ருகூவில் சேர்ந்தால் ரகாத் கிடைக்கும??
ஜமாஅத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் முழுதும் ஓத முடியாமல் ருகூவுக்கு போகும் நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. ருகூவுக்கு போவதா? அல்ஹம்தை முடிப்பதா?
இமாம் ருகூவில் இருக்கும் போது ருகூவில் சேர்ந்தால் அது ரக்காதாக கணக்கிடப்படுமா?
ருகூவைத் தவிர்த்து விட்டு அடுத்த நிலைக்கு இமாம் வரும் அவரை கத்திருந்து அதில் சேரலாமா?
பதில் :
நீங்கள் பல கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். முதலில் இமாமை எந்நிலையில் நாம் வந்தடைந்தால் நமக்கு அந்த ரக்அத் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம். இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பாக ஒருவர் ஜமாஅத்துடன் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் அவருக்குக் கிடைத்து விடும் என்று நாம் கூறிவருகிறோம்.
யார் தொழுகையில் இமாம் முதுகை உயர்த்துவதற்கு முன்னதாக ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொண்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : இப்னுஹுஸைமா (1595)
இந்த ஹதீஸையும் நாம் இதற்கு ஆதாரமாகக் குறிப்பிட்டு வந்தோம். தற்போது இந்தச் செய்தியை நாம் ஆய்வு செய்யும் போது இச்செய்தி பலவீனமானது என்பது நமக்குத் தெரிய வருகின்றது. இதன் அறிவிப்பாளர் தொடரில் குர்ரா பின் அப்திர் ரஹ்மான் என்பர் இடம்பெறுகிறார்.
இவர் பலவீனமானவர் என்றும் ஹதீஸை அறிவிப்பதில் இவர் அலட்சியப் போக்குடையவராக இருந்தார் என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவருடைய செய்திகள் நம்பகமானவர்களின் அறிவிப்புக்குப் பெரும்பாலும் மாற்றமாகவே இருக்கும் என இமாம் அஹ்மது பின் ஹம்பள், இமாம் அபூதாவுத், மற்றும் அபூ சுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் வலிமையானவர் இல்லை என இமாம் நஸாயீ மற்றும் இமாம் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்
எனவே அறிஞர்களின் கூற்றுப்படி இவர் பலவீனமானவர் என்பதால் இந்தச் செய்தியை நாம் ஆதாரமாகக் குறிப்பிட முடியாது.
எனினும் இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பு அவரை அடைந்து விட்டால் அந்த ரக்அத் கிடைத்து விடும் என்று நாம் கூறிய சட்டத்துக்கு வேறு சரியான ஆதாரங்கள் இருக்கின்றன.
783 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ الْأَعْلَمِ وَهُوَ زِيَادٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ رواه البخاري
அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் ரலி அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களீடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்'' என்று கூறினார்கள்
புகாரி (783)
அபூதாவுதிலும் முஸ்னது அஹ்மதிலும் இடம் பெற்றுள்ள அறிவிப்புகளில் கூடுதல் தகவல்கள் உள்ளனர்.
586حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا زِيَادٌ الْأَعْلَمُ عَنْ الْحَسَنِ أَنَّ أَبَا بَكْرَةَ جَاءَ وَرَسُولُ اللَّهِ رَاكِعٌ فَرَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ أَيُّكُمْ الَّذِي رَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ فَقَالَ أَبُو بَكْرَةَ أَنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ قَالَ أَبُو دَاوُد زِيَادٌ الْأَعْلَمُ زِيَادُ بْنُ فُلَانِ بْنِ قُرَّةَ وَهُوَ ابْنُ خَالَةِ يُونُسَ بْنِ عُبَيْدٍ رواه أبو داود
ஹசன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது அபூபக்ரா (ரலி) அவர்கள் (பள்ளிக்கு) வந்தார்கள். தொழுகை வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து பிறகு நடந்து வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பிறகு உங்களில் யார் வரிசையில் இணைவதற்கு முன்பே ருகூவு செய்தவர் என்று கேட்டார்கள். அபூபக்ரா (ரலி) அவர்கள் நான் தான் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்'' என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (586)
19540حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا بَشَّارٌ الْخَيَّاطُ قَالَ سَمِعْتُ عَبْدَ الْعَزِيزِ بْنَ أَبِي بَكْرَةَ يُحَدِّثُ أَنَّ أَبَا بَكْرَةَ جَاءَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَوْتَ نَعْلِ أَبِي بَكْرَةَ وَهُوَ يَحْضُرُ يُرِيدُ أَنْ يُدْرِكَ الرَّكْعَةَ فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ السَّاعِي قَالَ أَبُو بَكْرَةَ أَنَا قَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ رواه أحمد
நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது அபூபக்ரா (ரலி) அவர்கள் (பள்ளிக்குள் வேகமாக) வந்தார்கள். அந்த ரக்அத்தை அடைந்து விட வேண்டும் என்று நாடி அவர்கள் (வேகமாக) வந்த போது அவர்களுடைய செருப்பின் சப்தத்தை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் விரைந்து வந்தவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ரா (ரலி) நான் தான் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்'' என்று கூறினார்கள்
நூல் : அஹ்மது (19540)
அபூபக்ரா (ரலி) அவர்கள் ஸஃப்பிற்கு வெளியே ருகூவு செய்து அதே நிலையில் நடந்து வந்து ஸஃப்பில் சேருகிறார்கள். ஒரு ரக்அத் தனக்கு தவறிவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்துள்ளார்கள். ருகூவில் வந்து சேர்ந்தாலும் அந்த ரக்அத் கிடைக்காதென்றால் ஸஃப்புக்கு வெளியே அவர்கள் ருகூவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ருகூவைத் தவற விட்டால் அந்த ரக்அத் கிடைக்காது என்பதால் தான் அவர்கள் ஸஃப்புக்கு வெளியே ருகூவு செய்து நடந்து வந்து ஸஃப்பில் இணைகிறார்கள்.
அந்த ரக்அத்தை அடைந்து விட வேண்டும் என்று நாடி அவர்கள் (வேகமாக) வந்த போது என்று ஹதீஸில் கூறப்பட்டிருக்கும் வாசகம் இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இமாம் ருகூவில் இருக்கும் போது ஜமாஅத்தில் சேர்ந்தால் அந்த ரக்அத் கிடைத்துவிடும் என்று அபூபக்ரா (ரலி) அவர்கள் கருதியதை நபி (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை. இவ்வாறு செய்வது தவறு என்றிருக்குமேயானால் இவ்வாறு செய்த அபூபக்ரா (ரலி) அவர்களிடம் அந்த ரக்அத்தை மீண்டும் நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை.
மாறாக தொழுகைக்கு விரைந்து ஓடி வருவதும் ஸஃப்பில் இணையாமல் வெளியே ருகூவு செய்வதும் மட்டுமே கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பாக ஜமாஅத்துடன் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் கிடைத்துவிடும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ஆகவே இமாம் ருகூவிலிருக்கும் போது நீங்கள் ஜமாஅத்தில் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் உங்களுக்குக் கிடைத்து விடுகிறது. அதையே நீங்கள் முதல் ரக்அத்தாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட வேண்டிய அவசியமும் இல்லை.
மேலும் இந்தச் சூழ்நிலையில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுவதற்கு உங்களுக்கு வாயப்பு இல்லாமல் போகிறது. இந்தச் சூழ்நிலையில் மட்டுமல்ல இமாம் நிலையில் வளள்ளால்லீன் என்று சொல்லும் போது நீங்கள் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தாலும் அப்போதும் உங்களால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத முடியாத சூழ்நிலை ஏற்படவே செய்யும்.
ஓதுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்காத இது போன்ற இக்கட்டான நேரங்களில் ஃபாத்திஹா சூராவை ஓத முடியாமல் போனாலும் அதனால் நமது தொழுகைக்கு எப்பிரச்சனை இல்லை என்பதால் தான் அந்த ரக்அத் நமக்கு கிடைத்து விடும் என்று நபிமொழி சொல்கிறது.
ருகூவில் வந்து சேர்ந்த பிறகு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதினால் ருகூவில் குர்ஆன் ஓதக்கூடாது என்று கூறும் நபிமொழியை மீறிய குற்றம் ஏற்படும்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று எனக்குத் தடை விதித்தார்கள்.
முஸ்லிம் (826)
எனவே உங்களால் ஓத முடியா விட்டாலும் இமாம் ஓதியதே உங்களுக்குப் போதுமானதாகி விடும். நமக்கு அந்த ரக்அத் கிடைத்துவிடும்.
முக்கிய திருத்தம்
இந்த பதில் வெளியான பின் சகோதரர் முஜாஹித் ரஸீன் என்ற அறிஞர் அவர்கள் நமது பதிலில் பலவீனமான ஹதீஸ் ஒன்று இடம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டது போல் அந்த ஹதீஸ் பலவீனமானது தான். சுட்டிக்காட்டிய அந்த சகோதரருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் சுட்டிகாட்டைய ஒரு ஹதிஸ் பலவீனம் என்றாலும் ருகுவை அடைந்தால் ரகாத் கிடைக்கும் என்ற முடிவில் மாற்றம் இல்லை. இது குறித்து விரிவாகப் பர்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்துகொண்டிருந்தபோது அபூபக்ரா (ரலி) அவர்கள் (பள்ளிக்குள் வேகமாக) வந்தார்கள். அந்த ரக்அத்தை அடைந்துவிட வேண்டும் என்று நாடி அவர்கள் (வேகமாக) வந்த போது அவர்களுடைய செருப்பின் சப்தத்தை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் விரைந்து வந்தவர் யார்? என்று கேட்டார்கள். அபூபக்ரா (ரலி) நான் தான் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்'' என்று கூறினார்கள்
நூல் : அஹ்மது (19540)
ஒருவர் இமாம் ருகூவில் இருக்கும் நிலையில் அவரை வந்தடைந்தால் அந்த ரக்அத் அவருக்கு கிடைத்துவிடும் என்ற சட்டத்திற்கு அபூபக்ரா (ரலி) அவர்களின் சம்பவத்தை நாம் ஆதாரமாக குறிப்பிட்டிருந்தோம்.
புகாரியில் இடம் பெற்ற ஒரு அறிவிப்பு அபூதாவுதில் இடம்பெற்ற ஒரு அறிவிப்பு அஹ்மதில் இடம்பெற்ற ஒரு அறிவிப்பு மொத்தம் மூன்று அறிவிப்புகளை நமது ஆய்வில் குறிப்பிட்டிருந்தோம்.
மேலே நாம் குறிப்பிட்டுள்ள அஹ்மதுடைய அறிவிப்பு பலவீனமானது என்று இலங்கை சகோதரர் ஒருவர் நமக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பில் பஷ்ஷார் பின் அப்தில் மலிக் என்பவர் இடம் பெறுகின்றார். இவரை இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் யஹ்யா பின் முயீன் தெரிவித்துள்ளார்.
இமாம் இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனென்றால் இவர் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத நபர்களையும் நம்பகமானவர் என்று முடிவு செய்யும் அலட்சியப்போக்கு கொண்டவர். எனவே பஷ்ஷாரை இமாம் யஹ்யா பலவீனமானவர் என்று கூறியிருப்பதால் இவர் பலவீனமானவர் என்பதே சரி.
நமது தவறை சுட்டிக்காட்டிய அந்த இலங்கை சகோதரருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் அஹ்மதில் இடம் பெற்றுள்ள இந்த அறிவிப்பு பலவீனம் என்பதால் இமாம் ருகூவில் இருக்கும் போது அவரை வந்தடைந்தால் அந்த ரக்அத் கிடைத்து விடும் என்று நாம் கூறிய சட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது.
ஏனென்றால் அஹ்மதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பை மட்டும் வைத்து இவ்வாறு நாம் சட்டம் எடுக்கவில்லை. புகாரியிலும் அபூதாவுதிலும் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து இவ்வாறு சட்டம் எடுத்திருந்தோம்.
இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகத் தான் அஹ்மதுடைய அறிவிப்பைச் சுட்டிக்காட்டி இருந்தோம். எனவே அஹ்மதுடைய அறிவிப்பு பலவீனம் என்றாலும் சரியான மற்ற இரு அறிவிப்புகளின் அடிப்படையில் நாம் கூறிய அத்தனை வாதங்களும் சரியானவையே.
இவ்விரு அறிவிப்புகளில் மறைமுகமாக அடங்கியுள்ள கருத்தைத் தெளிவாக விவரிக்கும் விதமாகவே அஹ்மதுடைய அறிவிப்பு அமைந்துள்ளது. அஹ்மதுடைய அறிவிப்பு பலவீனம் என்றாலும் அபூபக்ரா (ரலி) அந்த ரக்அத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காகவே சஃப்பில் இணைவதற்கு முன்பு ருகூவு செய்தார் என்ற கருத்து சரியானதாகும்.
ஏனென்றால் அபூபக்ரா (ரலி) அவர்கள் ஸஃப்பிற்கு வெளியே ருகூவு செய்து அதே நிலையில் நடந்து வந்து ஸஃப்பில் சேருகிறார்கள். ருகூவில் வந்து சேர்ந்தாலும் அந்த ரக்அத் கிடைக்காதென்றால் ஸஃப்புக்கு வெளியே அவர்கள் ருகூவு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே ருகூவைத் தவற விட்டால் அந்த ரக்அத் கிடைக்காது என்பதால் தான் அவர்கள் ஸஃப்புக்கு வெளியே ருகூவு செய்து நடந்து வந்து ஸஃப்பில் இணைகிறார்கள்.
மேலும் இமாம் ருகூவில் இருக்கும் போது ஜமாஅத்தில் ஒருவர் வந்து சேர்ந்தால் அவருக்கு அந்த ரக்அத் கிடைக்காது என்று இருக்குமேயானால் இவ்வாறு செய்த அபூபக்ரா (ரலி) அவர்களிடம் அந்த ரக்அத்தை மீண்டும் நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை.
மாறாக தொழுகைக்கு விரைந்து ஓடி வருவதும் ஸஃப்பில் இணையாமல் வெளியே ருகூவு செய்வதும் மட்டுமே கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்னால் அவரை நாம் அடைந்துவிட்டால் அந்த ரக்அத் நமக்கு கிடைத்துவிடும்.
No comments:
Post a Comment