பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

ஷைத்தான் என்னை நோயாலும் துக்கத்தாலும் தீண்டி விட்டான் ??

? ஷைத்தான் என்னை நோயாலும் துக்கத்தாலும் தீண்டி விட்டான் என்று அய்யூப் நபி பிரார்த்தித்ததாக குர்ஆன் கூறுகின்றது. இதை வைத்து, ஷைத்தான் உடலளவில் பாதிப்பை ஏற்படுத்துவான் என்று கேரள ஸலஃபிகள் கூறுகின்றனரே! விளக்கவும்.



நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). (அல்குர்ஆன் 38:41,42)

இந்த வசனத்தில் அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது ஷைத்தான் தீண்டி விட்டான் என்று கூறுகின்றார்கள். இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது. கெட்ட காரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்று மரியாதை நிமித்தமாக அவ்வாறு அய்யூப் (அலை) கூறினார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஷைத்தானின் பணி என்ன என்பதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகின்றான்.

''அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். ''நீ அவகாசம் அளிக்கப் பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான். ''நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று (ஷைத்தான்) கூறினான். (அல்குர்ஆன் 7:14லி16)

இந்த வசனங்களில் ஷைத்தானின் பணி என்ன என்பது பற்றி கூறப்படுகின்றது. கியாம நாள் வரை மக்களை வழி கெடுப்பதற்காக இறைவனிடம் ஷைத்தான் அவகாசம் வாங்கியுள்ளான். இதைத் தவிர வேறெந்த அதிகாரமும் ஷைத்தானுக்கு இல்லை. மனிதனுக்கு நோயை ஏற்படுத்துவதோ, அல்லது அதைக் குணப்படுத்துவதோ அவனது வேலை இல்லை.

மனிதனுக்கு நோயை ஏற்படுத்தும் அதிகாரம் ஒருவேளை ஷைத்தானுக்கு இருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் அவன் அதைச் செய்ய மாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். ''தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே! (அல்லாஹ்வின் தூதரே!) தங்களுக்கு இதனால் இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ''ஆம்! ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்குப் பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரீ 5647

இந்த ஹதீஸின் படி ஒருவருக்கு நோய் ஏற்படுவதால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மனிதனை வழி கெடுப்பதாகச் சபதமேற்றுள்ள ஷைத்தானுக்கு இது மிகப் பெரிய இழப்பாகும். பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மனிதனைச் சுவனத்திற்கு அனுப்பி வைக்கும் காரியத்தை ஒரு போதும் ஷைத்தான் செய்ய மாட்டான்.

--Q/A Ehathuvam May 06

No comments:

Post a Comment