#நோன்பை_விட்டவருக்குப்_பரிகாரம்_உண்டா?
شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًۭى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍۢ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍۢ فَعِدَّةٌۭ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ⭘
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கு அல்லாஹ் எளிதையே நாடுகிறான். உங்களுக்கு அவன் சிரமத்தை நாடவில்லை. நீங்கள் எண்ணிக்கையை முழுமைப்படுத்துவதற்கும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி, நன்றி செலுத்துவதற்காகவும் (இச்சலுகையை வழங்கினான்.)
அல் குர்ஆன் - 2 : 185
நோன்பு நோற்பதற்குச் சக்தியுள்ளவர் அதை விட்டுவிட்டால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முதலில் சட்டம் இருந்தது. பின்னர் சக்தியுள்ளவர் கண்டிப்பாக நோன்பு நோற்றே ஆகவேண்டும் என அச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது. இதனைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
“அதற்குச் சக்தி பெற்றவர்கள் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்” எனும் (2:184) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் “உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்!” என்ற (2:185) வசனம் அருளப் பெற்றது.
அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி), நூல்கள்: புகாரி(4507), முஸ்லிம்(2104)
2:185 வசனத்தின்படி சக்தியுள்ளவர்கள் கண்டிப்பாக நோன்பு நோற்க வேண்டும் என்ற சட்டம் பெறப்படுகிறது.
யாரையும் அவருடைய சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் நிர்ப்பந்திக்க மாட்டான் (அல்குர்ஆன் 2:286) என்ற வசனத்தின்படி அறவே நோன்பு நோற்க முடியாத நிரந்தர நோயாளிகள், முதியவர்கள் ஆகியோர் நோன்பை விடுவதால் எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
No comments:
Post a Comment