பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 22, 2010

இணை வைப்பவர்களுக்குப் பாவ மன்னிப்பு தேடுவது ??

? இணை வைப்பவர்களுக்குப் பாவ மன்னிப்பு தேடுவது முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும், நபிக்கும் தடுக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் 3:159 வசனத்தில், அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! என்று கூறுகின்றானே! இது யாரைக் குறிக்கிறது என்பதை விளக்கவும்.
இணை கற்பிப்பவர்களுக்காகப் பாவ மன்னிப்பு தேடக் கூடாது என்பது தான் திருக்குர்ஆனின் தீர்ப்பாகும். ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த வசனம் முஃமின்களைக் குறித்தே கூறுகின்றது.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)

''முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்'' என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்களுடன் இருந்தவர்களைப் பற்றியே இந்த வசனம் பேசுகின்றது.

எனவே பாவ மன்னிப்புத் தேடுமாறு இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த நபித் தோழர்களுக்காகத் தான் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தின் முன் பின் வசனங்களைப் பார்க்கும் போது, உஹதுப் போர் குறித்து இந்த வசனங்கள் கூறுகின்றன.

இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் ஓட்டம் பிடித்தோரை அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழி தவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 3:155)

இந்த நபித் தோழர்கள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான் 3:159 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். எனவே இந்த வசனம் இணை வைப்பவர்களுக்காகப் பாவ மன்னிப்பு தேடுமாறு கூறவில்லை. முஃமின்களுக்குப் பாவ மன்னிப்பு தேடுமாறு தான் கட்டளையிடுகின்றது

-> Q/A Ehathuvam Oct 06

No comments:

Post a Comment