக் கூடாது. மற்ற அறிஞர்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கிறார்களா என்று நாம் தேடிப் பார்க்க வேண்டும். தகுதி மிக்க அறிஞர்கள் அவரைப் பற்றி அறிந்துள்ளார்கள் என்ற ஆதாரம் கிடைத்தால் யாரென அறியப்படாதவர் என்ற விமர்சனத்தைத் தள்ளிவிட வேண்டும். ஒரு நபரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாததால் அனைவருக்கும் அவரைப் பற்றித் தெரியாது என்று கூற முடியாது.
இவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும்; இவர் நம்பகமானவர்; நல்லவர்; ஏற்கத்தக்கவர் என்று வேறு சில அறிஞர்கள் கூறினால் அவர் அறியப்பட்டவராகி விடுவார். இதைப் பரவலாக அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.
ஒருவரைப் பற்றி நேரடியாக இவ்வாறு கூறாமல் மறைமுகமாகவும் கூறப்படுவதுண்டு. இரண்டுமே சமமானவை தான். ஆனால் மறைமுகமாக இவ்வாறு கூறுவது பற்றி அதிகமானோர் அறிந்து வைத்திருக்கவில்லை.
மறைமுகமாக நற்சான்று அளிப்பது என்றால் என்ன? இது இரு வகையில் அமையும்.
1- ஒரு அறிவிப்பாளர் பற்றி யாரென அறியப்படாதவர் என்று சில அறிஞர்கள் கூறி இருக்கும் போது நம்பகமான இரண்டு அறிவிப்பாளர்கள் அவர் வழியாக ஹதீஸ்களை அறிவித்தால் அவரை அந்த இரண்டு பேரும் அறிந்திருக்கிறார்கள் என்பது பொருள். யாரென அறியப்படாதவர் என்ற குறை இதனால் நீங்கி விடும்.
2- ஹதீஸ்களைப் பதிவு செய்யும் அறிஞர்கள் இரண்டு வகையினராக உள்ளனர். தமது ஆசிரியர் வழியாகக் கிடைக்கும் அனைத்தையும் பதிவு செய்பவர்கள் அவர்களில் முதல் வகையினராவர். இவர்கள் த்மது ஆசிரியர் எத்தனை அறிவிப்பாளர்கள் பெயரைக் கூறி அவர்கள் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களின் வரலாறையோ நம்பகத்தன்மையையோ ஆராயாமல் அப்படியே பதிவு செய்து விடுவார்கள்.
தமது ஆசிரியர் கூறும் எந்த அறிவிப்பாக இருந்தாலும் அதில் இடம் பெறும் ஒவ்வொரு அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையையும் உறுதி செய்யாமல் பதிவு செய்வதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டு பதிவு செய்வோர் இரண்டாம் வகையினர். அறிவிப்பாளர்களில் யாரெனத் தெரியாதவர்கள் அல்லது பலவீனமானவர்கள் இடம் பெற்றால் அந்த ஹதீஸைத் தமது நூலில் இவர்கள் பதிவு செய்ய மாட்டார்கள். புகாரி, முஸ்லிம் ஆகியோர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
யாரென அறியப்படாதவர் என்று விமர்சிக்கப்பட்ட ஒருவரின் ஹதீஸை இந்த அறிஞர்கள் தமது நூலில் பதிவு செய்திருந்தால் அந்த அறிவிப்பாளரை இவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது பொருள்.
இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
قواعد التحديث من فنون مصطلح الحديث – (ج 1 / ص 155)
6- الناقلون المجهولون
قال الخطيب البغدادي ((المجهول عند أهل الحديث هل كل من لم يشتهر بطلب العلم في نفسه ولا عرفه العلماء ومن لم يعرف حديثه إلا من جهة راو واحد وأقل ما يرتفع به الجهالة أن يروي عنه اثنان فصاعدا من المشهورين بالعلم إلا أنه لا يثبت له حكم العدالة بروايتهما عنه)) وقال الدار قطني ((تثبت العدالة برواية
تدريب الراوي في شرح تقريب النواوي – السيوطي – (ج 1 / ص 317)
( ثم من روى عنه عدلان عيناه ارتفعت جهالة عينه قال الخطيب ) في الكفاية وغيرها ( المجهول عند أهل الحديث من لم تعرفه العلماء ) ولم يشتهر بطلب العلم في نفسه ( ولا يعرف حديثه إلا من جهة ) راو ( واحد وأقل ما يرفع الجهالة ) عنه ( رواية اثنين مشهورين ) فأكثر
ஹதீஸ்கலையில் அறியப்படாதவர் யாரென்றால் யார் கல்வியைத் தேடுபவர் என்று பிரபலமாகவில்லையோ அறிஞர்களும் யாரை அறிந்திருக்கவில்லையோ, ஒரே ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அவர் வழியாக அறிவிக்கிறாரோ அவர் தான். யாரென அறியப்படாதவர் என்ற குறையை நீக்கும் குறைந்த பட்ச அளவு பிரபலமான இருவர் அவர் வழியாக அறிவிப்பதாகும். ஆனால் இதனால் அவரது நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாது என்று கதீப் அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது யாரென அறியப்படாதவர் என்ற குறை மட்டும் தான் இதனால் நீங்கும். அவரது நம்பகத் தன்மையை தனியாக நிரூபிக்க வேண்டும்.
المقنع – ابن الملقن – (ج 1 / ص 258)
وثالثهما مجهول العين
قال الخطيب والمجهول عند المحدثين من لم يعرفه العلماء ولا عرف حديثه إلا من جهة راو واحد مثل عمرو ذي مر وجبار الطائي وسعيد بن ذي حدان لم يرو عنهم غير أبي إسحاق السبيعي ومثل الهزهاز بن ميزن لا يروي عنه غير الشعبي ومثل جري بن كليب لم يرو عنه إلا قتادة
யாரைப் பற்றி உலமாகக்கள் அறிந்திருக்கவில்லையோ, ஒரே ஒரு அறிவிப்பாளர் மட்டும் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர் தான் யாரென அறியப்படாதவர். உதாரணமாக அம்ரு தீ மிர், ஜப்பார் தாயீ, சயீத் பின் தீ ஹதான் இவர்கள் மூவர் வழியாக அபூ இஸ்ஹாக் என்பவர் மட்டுமே அறிவிக்கிறார். ஹஸ்ஹாஸ் பின் மீஸன் என்பவர் வழியாக ஷஅபி மட்டுமே அறிவிக்கிறார். ஜரீ பின் குலைப் வழியாக கதாதா மட்டுமே அறிவிக்கிறார். எனவே இவர்கள் யாரென அறியப்படாதவர்கள் என்று கதீப் கூறுகிறார்.
இது முதல் வகைக்குரிய ஆதாரமாகும்.
மேற்கண்ட கஅப் பின் அல்கமா என்ற அறிவிப்பாளர் வழியாக ஒரே ஒரு நம்பகமான அறிவிப்பாளர் மட்டும் அறிவித்திருந்தால் தான் யாரென அறியப்படாதவர் என்ற வட்டத்தில் அவர் அடங்குவார். ஆனால் கஅப் பின் அல்கமா வழியாக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஒருவர் மட்டும் அறிவிக்கவில்லை. பல அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
تهذيب الكمال للمزي – (ج 24 / ص 183)
4976 – بخ م د ت س: كعب (3) بن علقمة بن كعب بن عدي التنوخي، أبو عبد الحميد المصري، وجده كعب بن عدي معدود في الصحابة. رأى عبدالله بن الحارث بن جزء الزبيدي. روى عن: بلال بن عبدالله بن عمر (م)، ودخين الحجري، وسالم أبي النضر (س)، وسعد بن مسعود الصدفي، وسعيد بن المسيب، وعبد الله بن زرير الغافقي، وأبي تميم عبدالله بن مالك الجيشاني، وعبد الرحمان بن جبير المصري (م د ت س)، وعبد الرحمان بن شماسة (م دس)، وعبد العزيز بن مروان بن الحكم، وعياض بن عبدالله بن سعد بن أبي سرح، وعيسى بن هلال الصدفي (قد)، وغرفة بن الحارث الكندي، وكثير أبي الهيثم (بخ د س) مولى عقبة بن عامر الجهني، وأبي الخير مرثد بن عبدالله اليزني (د ت)، وناعم مولى أم سلمة، وأبي عبد الرحمان الفهري.
روى عنه: إبراهيم بن نشيط الوعلاني (بخ دس)، وبكير بن عبدالله الاشج، وحرملة بن عمران التجيبي، وحيوة بن شريح (م د ت س)، وسعيد بن أبي أيوب (م د)، وأبو السحماء سهيل بن حسن الكلبي، وعبد الله بن سليمان الطويل، وعبد الله بن لهيعة (د)، وعمروبن الحارث (م س)، والليث بن سعد، ومحمد بن يزيد بن أبي زياد (دت) مولى المغيرة بن شعبة، ويحيى بن أيوب (د).
ذكره ابن حبان في كتاب الثقات (1) . وقال أبو سعيد بن يونس: توفي سنة سبع وعشرين ومئة فيما يقال. وقال يحيى بن بكير: مات سنة ثلاثين ومئة (2). روى له البخاري في الادب ، والباقون سوى ابن ماجة.
கஅப் பின் அல்கமா வழியாக
1. இப்ராஹீம் பின் நஷீத் அல்வஃலானீ
2. புகைர் பின் அப்துல்லாஹ் அல் அஷஜ்
3. ஹர்மலா பின் இம்ரான் அத்தஜீபீ
4. ஹைவா பின் ஷுரைஹ்
5. ஸயீத் பின் அபீ அய்யூப்
6. அபுஸ் ஸஹ்மா எனும் ஸுஹைல் பின் ஹஸன்
7. அப்துல்லாஹ் பின் சுலைமான் அத்தவீல்
8.அப்துல்லாஹ் பின் லஹீஆ
9. அம்ரு பின் அல் ஹாரிஸ்
10. லைஸ் பின் சஅத்
11. முஹம்மத் பின் யஸீத் பின் அபீ ஸியாத்
12. யஹ்யா பின் அய்யூப்
ஆகிய பன்னிரண்டு பேர் அவரை அறிந்திருப்பதால் தான் அவர் கூறியதாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இந்தப் பன்னிரண்டு பேரில் அடிக்கோடிட்ட ஆறு நபர்கள் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்கள். பெரிய அறிஞர்கள். நம்பகமான ஆறு பேர் கஅப் பின் அல்கமா அவர்களிடம் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். எனவே அவர் யாரென அறியப்படாதவர் என்ற விமர்சனம் முற்றிலும் தவறாகும்.
மறைமுகமான நற்சான்றில் இன்னொரு வகைக்குரிய ஆதாரத்தைக் காண்போம்.
منهج الإمام البخاري – (ج 1 / ص 73)
محمد بن الحسن المروزي
من شيوخ البخاري لم يعرفه أبو حاتم فقال : إنه مجهول. قال الحافظ : قد عرفه البخاري وروى عنه في صحيحه في موضعين. وعرفه ابن حبان فذكره في الطبقة الرابعة من الثقات (276).
புஹாரியின் ஆசிரியரான முஹம்மத் பின் அல்ஹஸன் அல்மரூஸி அவர்கள் யாரென அறியப்படாதவர் என்று அபூ ஹாத்தம் கூறுகிறார். ஆனால் அவரை புஹாரி இமாம் அறிந்து இரண்டு இரண்டு இடங்களில் அவரது ஹதீஸைப் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்
تلخيص الحبير – ابن حجر – (ج 3 / ص 5)
وزعم عبد الحق أن عبد الله بن عصمة ضعيف جدا ولم يتعقبه بن القطان بل نقل عن بن حزم أنه قال هو مجهول وهو جرح مردود فقد روى عنه ثلاثة واحتج به النسائي
அப்துல்லாஹ் பின் அஸமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று கூறுகிறார். அது நிராகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் வழியாக மூன்று பேர் அறிவித்துள்ளனர். மேலும் நஸயீ அவர்கள் இவர் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.
تلخيص الحبير – ابن حجر – (ج 4 / ص 137)
وأعله بن الجوزي بمعقل بن عبيد الله فزعم أنه مجهول فأخطأ بل هو ثقة من رجال مسلم
மஃகில் பின் உபைதில்லாஹ் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுகிறார். அவர் தவறாகக் கூறிவிட்டார். இவர் முஸ்லிம் நூலின் அறிவிப்பாளரும் நம்பகமானவருமாவார் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்
تهذيب التهذيب – ابن حجر – (ج 1 / ص 76)
152 – س النسائي أحمد بن نفيل السكوني الكوفي روى عن حفص بن غياث وعنه النسائي وقال لا بأس به قال المزي ذكره أبن عساكر ولم أقف على روايته عنه وقال الذهبي مجهول قلت بل هو معروف يكفيه رواية النسائي عنه
அஹ்மத் பின் நுஃபைல் யாரென அறியப்படாதவர் என்று தஹபீ கூறுகிறார். இல்லை அவர் நம்பக்மானவர் தான். அவர் வழியாக நஸயீ அறிவித்திருப்பதே போதுமானதாகும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.
எனவே நம்பகமான ஆறு அறிவிப்பாளர்கள் இவர் வழியாக அறிவித்திருப்பதால கஅப் பின் அல்கமா யாரென அறியப்பட்டவர் என்பது உறுதியாகிறது. இமாம் முஸ்லிம் அவர்கள் நம்பகமானவர் என்பதை உறுதி செய்யாமல் எவரது ஹதீஸையும் தனது முஸ்லிம் என்ற நூலில் பதிவு செய்யமாட்டார் என்பதாலும், கஅப் பின் அல்கமாவின் நம்பகத் தன்மைக்கு எதிராக ஒருவரும் கருத்து கூறாததாலும் இவர் நம்பகமானவர் என்பதும் உறுதியாகிறது.
ثمرات النظر في علم الأثر الصنعاني – (ج 1 / ص 120)
وبه يعلم أن قول الحافظ ابن حجر إن شرط الصحيح أن يكون رواية معروفا بالعدالة فمن زعم أن أحدا منهم أي ممن في الصحيحين مجهول العدالة فكأنه نازع المصنف أيضا في دعواه أنه معروف ولا شك أن المدعي لمعرفته مقدم على من يدعي عدم معرفته لما مع المثبت من زيادة العلم انتهى
هذا مسلم في هذا النوع لكن كيف يتم فيمن عرف بعدم العدالة كعمران بن حطان من رجال البخاري ومروان من رجالهما لما عرفت من اعتماد مالك على مروان واعتماد الشيخين على مالك
புஹாரி மற்றும் முஸ்லிம் அறிவிப்பாளர்களில் நேர்மை நிரூபிக்கப்படாத அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்று யாரேனும் வாதிட்டால் எங்கள் நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து அறிவிப்பாளர்கள் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் கூறுவதை மறுத்தவராகிறார். தெரியும் என்று சம்மந்தப்பட்டவர்கள் கூறுவது தான் ஏற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என ஹாஃபிள் இப்னு ஹஜர் கூறுகிறார்.
تقريب التهذيب : ابن حجر – (ج 2 / ص 461)
5644- كعب ابن علقمة ابن كعب المصري التنوخي أبو عبد الحميد صدوق من الخامسة مات سنة سبع وعشرين وقيل بعدها بخ م د ت س
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இவரைப் பற்றி உண்மையாளர் என்று கூறுகிறார்.
புகாரி, முஸ்லிம் ஆகிய இமாம்களைப் பொறுத்த வரை, ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸைத் தமது நூற்களில் இடம் பெறச் செய்வதாக இருந்தால் அந்த அறிவிப்பாளர் அறியப்பட்டவராக இருந்து, அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பதிவு செய்வார்கள்.
கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார் என்றால் அவர் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.
புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பாளர் குறித்து, மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாகக் குறை கூறினால் மட்டுமே அந்த அறிவிப்பாளர் பலவீனமானவராகக் கருதப்படுவார். அவ்வாறின்றி, அந்த அறிவிப்பாளர் குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை என்றால் அந்த அறிவிப்பாளர் யாரென்று அறியப்பட்டவராகவும் நம்பகமானவராகவுமே கருதப்படுவார். இது ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விதியாகும்.
கஅப் பின் அல்கமா அறிவிக்கும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளதால் கஅப் பின் அல்கமா நம்பகமானவர் என்பதை முஸ்லிம் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இப்னு ஹிப்பான், தஹபீ ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் கஅப் பின் அல்கமாவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்ற வாதம் தவறாகும்.
கஅப் பின் அல்கமா குறித்து மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் யாரும் குறை கூறாததால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே அவர் அறிவிக்கும் பாங்குக்குப் பின் ஸலவாத் கூறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
08.11.2009. 12:34
No comments:
Post a Comment