வழிகெடுக்கும் நவீன ஸலஃபிக் கொள்கை
இஸ்லாத்தின் அடிப்படை ‘வஹீ’ எனும் இறைச் செய்தி மட்டும்தான். வஹீ அல்லாத எந்த ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படையாக ஆகாது. இதனை திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் மிகத் தெளிவாக, கடுகளவும் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றன.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
(அல்குர்ஆன்:7:3)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
(அல்குர்ஆன்:6:106)
உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்:43:43, 44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (இறைவனை) மறுப்பவர்கள்.
(அல்குர்ஆன்:5:44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன்:5:45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.
(அல்குர்ஆன்:5:47)
மேற்கண்ட இறைவசனங்களும், இன்னும் நூற்றுக் கணக்கான இறைவசனங்களும், நபிமொழிகளும் இறைச் செய்தி மட்டும்தான் மார்க்கம் என்ற தூய கொள்கையைப் பறைசாற்றுகின்றன.
இவ்வாறு இருக்கையில் நபித்தோழர்களையும் பின்பற்ற வேண்டும் என்று நவீன ஸலஃபி கொள்கையினர் கூறுகின்றனர். எனவே அது தொடர்பாக அவர்கள் கூறும் கூற்றுகளின் உண்மை தன்மையை அறிந்து கொள்வோம்.
திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா?
இறைச் செய்தியை மட்டும் தான் திருக்குர்ஆன் பின்பற்றச் சொல்கிறது என்பதற்குப் பல்வேறு வசனங்களைச் சான்றாக இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால் நவீன வழிகெட்ட ஸலஃபிக் கொள்கையைச் சார்ந்தவர்கள் திருக்குர்ஆன் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்வதாகக் கூறி அதற்கு சில வசனங்களையும் முன்வைக்கின்றனர்.
பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா?
9வது அத்தியாயம் 100வது வசனத்தில் ஆரம்ப கால அன்சாரி ஸஹாபாக்கள் மற்றும் முஹாஜிர் ஸஹாபாக்கள் ஆகியோரைப் பற்றிக் கூறிவிட்டு
وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ
(வல்லதீன இத்தபஊஹும் பி இஹ்சான்) என்று குறிப்பிட்டுள்ளான்.
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபஊ” என்ற சொல்லிற்கு ‘‘பின்பற்றியவர்கள்” என்ற பொருளை ஸலஃபிகள் கொடுக்கின்றனர்.
‘‘பின்பற்றியவர்கள்” என்று பொருள் செய்வதன் மூலம் இவ்வசனம் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்வதாக நவீன வழிகெட்ட ஸலஃபிகள் வாதிக்கின்றனர்.
‘‘இத்தபஅ” என்ற வார்த்தைக்கு ‘‘பின்பற்றினான்” என்று பொருள் இருப்பதைப் போன்று ‘‘பின் தொடர்ந்தான்”, ‘‘அடுத்து வந்தான்” என்ற பொருளும் உள்ளது.
அதாவது ஒருவரின் கருத்தைப் பின்பற்றுவதற்கு ‘‘இத்தபஅ” என்ற சொல் பயன்படுத்தப்படுவதைப் போன்று ஒருவர் முன்னால் செல்ல மற்றொருவர் அவருக்குப் பின்னால் செல்வதைக் குறிக்கவும் ‘‘இத்தபஅ” என்ற அரபிச் சொல் பயன்படுத்தப்படும்.
இதனைப் பின்வரும் சான்றுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا ، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا ، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ ، فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய ஜனாசாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காக தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் இரண்டு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை போன்றதாகும். எவர் அதற்காகப் (பிரார்த்தனைத்) தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ அவர் ஒரு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)
நூல்: புகாரி (47)
மேற்கண்ட ஹதீஸில் ‘‘ஜனாசாவைப் பின்தொடர்தல்” என்பதைக் குறிக்க ‘‘இத்தபஅ” என்ற வார்த்தை வந்துள்ளது.
இங்கே ‘‘இத்தபஅ” என்பதற்கு ‘‘ஜனாசாவைப் பின்பற்றுதல்” என்று பொருள் செய்து ஒருவர் ஜனாசாவின் கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என வாதிட்டால் அதனை நாம் மடமைத்தனம் என்றும், வழிகேடு என்றுமே கூறுவோம். ஜனாசா என்பதே உயிரற்றது. அது எந்தக் கருத்துக்களையும் கூறாது. அப்படி இருக்கையில் இங்கே ‘‘ஜனாஸாவைப் பின்பற்றுதல்” என்று பொருள் செய்ய இயலாது. மாறாக ‘‘ஜனாசாவைப் பின் தொடர்தல்” ‘‘ஜனாசாவிற்குப் பின்னால் செல்லுதல்” என்ற பொருளைத்தான் செய்ய முடியும்.
இதிலிருந்து ‘‘இத்தபஅ” என்ற சொல்லுக்குப் ‘‘பின் தொடர்தல்” என்ற பொருளும் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
நபியவர்கள் முன்னால் செல்ல அவர்களைப் பின்தொடர்ந்து தான் சென்றதைப் பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது ‘‘இத்தபஃதுன் நபிய்ய” – ‘‘நான் நபியைப் பின்தொடர்ந்து சென்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க புகாரி 155)
முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் தண்ணீர் நிரம்பிய தோல் பையுடன் நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள் என்பதைக் குறிப்பிடும் போது ‘‘ஃபத்தபஅஹுல் முகீரா” – ‘‘முகீரா அவரைப் பின்தொடர்ந்து சென்றார்” என்றே குறிப்பிட்டுள்ளார்கள் . (பார்க்க புகாரி 203)
”இத்தபஅ” என்ற சொல்லுக்கு ‘‘பின்னால் வந்தான்”, ‘‘பின்னால் சென்றான்” என்ற பொருளும் உள்ளது என்பதை மேற்கண்ட வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இப்பொழுது 9:100வது வசனத்திற்கு ஆரம்பகால ஸஹாபாக்களைப் பின்தொடர்ந்தவர்கள் என்று பொருள் செய்வது சரியா? அல்லது ஆரம்பகால ஸஹாபாக்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றியவர்கள் என்று பொருள் செய்வது சரியா? என்பதைக் காண்போம்.
நவீன வழிகெட்ட ஸலபிகள் செய்வதைப் போன்று ‘‘ஆரம்பகால ஸஹாபாக்களை மார்க்கமாகப் பின்பற்றியவர்கள்” என்று பொருள் செய்தால் அது இணைவைப்புக் கொள்கையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். ஏனெனில் வஹியைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என திருமறைக் குர்ஆனின் ஏராளமான வசனங்கள் குறிப்பிடுவதை நாம் குறிப்பிட்டோம்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்
(அல்குர்ஆன்:7:3)
இறைவன் அல்லாத வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என திருக்குர்ஆன் 7:3வது வசனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மார்க்க விஷயத்தில் இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களைப் பின்பற்றுவது இணைவைத்தல் என்பதையும் மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இறைவன் தன்னுடைய வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும் வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என்று கூறிய பிறகு நாம் இறைவன் அல்லாத மனிதர்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றினால் அது இணைவைப்பாகும்.
இதை திருமறைக்குர்ஆன் மற்றொரு வசனத்தில் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (இறைவனை) மறுப்பவர்கள்.
(அல்குர்ஆன்:5:44)
மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வுடைய சொல்லை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதையும், இறைவனல்லாத மற்றவர்களின் கருத்துக்களை மார்க்கமாக்குவது இணைவைப்பு என்பதையும் திருமறை வசனங்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
9:100வது வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘‘இத்தபஅ” என்ற சொல்லிற்கு நவீன வழிகெட்ட ஸலபிகள் பொருள் செய்வதைப் போன்ற ‘‘ஸஹாபாக்களைப் பின்பற்றுதல்” எனப் பொருள் செய்தால் குர்ஆனிலே நேர் முரண்பாடு ஏற்படுகிறது. 7வது அத்தியாயம் 3வது வசனம் இறைச் செய்தியை மட்டுமே மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என்கிறது.
இதற்கு நேர் மாற்றமாக 9:100வது வசனம் ஸஹாபாக்களின் கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்றலாம் என்ற கருத்தைத் தருகிறது. 7:3 வசனத்தின் படி இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கமாக்குதல் இணைவைப்பு.
9:100வது வசனத்தின் படி ஸஹாபாக்களின் கருத்தை மார்க்கமாக்கலாம். அது இணைவைப்பு அல்ல என்ற கருத்து வருகிறது. ஸலஃபுகளின் செய்கின்ற பொருள் இணைவைப்பில் கொண்டு போய் தள்ளுகிறது என்பது மிகத் தெளிவாகிறது. அப்படியென்றால் 9:100 வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபிஊ” என்ற சொல்லின் சரியான பொருளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
No comments:
Post a Comment