பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, August 15, 2025

வணக்க வழிபாடுகளில் இணைவைக்கக் கூடாது

வணக்க வழிபாடுகளில் இணைவைக்கக் கூடாது 

அல்லாஹ்விற்கு மட்டும் நாம் செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்குச் செய்தால் அதுவும் இணைவைப்பாகும். உதாரணமாக சத்தியம் செய்வது, நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது, தொழுவது, பிரார்த்திப்பது, நோன்பு நோற்பது, சிரம் பணிவது இது போன்று அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களை எவருக்காவது ஒருவன் செய்து விடுவானால் அவன் இணைவைத்தவனாகி விடுவான். வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. இவற்றில் எதையாவது பிறருக்குச் செய்து விட்டால் இணைவைத்தவராக ஆகிவிடுவார்.

قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖؕ اِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ‏
நான் அல்லாஹ்விற்கு இணைகற்பிக்காமல் அவனை வணங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளது என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (13 : 36)

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ  حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ‌ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் (98 : 5)

   وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــًٔـا‌ ؕ
அல்லாஹ்விற்கு நிகராக எதையும் ஆக்காமல் அவனை வணங்குங்கள்.

அல்குர்ஆன் (4 : 36)

அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைவனின் தூதரே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் (இன்ன) குடும்பத்தார் ஆவோம். எங்களுக்கும், உங்களுக்குமிடையே முளர் குலத்து இறை மறுப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். இதனால் (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்கு ஒரு கட்டளையிடுங்கள். அதை(ச் செயல்படுத்துமாறு) எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நாங்கள் கட்டளையிடுவோம். அதைக் கடைப்பிடித்து நடந்தால் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான்கு விஷயங்களை உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்: அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டுமே வணங்குங்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசு பொது நிதிக்கு)ச்
செலுத்துங்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம்-26

இணைவைக்காமல் வழிபடுவது அடியார்களின் கடமை இணைவைக்காமல் வணங்குவது நம்மீது கடமையாகும்.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் உஃபைர் என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா? என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று பதில் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும்.

அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணைகற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும் என்று பதில் கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆத் (ரலி), நூல் : புகாரி-2856

No comments:

Post a Comment