பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 13, 2010

முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா


ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியாகிய பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?





வரிசையில் சேராமல் தனியாகத் தொழுவது செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஒரு மனிதர் வரிசைக்குப் பின்னால் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட போது தொழுகையை மீண்டும் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

நூல் திர்மிதி 213

இன்னும் பல நூல்களிலும் இது பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் நம்பகத் தன்மையில் அறிஞர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. ஆயினும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

வரிசையில் சேராமல் தனியாகத் தொழுதால் தொழுகை செல்லாது என்பது தெளிவாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

முன் வரிசையில் இடம் இருக்கும் போது அதில் சேராமல் தனித்து நிற்பவரை இது குறிக்குமா?

அல்லது இடமிருந்தாலும் இடமில்லாவிட்டாலும் தனித்து நிற்பதைக் குறிக்குமா?

இதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும். இதைப் புரிந்து கொள்ள பின்வரும் ஹதீஸ் நமக்கு உதவுகிறது.

380 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில்

சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் (உபரியானத் தொழுகையை) தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போய்விட்டி ருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.

புஹாரி 380

அனஸ் (ரலி) அவர்களின் தாயார் பெண் என்பதால் அவர்கள் ஆண்களுடன் சேரவில்லை. தனியாகத் தான் நின்றார்கள். அதாவது வரிசையில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லாத போது அவர்கள் தனியாக நின்றார்கள். தனியாக நிற்பவரின் தொழுகை செல்லாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்து இருக்க மாட்டார்கள்.

எனவே இதற்கு முரணில்லாத வகையில் புரிந்து கொள்வது அவசியம். வரிசையில் காலி இடம் உள்ள போது வரிசையில் சேர்வதை வெறுத்தோ அல்லது அந்த விஷயத்தில் அலட்சியம் காட்டியோ வரிசையில் சேராமல் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர் ஒழுங்கைக் கெடுத்தவராகிறார். இது போல் செய்தவரின் தொழுகை செல்லாது என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்க வேண்டும். இப்படி புரிந்து கொண்டால் தான் மேற்கணட் ஹதீஸுடன் ஒத்துப் போகும்.

நின்று தொழ வேண்டும் என்று கட்டளை இருக்கிறது. நிற்க முடியாதவருக்கு இந்தக் கட்டளை பொருந்தாது என்று நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாத்தின் எல்லாக் கட்டளைகளுமே இப்படித் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதாவது எந்தக் கட்டளையானாலும் இயலும் போது அதைக் கடைப்பிடிக்க .வேண்டும்.

இப்படி புரிந்து கொள்ளாமல் வரிசை முடிந்து விட்டாலும் தனியாகத் தொழக் கூடாது என்று கூறினால் மேற்கண்ட ஹதீஸுக்கு அது முரண்படுவதுடன் மேலும் பல குழப்பங்களையும் ஏற்படுத்தும்.

கடைசியில் ஒருவர் வருகிறார். அவருக்கு வரிசையில் இடம் இல்லை. இவருடன் துணைக்குச் சேர யாருமே வரவில்லை என்றால் இவர் ஜமாஅத்தில் சேர முடியாது. ஜமாஅத் முடியும் வரை காத்திருந்து தனியாகத் தான் தொழ வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஜமாஅத் தொழுகையின் நன்மையை அவர் இழக்கும் நிலை ஏற்படும்.

அல்லது முன் வரிசையில் உள்ளவரை இழுக்க வேண்டிய நிலை ஏற்படும்.



முதல் வரிசையின் நன்மையை நாடி முன் கூட்டியே வந்தவரை இழுத்து அவருக்கு முதல் வரிசையின் நன்மையை இல்லாமல் ஆக்குவது மாபெரும் அநீதியாகும். மேலும் வரிசையைச் சீர்குலைக்கும் வேலையுமாகும்.

எனவே இடம் இல்லா விட்டால் தனியாக நிற்கலாம்.

09.01.2010. 20:31

No comments:

Post a Comment