பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

ஜகாத்தை நான் செலுத்த வேண்டுமா? அல்லது எனது கணவர் தனது சம்பாத்தியத்திலிருந்து அந்த ஜகாத்தைக் கொடுக்க வேண்டுமா...??

? எனது பெற்றோர் எனது திருமணத்தின் போது அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை நான் செலுத்த வேண்டுமா? அல்லது எனது கணவர் தனது சம்பாத்தியத்திலிருந்து அந்த ஜகாத்தைக் கொடுக்க வேண்டுமா? மேலும் ஒருவருக்கு ஜகாத் கடமையாகி விட்டது. அவரிடம் ஜகாத்திற்குரிய தொகை இல்லை. எனவே அவர் கடனாகவோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத்தைக் கட்டலாமா?




உங்கள் பெற்றோர் உங்களுக்கு வழங்கிய அன்பளிப்புக்கு நீங்கள் தான் ஜகாத் வழங்க வேண்டுமே தவிர உங்கள் கணவர் அதற்காக ஜகாத் வழங்கத் தேவையில்லை.

பெண்ணின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம்.

கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், ''பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதை களுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், ''நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்'' என்று கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்'' என்று கூறி விட்டார்.

எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் (ரலி) வந்தார். அவரிடம், ''நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்'' எனக் கூறினேன்.

உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், எந்த ஜைனப்? என்று கேட்டதும் பிலால் (ரலி), ''அப்துல்லாஹ்வின் மனைவி'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ''ஆம்! ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)

நூல்: புகாரி 1466

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி, தனது சொத்திலிருந்து கணவனுக்குச் செலவு செய்வது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கின்றார்கள். மனைவியின் சொத்துக்களில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

எனவே மனைவியின் சொத்துக்கு அவள் தான் ஜகாத் வழங்க வேண்டுமே தவிர கணவன் ஜகாத் வழங்கத் தேவையில்லை.

ஜகாத் கடமையாகி விட்ட நிலையில் அதற்குரிய தொகை இல்லாவிட்டால் கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத் வழங்கலாமா? என்று கேட்டுள்ளீர்கள். இஸ்லாத்தின் எந்த வணக்கமாக இருந்தாலும் கடன் வாங்கியோ, அல்லது வட்டிக்கு வைத்தோ அதை நிறைவேற்றக் கூடாது.

உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் போக எஞ்சியிருக்கும் சொத்துக்குத் தான் ஜகாத் கடமையாகும். உபரியான பொருளுக்குத் தான் ஜகாத் கடமை எனும் போது அந்தப் பொருளை விற்று அதிலிருந்து ஜகாத் வழங்குவதால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

உதாரணமாக நம்மிடமுள்ள நகைகளுக்கு ஜகாத் கடமையாகின்றது என்றால் அதில் ஜகாத்திற்குத் தேவையான அளவு நகையை விற்று அதன் மூலம் ஜகாத்தை வழங்கலாம். அவ்வாறு செய்யும் போது கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத்தை செலுத்த வேண்டிய அவசியமே ஏற்படாது.

Also Read this :
http://aleemqna.blogspot.in/2010/08/blog-post_22.html

-> Q/A Ehathuvam Sep 06

No comments:

Post a Comment