பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

குர்ஆனை தூய்மையின்றி தொடலாமா? ஓதலாமா?

குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?



உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்று இறைவன் அக்குர்ஆனிலேயே பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். மறுமை வெற்றி திருக்குர்ஆன் வழியில் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அறிவுள்ள எவரும் அறிவர். இந்த உண்மையை முஸ்­ம் சமுதாயத்தினரும் உணர்ந்துள்ளனர். திருக்குர்ஆனைப் பற்றிப் பேசும் போது இந்த உண்மையை வெளிப்படுத்துவர். ஆனால் மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனி­ருந்து மக்களை அந்நியப்படுத்தும் பல சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

திருக்குர்ஆனைத் தொடுவதற்கு உளூ அவசியம்! குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், இஸ்லாத்தை ஏற்காதவர்கள் போன்றோர் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது; தொடுவது ஹராம் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, திருக்குர்ஆனின் பக்கம் மக்கள் செல்வதைத் தடுத்து வருகின்றனர். இவ்வாறு தடுப்பதற்கு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் ஆதாரம் உள்ளதா? என்று வினவினால் அதற்கு சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்களின் தரம் என்ன? இவற்றை ஏற்கலாமா? என்பதைக் காண்போம்.

திருக்குர்ஆனை உளூவின்றி தொடக் கூடாது என்பதற்கு, திருக்குர்ஆனி­ருந்தே ஒரு சான்றை எடுத்து வைக்கின்றனர். அதைக் காண்போம்!

 அரபி 1

தூய்மையானவர்கள் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். (அல்குர்ஆன் 56:79)

உளூவின்றி திருக்குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை எடுத்து வைக்கின்றனர். பல திருக்குர்ஆன் பிரதிகளின் அட்டை முகப்பிலும் இவ்வசனம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப் படுகின்றது.

இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், ஆம்! திருக்குர்ஆனை உளூவின்றி, தூய்மையின்றி தொடக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள். ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது எப்போது இறங்கியது என்பதையும் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘தூய்மையானவர்கள்’ என்றால் யார்? தொடமாட்டார்கள் என்றால் எதை? என்பதை முத­ல் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒ­ வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முத­ல் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது.

தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப் பட்டிருந்தால் மட்டும் தான் ‘இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள்’ என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56:79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப் பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். (அல்குர்ஆன் 56:77லி79)

56:79 வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களை நீங்கள் படிக்கும் போது ஓர் பேருண்மை உங்களுக்கு விளங்கும்.

‘இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கின்ற மதிப்பு மிக்க திருக்குர்ஆன்’ என்று கூறுகின்றான். அடுத்த வசனத்தில் ‘தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்’ என்று கூறுகின்றான்.

இப்போது ‘அதை’ என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப் பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூ­ல்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற பேருண்மை தெளிவாகின்றது.

இக்கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் 80ம் அத்தியாயம் 11லி16 வசனங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை! விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப் படுத்தப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கையில் உள்ளது. (அல்குர்ஆன் 80:11லி16)

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப் பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56:79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56:79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

‘தூய்மையானவர்கள்’ என்று 56:79 வசனத்தில் கூறப்பட்டுள்ளவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் வானவர்கள் தாம் என்பது இவ்வசனத்தி­ருந்து அறிய முடிகின்றது.

இமாம் மா­க் அவர்களும் 56:79 வசனம் தொடர்பாக தமது முஅத்தா என்ற நூ­ல் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

”தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்” என்ற வசனம் தொடர்பாக நான் செவியேற்றதில் மிகவும் அழகானது, இவ்வசனம் ”அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை! விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப் படுத்தப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கையில் உள்ளது. (80:11லி16) என்ற ‘அபஸ வதவல்லா’ எனும் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தின் இடத்தில் இருப்பது என்பது தான்.

அடுத்து இந்த 56:79 வசனம் எப்போது இறங்கியது என்பதைக் கவனித்தால் இவ்வசனத்தின் பொருள் இன்னும் தெளிவாக விளங்கும்.

குறைஷிக் குல நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றன என்று எண்ணிய போது அல்லாஹுத் தஆலா, ”தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்” என்று அறிவித்தான்.

”இதை ஷைத்தான்கள் இறக்கவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப் பட்டவராவர்” (அல்குர்ஆன் 26:210லி212) என்ற வசனமும் இதைப் போன்று தான் அமைந்துள்ளது என்று இப்னு ஜைத் குறிப்பிடுகின்றார். இக்கருத்து வ­மை வாய்ந்ததாகும் என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது குர்ஆன் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: தஃப்ஸீர் இப்னுகஸீர், பாகம்: 4, பக்கம்: 299)

‘ஒரு குர்ஆன் வசனத்தை இன்னொரு குர்ஆன் வசனம் தெளிவு படுத்தும்’ என்ற அடிப்படையில் 56:77 வசனம் எதற்காக இறங்கியது என்பதை 26:210லி212 வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்தக் குர்ஆன் ஷைத்தான்கள் கொண்டு வந்தது என்று இணை வைப்பவர்கள் குற்றம் சாட்டிய போது தான், ‘இக்குர்ஆன் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற) பாதுகாக்கப் பட்ட ஏட்டில் இருக்கின்றது. இதைத் தூய்மையான வானவர்களைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. அவ்வாறிருக்க ஷைத்தான் எவ்வாறு கொண்டு வர முடியும்? என்று அல்லாஹ் கேட்கின்றான்.

இந்தப் பின்னணியைப் பார்க்கும் போது, தூய்மையானவர்கள் என்பது நம்மைக் குறிப்பது அல்ல! அது வானவர்களைக் குறிக்கின்றது என்றும், ‘அதை’ என்பது, நம் கையில் உள்ள குர்ஆனைக் குறிப்பது அல்ல! அது விண்ணுலகில் உள்ளது என்பதும் தெளிவாக விளங்குகின்றது.

‘தூய்மையானவர்கள்’ என்பது வானவர்களையும், ‘குர்ஆன்’ என்பது வானத்தில் உள்ள குர்ஆனையும் தான் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ர­) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

”அதைத் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) தொட மாட்டார்கள்” என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள தொடுதல் என்பது வானத்தில் உள்ள வேதமாகும் என்று இப்னு அப்பாஸ் (ர­) குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: தஃப்ஸீர் தப்ரீ, பாகம்: 27, பக்கம்: 205)

”தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) தொட மாட்டார்கள்” அதாவது வானவர்கள் என்று இப்னு அப்பாஸ் (ர­) கூறினார்கள்.

(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 299)

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, 56:79 வசனத்தில் கூறப்பட்ட ‘தூய்மையானவர்கள்’ என்பது வானவர்கள் என்பதும், ‘அதை’ என்று கூறப்பட்டுள்ளது, வானத்தில் பாதுகாக்கப் பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே 56:79 வசனத்தை வைத்துக் கொண்டு, தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக் கூடாது என்பதற்கு 56:79 வசனத்தை சான்றாக எடுத்துக் காட்டியதையும் அவ்வசனத்தில் கூறப்பட்ட வாசகம் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைக் குறிக்கவில்லை என்பதையும் நாம் சென்ற இதழில் தெளிவாகப் பார்த்தோம். இப்போது மேலும் சில விளக்கங்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடலாம் என்பதற்கு திருக்குர்ஆனுடைய பல வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன. இவ்வேதம் யாருக்காக அருளப்பட்டது? அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்தால் கூட திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக் கூடாது என்று கூற மாட்டார்கள்.

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (அல்குர்ஆன் 10:57)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (அல்குர்ஆன் 2:185)

இவை போன்ற இன்னும் ஏராளமான வசனங்கள் மனித சமுதாயம் அனைவருக்கும் இந்தத் திருக்குர்ஆன் நேர்வழிகாட்டியாகத் திகழ்கின்றது என்பதைக் கூறுகின்றன. அல்லாஹ்வை ஏற்காதவன், இணை வைப்பவன் என்று எல்லா தரப்பு மக்களுக்கும் இக்குர்ஆன் நேர்வழி காட்டும் என்று கூறும் போது உளூச் செய்யாமல் இதைத் தொடக் கூடாது என்றால் அவர்கள் எவ்வாறு இக்குர்ஆனைப் படிப்பார்கள்? எப்படித் திருந்துவார்கள்?

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17, 22, 32, 40)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)

இக்குர்ஆனை அனைவரும் எடுத்துப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் மிக எளிமையாக ஆக்கி வைத்துள்ளான். மேலும் இதை நன்றாக ஆய்வு செய்து பார்க்குமாறும் இதில் முரண்பாடுகள் உள்ளனவா? என்றும் மனித சமுதாயம் அனைவரிடமும் அல்லாஹ் கேட்கின்றான்.

மனித இனம் அனைவரும் இதைப் படிக்க வேண்டும் என்று இவ்வளவு தெளிவாக அல்லாஹ் கூறிய பிறகும் குர்ஆனைத் தொட உளூ அவசியம் என்று கூறி மாற்று மதத்தவர் மற்றும் ஆய்வு செய்ய எண்ணுபவர்களைத் தடை செய்வது இறைக் கட்டளையை மறுப்பதாக ஆகாதா?

நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை மாற்று மதத்தவர்களுக்கு எழுதி அனுப்பியுள்ளார்கள்.

”வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ”நாங்கள் முஸ்­ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்!

என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்கு­சுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள். (பார்க்க புகாரி எண் 7 மற்றும் 4553)

மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள். தூய்மையற்றவர்கள் தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்கு­ஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.

நாம் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் இவற்றைப் பார்க்கும் போது திருக்குர்ஆனை எவரும் எந்நிலையிலும் தொடலாம் என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஆனால் தூய்மையின்றி திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுபவர்கள் 56:79 வசனத்துடன் சேர்த்து வேறு சில நபிமொழிகளையும் சான்றாகக் கூறுகின்றார்கள். அவை எவை? அவற்றின் தரம் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்ற கருத்தில் அம்ர் பின் ஹஸ்ம் (ர­), இப்னு உமர் (ர­), உஸ்மான் பின் அபில் ஆஸ் (ர­), ஸவ்பான் (ர­), அனஸ் (ர­), ஹகீம் பின் ஹிஷாம் (ர­) ஆகிய ஆறு பேர்கள் மூலம் சில செய்திகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதன் முழு விபரத்தைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ர­) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்று எழுதியிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீபக்ர், நூல் : முஅத்தா 419

இதே செய்தி அபூதாவூத் அவர்களின் அல்மாரஸீல் என்ற நூ­லும், தாரகுத்னீயிலும், தப்ரானீ மற்றும் பல நூற்களிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெறும் இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசை கொண்ட செய்தி அல்ல! இதில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். இச்செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் தாபியீ ஆவார். இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல! இவ்வாறிருக்க அவர் நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் ஹஸ்ம் (ர­)க்கு எழுதிய கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்க முடியாது. அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஒன்றோ அல்லது பல அறிவிப்பாளர்களோ விடுபட்டிருக்க வேண்டும். எனவே இவ்வகை செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் விடுபட்டவர்களில் பொய்யர்கள், பலவீனர்கள் இருக்கக் கூடும் என்பதால் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு தாபியீ, நபி (ஸல்) அவர்கள் தொடர்புடைய செய்தியை அறிவித்தால் அச்செய்திக்கு முர்ஸல் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர். எனவே தான் இமாம் அபூதாவூத் அவர்கள் தமது மராஸீல் (முர்ஸலான செய்திகள்) என்ற நூ­ல் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். எனவே இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு சட்டம் கூற முடியாது.

இதே செய்தி சில நூற்களில் கூடுதலாக இரண்டு அறிவிப்பாளர்கள் இடம் பெற்று தொடர்பு முழுமை பெற்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும் இச்செய்தியும் பலவீனமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் வாரிசுரிமைச் சட்டம், சில வழிமுறைகள், இழப்பீடு சட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன் ‘தூய்மையானவர்களைத் தவிர குர்ஆனைத் தொடக் கூடாது’ என்றும் எழுதப் பட்டிருந்தது.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஹஸ்ம் (ர­), நூல் : ஷுஅபுல் ஈமான் (பைஹகீ)

இதே செய்தி தாரமீ, தாரகுத்னீ ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் சுலைமான் பின் தாவூத் அல்கவ்லானீ என்பவர் இடம் பெறுகின்றார்.

ஸுஹ்ரியிடமிருந்து இவரும், இவரிடமிருந்து யஹ்யா பின் ஹம்சாவும் அறிவிக்கும் இந்த சுலைமான் பின் தாவூத் என்பவரைப் பற்றி யஹ்யா பின் முயீனிடம் கேட்கப்பட்ட போது, ‘இவர் ஒரு பொருட்டாகவே கருதப்பட மாட்டார்’ என்று கூறினார்கள்.

(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 4, பக்கம்: 110)

(தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற முர்ஸலான) இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமானது அல்ல. (நூல்: அல்மராஸீல், பாகம் 1, பக்கம் 122)

எனவே அம்ர் பின் ஹஸ்ம் (ர­) வழியாக அறிவிக்கப் படுவதில் முர்ஸல் என்ற தரத்தில் அறிவிக்கப் படுவதே சரியானதாகும். இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்று வாதிட முடியாது.

தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­), நூல் : தப்ரானீ ஸகீர் லி கபீர், தாரகுத்னீ

இச்செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை. இதில் சுலைமான் பின் மூஸா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

சுலைமான் பின் மூஸா என்பவர் ஹதீஸ் துறையில் பலமானவர் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 49)

இவரிடத்தில் பல மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று இமாம் புகாரி குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் 1, பக்கம் 35)

சுலைமான் பின் மூஸா என்பவரைப் பற்றி குறை கூறப்பட்டுள்ளது என்று அலீ இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவுல் உகைலீ, பாகம் 2, பக்கம் 140)

சுலைமான் பின் மூஸா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப் பட்டவர் இவரிடமிருந்து நான் எதையும் அறிவிக்க மாட்டேன். இவர் அறிவித்த பெரும்பான்மையான செய்திகள் மறுக்கப் படவேண்டியவையாகும் என்று புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: இலலுத் திர்மிதீ, பாகம் 1, பக்கம் 257)

மேலும் இதே செய்தியில் அப்துல் மா­க் பின் அப்துல் அஜீஸ் என்ற இப்னு ஜுரைஜ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் ‘இன்னாரிடமிருந்து நான் கேட்டேன்’, ‘எனக்கு அறிவித்தார்’ என்பது போன்ற தெளிவான வாசகங்களைக் கொண்டு அறிவித்தால் மட்டுமே அவரின் அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

இப்னு ஜுரைஜ், ‘எனக்கு இவர் அறிவித்தார்’ என்று கூறினால் அவர் அடுத்தவரிடம் கேட்டதாகும். அவர் சொன்னார் என்று கூறினார் அது மதிப்பற்றதாகும் என்று யஹ்யா பின் ஸயீத் குறிப்பிடுகின்றார்.

இப்னு ஜுரைஜ் என்பவர், ‘எனக்கு இவர் அறிவித்தார்’ என்றோ அல்லது ‘நான் செவியுற்றேன்’ என்றோ கூறினால் அது ஆதாரத்திற்கு ஏற்றதாகும் என்று தஹ்லீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 359)

குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இப்னு ஜுரைஜ் அவர்கள் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து, எனக்கு அறிவித்தார், நான் செவியுற்றேன் என்ற தெளிவான வாசகங்கள் இல்லாமல் ‘அன்’ என்ற வார்த்தையைக் கொண்டு அறிவிப்பதால் இச்செய்தி மேலும் பலவீனமடைகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்….. ‘நீ தூய்மையாக இருந்தாலே தவிர குர்ஆனைத் தொடாதே!’

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில் ஆஸ் (ர­), நூல் : தப்ரானீ (கபீர்)

இச்செய்தியில் இஸ்மாயில் பின் ராபிவு என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர்.

இஸ்மாயில் பின் ராபிவு ஹதீஸில் விடப்பட வேண்டியவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்1, பக்கம் 16)

இஸ்மாயில் பின் ராபிவு என்பவரைப் பற்றி அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் கேட்டேன். பலவீனமானவர் என்றார்கள்.

இஸ்மாயீல் பின் ராபிவு என்பவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று யஹ்யா பின் முயீன் அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 2, பக்கம் 162)

அஹ்மத், யஹ்யா மற்றும் பெரும் கூட்டத்தினர் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். தாரகுத்னீ மற்றும் சிலர், இவர் ஹதீஸில் விடப்பட வேண்டியவர் என்று கூறியுள்ளார்கள். இவருடைய அனைத்துச் செய்திகளிலும் ஆட்சேபணை உள்ளது என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம் 1, பக்கம் 384)

தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள். உம்ரா சிறிய ஹஜ்ஜாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸவ்பான் (ர­) அறிவிக்கும் இச்செய்தி ‘அல்வஹ்மு வல் ஈஹாம்’ என்ற இப்னு கத்தான் அவர்களின் நூ­ல் பதிவு செய்யப் பட்டுள்ளதாக நஸ்புர்ராயா என்ற நூ­ல் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தரமும் அதில் கூறப்பட்டுள்ளது.

”இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனத்தின் உச்சத்தில் இருக்கின்றது. இதில் இடம் பெறும் அந்நள்ர் பின் ஷஃபீ என்பவரைப் பற்றி அறிவிப்பாளர் விமர்சனம் இடம் பெறும் நூற்களில் நான் எந்தக் குறிப்பையும் நான் பார்க்கவில்லை. எனவே இவர் முற்றிலுமாக அறியப்படாதவர் ஆகின்றார். அடுத்து கஸீப் பின் ஜஹ்தர் என்பவரைப் பற்றி இப்னு முயீன் அவர்கள் பொய்யர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்கள். மஸ்அதா (என்ற அறிவிப்பாளர்) விடப்பட வேண்டியவர் என்று அஹ்மத் பின் ஹன்பல் குறிப்பிட்டுள்ளார்கள். பொய்யர் என்று அபூஹாத்தம் கூறியுள்ளார்கள்” என்று இப்னுல் கத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

(நூல்: நஸ்புர்ராயா, பாகம் 1, பக்கம் 199)

உமர் (ர­) அவர்கள் வாளைத் தொங்க விட்டவர்களாக வெளியேறினார்கள். அப்போது அவர்களிடம், ”உம்முடைய மச்சானும் சகோதரியும் மதம் மாறி விட்டனர்” என்று கூறப்பட்டது. உடனே அவ்விருவரிடம் உமர் (ர­) சென்றார்கள். அங்கு கப்பாப் எனப்படும் முஹாஜிர்களில் ஒருவர் இருந்தார். அவர்கள் தாஹா என்ற அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள். ”உங்களிடம் உள்ள அந்தப் புத்தகத்தை நான் படிக்கின்றேன்” என்று உமர் (ர­) கூறினார்கள். உமர் (ர­) அவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அப்போது அவரது சகோதரி, ”நீர் அசுத்தமானவர், இதைத் தூய்மையானவர்களைத் தவிர (யாரும்) தொட மாட்டார்கள். எனவே நீர் எழுந்து குளியும். அல்லது உளூச் செய்யும்” என்றார்கள். உமர் (ர­) எழுந்து உளூச் செய்து விட்டு அவ்வேதத்தி­ருந்து எடுத்து தாஹா என்ற அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க் (ர­),நூற்கள்: தாரகுத்னீ 435, பைஹகீ 417

இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதை இதைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களே அச்செய்தியின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

(இதில் இடம்பெறும்) அல் காஸிம் பின் உஸ்மான் என்பவர் பலம் வாய்ந்தவர் இல்லை.

மேலும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. உமர் (ர­) அவர்களின் சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நீ தூய்மையாக இருக்கும் நிலையில் தவிர குர்ஆனைத் தொடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஷாம் (ர­), நூல் : தாரகுத்னீ 434

இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபூஹாத்தம் என்ற ஸுவைத் என்பவர் பலவீனமானவர்.

இவரை யஹ்யா பின் முயீன் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியதை நான் கேட்டேன் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள். பலமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ குறிப்பிடுகின்றார்க்ள. பலவீனமானவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல் : தஹ்தீபுல் கமால், பாகம் 12, பக்கம் 243)

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்று நபிமொழித் தொகுப்புகளி­ருந்து அவர்கள் எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களும் பலவீனமானவையாக உள்ளன. எனவே இச்சான்றுகளை வைத்து திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக் கூடாது என்ற முடிவுக்கு வரமுடியாது.

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக் கூடாது என்று வாதிடுபவர்களின் வாதங்களையும், அவர்கள் எடுத்து வைத்த சான்றுகளையும், அவற்றின் தெளிவான பதிலையும் சென்ற இதழில் கண்டோம். இப்போது திருக்குர்ஆன் வசனங்களை தூய்மையின்றி ஓதலாமா? என்பது தொடர்பாக உள்ள கருத்துக்களையும் அதன் விளக்கத்தையும் காண்போம்.

உளூச் செய்யாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று கூறியவர்கள் உளூ இல்லாமல் ஓதலாம் என்கின்றனர். இக்கருத்து வியப்பிற்குரிய ஒரு செய்தியாகும்.

திருக்குர்ஆனைத் தொடுவதால் நன்மை கிடைக்குமா? ஓதுவதால் நன்மை கிடைக்குமா? என்று கேட்டால், ஓதுவதால் தான் நன்மை கிடைக்கும் என்று யாரும் சொல்­ விடுவார்கள். ஒருவர் திருக்குர்ஆனை ஒரு நாளைக்குப் பல தடவை தொட்டுத் தொட்டுப் பார்க்கின்றார். இவருக்கு நன்மை பதிவு செய்யப் படுமா? ஓதினால் தானே நன்மை பதியப்படும்! நன்மை கிடைக்கக் கூடிய ஒரு காரியத்திற்கு (ஓதுவதற்கு) உளூ அவசியம் இல்லையென்றால் நன்மை கிடைக்காத ஒரு காரியத்திற்கு (தொடுவதற்கு) உளூ அவசியமாகுமா? சிந்தித்துப் பாருங்கள்!

குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் ஆகியோர் திருக்குர்ஆனை ஓதக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இக்கருத்துக்கு சில ஹதீஸ்களை சான்றாக எடுத்து வைக்கின்றனர். அவற்றின் விபரங்களைப் பார்ப்போம்.

முதல் ஆதாரம்:

மாதவிடாய் ஏற்பட்டவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்: திர்மிதி 121

இதே செய்தி பைஹகீயில் 1375வது ஹதீஸாகவும், இப்னுமாஜாவில் 588வது ஹதீஸாகவும், பைஹகீயின் சுனனுஸ் ஸுக்ரா என்ற நூ­ல் 1044வது செய்தியாகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா? செயல்படுவதற்கு ஏற்றதா? என்பதை இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த ஹதீஸின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

(இச்செய்தியில் இடம்பெறும்) இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இராக்வாசிகள், ஹிஜாஸ்வாசிகள் வழியாக மறுக்கத்தக்க பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று முஹம்மது பின் இஸ்மாயீல் (புகாரி இமாம்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். அதாவது இவர் மட்டும் தனியாக இவர்கள் வழியாக அறிவிக்கும் போது, அது பலவீனமானது என்ற கருத்தைக் கூறினார்கள். மேலும் ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பது மட்டுமே ஹதீஸாகும் என்றும் கூறினார்கள்.

இதே கருத்தை இன்னும் பல அறிஞர்களும் கூறியுள்ளனர்.

இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இராக்வாசிகள், ஹிஜாஸ்வாசிகள் வழியாக அறிவிப்பதில் சில குறைகள் இருக்கின்றன. ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பவை உறுதியானது, ஆதாரப்பூர்வமானது என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் ஹதீஸ் துறையில் எப்படிப் பட்டவர்?’ என்று அபூஸுர்ஆவிடம் கேட்கப் பட்ட போது, ‘நல்லவர், எனினும் ஹிஜாஸ்வாசிகள் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் குழம்பியிருக்கின்றார்’ என்று பதிலளித்தார்கள்.

(நூல்: அல்ஜரஹு வத்தஃதீல், பாகம்: 2, பக்கம்: 191)

‘பகிய்யா என்பவர் அறியப்பட்டவரிடமிருந்து அறிவித்தால் அவரிடமிருந்து எழுதிக் கொள்ளுங்கள்! அறியப்படாதவரிடமிருந்து அறிவித்தால் அதை எழுதிக் கொள்ளாதீர்கள்! இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் அறியப் பட்டவரிடமிருந்து அறிவித்தாலும், அறியப்படாதவரிடமிருந்து அறிவித்தாலும் எழுதிக் கொள்ளாதீர்கள்!’ என்று அபூஇஸ்ஹாக் குறிப்பிடுகின்றார். ‘இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவரைப் பற்றி நான் யஹ்யா பின் முயீன் அவர்களிடம் கேட்டேன். ஷாம்வாசிகள் வழியாக அறிவிப்பவை சரியானதாகும். இராக்வாசிகள், மதீனாவாசிகள் வழியாக அவர் அறிவித்தால் அது குழப்பத்திற்குரியதாகும்’ என்று கூறினார்கள். ‘இவர் தன்னுடைய ஹதீஸில் அதிகம் தவறிழைப்பவர். எனவே ஆதாரமாக எடுத்துக் கொள்ளுதல் என்ற வரையறையி­ருந்து இவர் நீங்கி விட்டார்’ என்று இப்னு ஹிப்பான் கூறியதாக மிழ்ரஸ் பின் முஹம்மத் அல்அஸதீ குறிப்பிடுகின்றார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 1, பக்கம்: 401)

இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 16)

”மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது” என்ற செய்தி மொத்தம் நான்கு ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு நூற்களிலும் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவரே இடம் பெறுகின்றார். இந்த இஸ்மாயீல் பின் அய்யாஷைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள், இவர் இரு விதமான ஹதீஸ்களை அறிவித்திருப்பதை தெளிவு படுத்துகின்றனர். ஒன்று இவர் தன்னுடைய நாடான ஷாம் நாட்டவர் வழியாக அறிவித்தவை. மற்றவை ஷாம் நாட்டவர் அல்லாத வேறு நாட்டவர் வழியில் அறிவித்தவை. இவற்றில் தன் நாட்டவர் வழியாக அறிவித்தவையே சரியானதாக அமைந்திருப்பதாகவும், வேறு நாட்டவர் வழியாக அறிவித்தவைகளில் குழப்பங்கள், தவறுகள் நிறைந்திருப்பதாகவும் ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். எனவே இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றார்? என்பதை முத­ல் பார்க்க வேண்டும். ‘மூஸா பின் உகபா’ என்பவர் வழியாகவே நான்கு நூற்களிலும் அறிவிக்கின்றார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரம் நமக்குக் கிடைக்கின்றது.

மூஸா பின் உகபா என்பவர் மதீனாவைச் சார்ந்தவர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால், பாகம்: 29, பக்கம்: 115

தபகாத்துல் ஹுஃப்பாழ், பாகம்: 1, பக்கம்: 70)

இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் யாரிடமிருந்து அறிவித்தாரோ அந்த மூஸா பின் உக்பா என்பவர் மதீனாவைச் சார்ந்தவர்.

மதீனாவைச் சார்ந்தவர் வழியாக இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் அறிவிப்பதால் ஹதீஸ் கலை அறிஞர்களின் முடிவுப் படி இந்த ஹதீஸ் பலவீனமானதாக அமைகின்றது. எனவே இது ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

இச்செய்தி பலவீனமானது என்பதை இதைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

இது பலமான செய்தி இல்லை.

(நூல்: பைஹகீ, பாகம்: 1, பக்கம்: 309)

மேலும் இச்செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாகக் கூறப்படுவது தவறாகும். இது இப்னுஉமர் (ர­) அவர்களின் சொந்தக் கூற்று என்பதே சரியாகும் என்று அபூஹாத்தம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

”மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னுஉமர் (ர­) அறிவிக்கும் செய்தியைக் குறிப்பிட்டு, ”இது தவறாகும். இச்செய்தி இப்னு உமர் (ர­) அவர்களின் சொந்தக் கூற்றே!” என்று என் தந்தை குறிப்பிட்டார்கள்.

(நூல்: இலல் இப்னு அபீஹாத்தம், பாகம்: 1, பக்கம்: 49)

”மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது” என்ற செய்தி மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பலவீனமாகின்றது. எனவே இச்சான்றை வைத்து, குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள் குர்ஆனை ஓதலாகாது என்ற சட்டத்தைக் கூற முடியாது.

இரண்டாவது சான்று:

குளிப்பு கடமையானவர் குர்ஆனி­ருந்து எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்: தாரகுத்னீ 417

இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் அப்துல் ம­க் பின் மஸ்லமா என்பவர் பலவீனமானவர். இவரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தைக் காண்போம்.

என் தந்தையிடம் இவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், ”இவர் ஹதீஸ்களை குழப்பி அறிவிப்பவர், பலம் வாய்ந்தவர் இல்லை” என்று பதிலளித்தார்கள் என்று அப்துர்ரஹ்மான் குறிப்பிடுகின்றார். இவரைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்டேன். ”இவர் பலம் வாய்ந்தவர் இல்லை, ஹதீஸ் கலையில் மறுக்கப் பட்டவர்” என்று கூறினார்கள் என்றும் அப்துர்ரஹ்மான் குறிப்பிடுகின்றார்.

(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 5, பக்கம்: 371)

அப்துல் ம­க் பின் மஸ்லமா என்பவர் மதீனாவாசிகள் வழியாக ஏராளமான மறுக்கப் பட்ட செய்திகளை அறிவிப்பவர். நபிவழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு இது மறைவானது கிடையாது என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 134)

மூன்றாவது சான்று:

”மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனி­ருந்து எதையும் ஓத மாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­), நூல்: தாரகுத்னீ 418

இச்செய்தியும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் ஒரு மனிதர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப் படாமல் இடம் பெறும் ஹதீஸ்களை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் தெரியாத நபர் பொய்யராகவோ, பலவீனமானவராகவோ இருக்கக் கூடும்.

நான்காவது சான்று:

மாதவிடாய் ஏற்பட்டவர்கள், பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் குர்ஆனி­ருந்து எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ர­), நூல்: தாரகுத்னீ 1860

இச்செய்தியும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் முஹம்மது பின் ஃபழ்ல் என்பவர் பலவீனமானவர் ஆவார். ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டவர் ஆவார்.

முஹம்மது பின் ஃபழ்ல் என்பவரைப் பற்றி யஹ்யா பின் முயீன் அவர்களிடம் கேட்டேன். ”மதிப்பற்றவர், அவருடைய ஹதீஸ்கள் எழுதப்படாது” என்று பதிலளித்தார் என இப்னு அபீ மர்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். முஹம்மது பின் ஃபழ்ல் என்பவர் பொய்யர் என்று ஸஅதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நான் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் இவரைப் பற்றிக் கேட்ட போது, ”இவர் பிரமிப்பூட்டும் (பொய்யான) செய்திகளைக் கொண்டு வருபவர்” என்று கூறினார்கள். (நூல்: அல்காமில், பாகம்: 6, பக்கம்: 161)

முஹம்மத் பின் ஃபழ்ல் என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 93)

இவர் நம்பகமானவர்களின் பெயரைப் பயன்படுத்தி இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர். படிப்பினை பெறுவதற்காகவே தவிர இவருடைய செய்திகளை பதிவு செய்வது அனுமதி இல்லை என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல் மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 278)

இது வரை தூய்மையில்லாதவர்கள் குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கு நான்கு சான்றுகளை எடுத்து வைத்ததையும் அவற்றின் பதில்களையும் கண்டோம். இப்போது அவர்கள் எடுத்து வைக்கும் மேலும் சில சான்றுகளையும் அதற்குரிய பதில்களையும் காண்போம்.

ஐந்தாவது சான்று :

ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ர­), நூல் : திர்மிதீ (136)

இச்செய்தியின் கீழ் இமாம் திர்மிதீ அவர்கள் இது ஆதாரப்பூர்மானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நானும் இரண்டு மனிதர்களும் அலீ (ர­) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், ”நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையி­ருந்து வெளியேறுவார்கள். குர்ஆனை ஓதுவார்கள். எங்களுடன் இறைச்சியை சாப்பிடுவார்கள். ஜனாபத்தைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதைவிட்டும் தடுக்காது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ர­), நூல் : நஸயீ (265)

இக்கருத்து அபூதாவூதில் 198வது செய்தியாகவும் இப்னுமாஜாவில் 587வது செய்தியாகவும் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவாகள், ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் குர்ஆனை ஓதக்கூடிவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ர­), நூல் : நஸயீ (266)

தூய்மையில்லாமல் குர்ஆனை ஓதக் கூடாது என்று வ­யுறுத்தும் இச்செய்தி இமாம் திர்மிதீ குறிப்பிட்டது போல் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் ஸ­மா என்பவர் பலவீனமானவராவார். இதன் முழு விபரத்தைக் காண்போம்.

இவரிடத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளும் மறுக்கக் கூடியவைகளும் உள்ளன என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். (நூல் : அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் பாகம் : 1, பக்கம் : 64)

அப்துல்லாஹ் பின் ஸ­மா முதுமையடைந்தார். அப்போது எங்களுக்கு (ஹதீஸ்களை) அறிவித்தார். அதில் சரியானதையும் மறுக்கப்பட வேண்டியதையும் கண்டோம் என்று அவரின் மாணவர் அம்ர் பின் முர்ரா குறிப்பிடுகிறார். (நூல் : தாரீக் பக்தாத் பாகம் : 9, பக்கம் : 460)

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் ஸ­மா அவர்கள் முதுமையை அடைந்த பிறகே அறிவித்தார் என்று ஷுஅபா குறிப்பிடுகிறார். (நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 15, பக்கம் : 53)

இவர் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஒத்த அறிவிப்புகள் இருப்பதில்லை என்று இமாம் புகாரீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 4, பக்கம் : 111)

இமாம் ஷாஃபீ அவர்கள் ஸுனன் ஹர்மலா என்ற நூ­ல் ”இந்தச் செய்தி சரியானதாக இருந்தால் ஜனாபத் உள்ளவர்கள் குர்ஆன் ஓதுவது ஹராம் என்பதற்கு ஆதாரமாகும்” என்று கூறியுள்ளார்கள், ஹதீஸ் கலை அறிஞர்கள் இச்செய்தியை (ஆதாரப்பூர்வமானது என்று) உறுதி செய்யவில்லை என்று ஜிமாவு கிதாபுத் தஹுர் என்ற நூ­ல் இமாம் ஷாஃபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் பைஹகீ குறிப்பிடுகிறார்கள்: இமாம் ஷாஃபீ இவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணம், இச்செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸ­மா என்பவர் மூளை குழம்பி விட்டார். இச்செய்தியை முதுமையடைந்த (மூளை குழம்பிய) போது அறிவித்துள்ளார் என்று ஷுஅபா அவர்கள் அறிவித்துள்ளார். (எனவே தான் இமாம் ஷாஃபீ அவர்கள் இச்செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறவில்லை,) இச்செய்தி சந்தேகத்திற்குரியது என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியதாக கத்தாபீ குறிப்பிடுகிறார்கள். (இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்ற) இமாம் திர்மிதீ அவர்கள் பெரும்பான்மையினருக்கு மாற்றமாக கூறியுள்ளார்கள். (இவரல்லாத) அனைவரும் இந்த ஹதீஸை பலவீனமாக்கியுள்ளனர் என்று இமாம் நவவீ அவர்கள், குலாஸா என்ற நூ­ல் குறிபிட்டுள்ளார்கள்.

(நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம் : 1, பக்கம் : 139)

(இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும்) குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது என்று சொல்பவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை. இதில் (குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனை ஓதக்கூடாது என்பதற்கு) எந்தத் தடையும் இல்லை. இது நபி (ஸல்) அவாகளின் செயலை (அப்படியே) எடுத்து சொன்னது தான். (நபி(ஸல்) அவர்கள்) குர்ஆன் ஓதாமல் தடுத்துக் கொண்டது குளிப்பு கடமையினால் தான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தவில்லை (ஓதாமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருந்திருக்கலாம்.) என்று இமாம் இப்னு ஹுஸைமா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : தல்கீஸுல் ஹபீர் பாகம் : 1, பக்கம் : 139)

ஆறாவது சான்று :

”அலீயே நான் எதை பொருந்திக் கொள்வேனோ அதை உனக்கும் நாடுகிறேன்; எனக்கு எதை வெறுப்பேனோ அதை உனக்கும் வெறுக்கிறேன்; நீ குளிப்பு கடமையானவனாக இருக்கும் போது குர்ஆனை ஓதாதே; ,நீ ருக்கூவில் இருக்கும் போதும் நீ ஸஜ்தாவில் இருக்கும் போதும் (குர்ஆனை) ஓதாதே; உன் முடியை கொண்டை போட்டுக் கொண்டு தொழாதே; கழுதையைப் போல் (ருகூவில் அதிகமாக) முதுகையை தாழ்த்தாதே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுனார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ர­), நூல் : தாரகுத்னீ (420)

இச்செய்தியை இமாம் தாரகுத்னீ மூன்று அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள். இந்த மூன்று அறிவிப்பாளர் வரிசையிலும் அபூ நயீம் அந்நகயீ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். இவரைப் பற்றிய விமர்சனங்களை காண்போம்.

இவர் ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டார் என்று அபூஹாத்தம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், (நூல் : அல்இலல் வமஃரிபத்துர் ரிஜால், பாகம் : 3, பாக்கம் : 386)

இவர் அறிவிக்கும் பெரும்பாலான அறிவிப்புகளுக்கு ஒத்த அறிவிப்புகள் இருப்பதில்லை என்று இப்னு அதீ அவர்கள் குறை கூறியுள்ளார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:4, பக்கம்:324)

கூஃபாவில் அபூ நயீம் அந்நகயீ, ளிரார் பின் ஸர்மத் என்ற அபூ நயீம் அந்நகயீ ஆகிய இரு பொய்யர்கள் உள்ளனர் என்று யஹ்யா பின் முயீன் குறிப்பிடுகிறார்கள். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ, அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் உண்மையில் நல்லவர் எனினும் இவரிடம் பிரச்சனைகள் உள்ளன என்று இமாம் புகாரீ கூறியுள்ளார்கள். உகைலீ அவர்கள் இவரை பலவீனமாக்கியுள்ளனர். (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 6, பக்கம் : 259)

மேலும் இச்செய்தியில் இடம் பெறும் அல் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.

அல்ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பொய்யர்களில் ஒருவர் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுகிறார் ஷஅபீ அவர்கள். (நூல் : அஹ்வாலுர் ரிஜால், பாகம் : 1, பக்கம் : 43)

ஹாரிஸ் என்பவர் அலீ (ர­) அவர்கள் தொடர்பான ஹதீஸ்களில் உண்மையாளராக இருக்கவில்லை என்று முகீரா குறிபிடுகிறார், பொய்யர் என்று இப்னுல் மதீனீ குறிப்பிடுகிறார். பலவீனமானவர் என்று இப்னு முயீன், தாரகுத்னீ ஆகியோர் கூறுகிறார்கள். பலம் வாய்ந்தவர் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். அலீ(ர­) அவர்கள் தொடர்பாக இச்சமுதாயத்தில் இவரைப் போன்று வேறு எவரும் பொய் சொன்னதில்லை என்ற ஷஅபீ குறிப்பிடுகிறார். இவர் அலீ (ர­) அவர்கள் தொடர்பாக கூறும் பெரும்பாலான செய்திகள் பொய்யானதாகும் என்று இப்னு ஸீரீன் குறிப்பிடுகிறார். (நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 2, பக்கம் : 172)

இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று அபூஸுர்ஆ குறிப்பிடுகிறார். வ­மை வாய்ந்தவர் இல்லை என்று அபூ ஹாத்தம் குறிப்பிடுகிறார்கள். ஹாரிஸ் பெரும்பாலும் சியா கொள்கை கொண்டவர்; ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். (நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 2, பக்கம் : 127) வளரும் இன்ஷாஅல்லாஹ்

இது வரை தூய்மையில்லாதவர்கள் குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கு எடுத்து வைக்கப்பட்ட ஆறு சான்றுகளையும் அவற்றின் பதில்களையும் பார்த்துள்ளோம். இப்போது அவர்கள் எடுத்து வைக்கும் மேலும் சில சான்றுகளையும் அதற்குரிய பதில்களையும் காண்போம்.

ஏழாவது சான்று :

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் உணவருந்திவிட்டு, ”நான் குளித்துக் கொள்வதற்காக என்னை மறைத்துக் கொள்” என்றார்கள். அதற்கு நான் ”நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருக்கிறீர்களா?” என்றேன். ஆம் என்றார்கள். இவ்விசயத்தை உமர் (ர­) அவர்களிடம் தெரிவித்தேன். (இதைக் கேட்டவுடன்)அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இவர் நீங்கள் குளிப்பு கடமையான நிலையில் சாப்பிட்டதாகக் கூறுகிறாரே என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”ஆம் நான் உளூச் செய்து சாப்பிட்டேன். குடித்தேன். எனினும் குளிக்கும் வரை (குர்ஆனை) ஓதவில்லை” என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல் காஃபிகீ (ர­), நூல் : தாரகுத்னீ (421)

இதே கருத்து தாரகுத்னியில் 422வது செய்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தப்ரானியின் அல் முஃஜமுல் கபீர் (பாகம் : 19, பக்கம் : 295) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் செய்தியில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலவீனமானவர். இவரைப் பற்றிய விரிவான விமர்சனம் ஜூன் 2003 இதழில் பக்கம் 17ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டாவது சான்று :

நாங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருக்கும் நிலையில் எங்களில் ஒருவர் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­), நூல் : தாரகுத்னீ (424)

இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் ஸம்ஆ பின் ஸா­ஹ் என்பவர் பலவீனமானவராவார்.

ஸம்ஆ பின் ஸா­ஹ் என்பவர் வ­மை வாய்ந்தவர் இல்லை. மேலும் ஸுஹ்ரீ வழியாக ஏராளமான தவறுகளை செய்துள்ளார் என்று இமாம் நஸயீ குறிப்பிட்டுள்ளார் (நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 43)

அபூஸுர்ஆ, அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 3, பக்கம்: 119)

ஸம்ஆ பின் ஸா­ஹ் என்பவர் நல்ல மனிதர் எனினும் சந்தேகத்துடன் அறிவிப்பவர். ஆனால் அதை அறிய மாட்டார். தவறிழைப்பார். அதை விளங்க மாட்டார். (இதனால் இறுதியில் அவர் அறிவிக்கும்) ஹதீஸில் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகள் மிகைத்தன. அப்துர் ரஹ்மான் அவர்கள் இவரிடமிருந்து அறிவித்து வந்தார். பின்னர் (இவரின் தவறின் காரணமாக அறிவிப்பதை) விட்டு விட்டார் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். நான் யஃஹா பின் மயீன் அவர்களிடம் ஸம்ஆ பின் ஸா­ஹ் என்பவரை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் பலவீனமானவர் என்று பதிலளித்ததாக ஜஃபர் பின் அபான் குறிப்பிடுகிறார்கள். (நூல் : மஜ்ரூஹீன், பாகம் : 1, பக்கம் : 312)

ஒன்பதாவது சான்று :

மாதவிடாய் ஏற்பட்டவர்கள், குளிப்பு கடமையானவர்கள், பிரசவத் தீட்டு ஏற்பட்டவர்கள் எவரும் குர்ஆனை ஓதக் கூடாது.

அறிவிப்பவர் : ஜாபிர் (ர­), நூல் : தாரகுத்னீ (428)

இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் பலவீனமானவர்.

யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகிறார்கள். (நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 109)

யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் (ஹதீஸ் அறிவிப்பதற்கு) தகுதி வாய்ந்தவர் இல்லை என்று இமாம் புகாரீ குறிப்பிடுகிறார்கள். (நூல் : அல்லுஅஃபுஸ் ஸகீர் பாகம் : 1. பக்கம் : 118)

இவர் அறிவிப்பாளர் வரிசைகளை மாற்றக் கூடியவர். நபித்தோழர்கள் விடுபட்டு அறிவிக்கப்பட்ட செய்திகளை (இவராக) நபித்தோழர்களுடன் அறிவிப்பார். இவர் உருவாக்கியதை ஆரம்ப நிலையில் உள்ளவன் கேள்விப்பட்டால் இது உருவாக்கப்பட்டது என்று ஐயம் கொள்ள மாட்டான். எந்த நிலையிலும் இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். யஹ்யா பின் அபீ உனைஸாவின் சகோதரர் ஸைத், ”என்னுடைய சகோதரரிடமிருந்து (ஹதீஸ்களை) எழுதிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர் பொய்யர்” என்ற கூறியதாக உபைதுல்லாஹ் பின் அம்ர் குறிப்பிடுகிறார். (நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 3, பக்கம் : 110)

இதே செய்தியை பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களும் அந்த ஹதீஸின் இறுதியில் யஹ்யா பின் அபீ உனைஸா என்பவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையின்றி குர்ஆனை ஓதக்கூடாது, தொடக்கூடாது என்று வாதிடுபவர்களின் சான்றுகளைப் பார்த்தோம். அதில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே குர்ஆனை தூய்மையின்றி தொடக் கூடாது என்று கூறுவதற்கோ ஓதக் கூடாது என்று கூறுவதற்கோ எந்த நியாயமும் இல்லை.

தூய்மையற்ற நிலையில் திருக்குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா? என்ற பிரச்சனையில் தொடக்கூடாது, ஓதக்கூடாது என்று கூறியவர்களின் வாதங்களும் அதற்கு அவர்கள் வைத்த சான்றுகளும் சரியானவை அல்ல என்பதை தெளிவான சான்றுகளுடன் நாம் பார்த்தோம். இப்போது தூய்மையற்ற நிலையில் திருக்குர்ஆனைத் தொடலாம், ஓதலாம் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள், அன்றைய காலத்தில் இருந்த சில மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தில் திருக்குர்ஆன் வசனங்களையும் எழுதியனுப்பினார்கள்.

ரோமாபுரி மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம் ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார் ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்கு­ஸுக்கு எழுதிக் கொள்வது, நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக நிற்க. இஸ்லாத்தைத் தழுவாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக, நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர். அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

”வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ”நாங்கள் முஸ்­ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64) என்று எழுதப்பட்டிருந்தது. (புகாரீ 7)

திருக்குர்ஆனைத் தூய்மையின்றி தொடக்கூடாது, ஓதக்கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்காத ரோமாபுரி மன்னருக்கு எப்படி திருக்குர்ஆன் வசனத்தை எழுதியிருப்பார்கள்? இஸ்லாத்தை ஏற்காதவர்கள் இஸ்லாம் கூறும் முறைப்படி தூய்மையாக இருப்பார்களா?

இஸ்லாத்தை ஏற்காத ரோமாபுரி மன்னர் அவ்வசனத்தைப் படிக்கவேண்டும், அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதியிருப்பது எல்லோரும் திருக்குர்ஆன் வசனங்களை எல்லா நேரங்களிலும் ஓதலாம் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.

நாம் எடுத்து வைக்கும் இக்கேள்விக்கு சிலர் விந்தையான விளக்கத்தை கூறுகின்றனர். நபி (ஸல்) குறிப்பிட்டது ஒரு வசனத்தைத் தான், முழுக் குர்ஆனையும் அல்ல என்கின்றனர்.

திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனமும் அல்லாஹ்வின் வார்த்தைகளே. இதில் தனிவசனத்திற்கு ஒரு சட்டம் முழுவசனத்திற்கு ஒரு சட்டம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. அவ்வாறு பிரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.

மேலும் எந்த வசனத்தைக் கொண்டு திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்கிறார்களோ அந்த (56;79)வது வசனம் இறக்கப்பட்ட போது முழுக் குர்ஆனும் இறங்கவில்லை. அப்போதும் அவற்றை குர்ஆன் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான். முதன் முத­ல் இறங்கிய அலக் அத்தியாத்தின் ஐந்து வசனங்களையும் குர்ஆன் என்றே குறிப்பிடப்பட்டது. எனவே இவ்வாதமும் சரியில்லை.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். இரவின் இறுதிப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து வெளியே சென்று வானத்தைப் பார்த்தார்கள். பிறகு

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ”எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையி­ருந்து எங்களைக் காப்பாயாக!” (என்று அவர்கள் கூறுவார்கள்). (அல்குர்ஆன் 3:190,191)

ஆகிய வசனங்களை ஓதினார்கள். பின்னர் வீட்டிற்குள் திரும்பி வந்து பல்துலக்கி உளூச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். பின்னர் எழுந்து (வீட்டிற்கு) வெளியே சென்று வானத்தைப் பார்த்தபடி

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ”எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையி­ருந்து எங்களைக் காப்பாயாக!” (என்று அவர்கள் கூறுவார்கள்). (அல்குர்ஆன் 3:190,191)

ஆகிய வசனங்களை ஓதினார்கள். பிறகு திரும்பி வந்து பல் துலக்கி உளூச் செய்து நின்று தொழுதார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­), நூல் : முஸ்­ம் (376)

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிய பின் எழுந்து 3:190,191 ஆகிய வசனங்களை உளூச் செய்யாமல் ஓதுகிறார்கள். பின்னர் தான் உளூச் செய்து விட்டு தொழுகிறார்கள். திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்கு தூய்மை அவசியம் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அவ்வசனங்களை ஓதியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததி­ருந்து திருக்குர்ஆன் வசனங்களை தூய்மையின்றி ஓதுவதற்கு நபி அவர்களே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)

இவ்வசங்களைக் கவனித்தால் உலக மாந்தர்கள் அனைவரும் எந்நிலையிலும் திருமறைக்குர்ஆனை ஓதலாம் என்பதை ஐயமின்றி விளங்கலாம்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா?, இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? ஆகிய வாசகங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களை மட்டும் பார்த்து பேசும் வசனங்கள் இல்லை. தெளிவாகச் சொன்னால் இது இஸ்லாத்தை ஏற்காதவர்களைப் பார்த்தே பேசுகிறது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வசனம் இறக்கப்பட்டது. அப்போது நபித்தோழர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்து இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். மக்காவில் இணைவைப்பவர்கள் தான் திருக்குர்ஆனை மறுத்தார்கள். அப்போது இவ்வசனம் இறக்கப்பட்டதால் இது இஸ்லாத்தை ஏற்காதவர்களைப் பார்த்தே பேசுகிறது என்றே நாம் முடிக்கு வரமுடியும்.

ஓரிறைக் கொள்கையை ஏற்காதவர்கள் இந்தக் குர்ஆனை நன்றாகப் படித்து இதில் குறைபாடுகள் உள்ளதா? கருத்து மோதல்கள் உள்ளதா? முரண்பட்ட சட்டங்கள் உள்ளதா? மனிதனால் இது போன்ற வாசனங்களைக் கொண்டு வர முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்து இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தூய்மையான நிலையில் இருக்க மாட்டார்கள், உளூச் செய்தும் இருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் உளூச் செய்திருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. ஏனெனில் அவர்களிடம் இறை நம்பிக்கை இல்லை.

இந்நிலையில் அவர்களைப் பார்த்து நீங்கள் இஸ்லாத்தை ஏற்று, தூய்மையான நிலையில் இக்குர்ஆனை சிந்தித்துப்பாருங்கள் என்றால் அவர்கள் அதை ஏற்பார்களா? படித்துப் பார்த்துவிட்டுத் தான் அது சரியா? அல்லது தவறா? என்பதை விளங்கி இஸ்லாத்தை ஏற்க முடியும். இந்நிலையில் அல்லாஹ் திருக்குர்ஆனைச் சிந்திக்கச் சொல்வதும் படிப்பினை பெறச் சொல்வதும் யாரும் எந்நிலையிலும் திருமறைக் குர்ஆனை ஓதலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
                                                                                                   ------எம்.ஐ. சுலைமான்

No comments:

Post a Comment