பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, August 15, 2025

இணைவைக்காமல் வழிபடுவதே இஸ்லாமில் முதல் கடமை

இணைவைக்காமல் வழிபடுவதே இஸ்லாமில் முதல் கடமை

முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை முதலாவதாக அந்நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடத்தில் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிய போது அவர்களிடம், நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏகஇறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து(ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்துநேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகின்ற ஸகாத்தை அவர்களுடைய செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஓப்புக் கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக்கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி-7372 

அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கை நபியவர்களின் பிரச்சாரத்தில் முதன்மையானதாக இருந்தது. அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்? என்று ஹெராக்ளியஸ் (என்னிடம்) கேட்டார். நான் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காமல் அவன் ஒருவனையே வணங்குங்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்’ கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன்.

அறிவிப்பவர் : அபூ சுஃப்யான் (ரலி), நூல் : புகாரி-7 

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே நான் அவசியம் கடைபிடிக்க வேண்டியதை எனக்குக் கூறுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்விற்கு இணையாக நீர் எதையும் ஆக்காமல் அவனை வணங்க வேண்டும். கடமையான தொழுகையைத் தொழ வேண்டும். கடமையான ஸகாத்தை நீ நிறைவேற்ற வேண்டும். முஸ்லிமிற்கு நலம் நாட வேண்டும். இறை நிராகரிப்பாளனை விட்டு விலகிவிடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : அஹ்மத்-19153 (18364)

இணைவைக்காமல் வழிபடுவதே இஸ்லாமிய கொள்கை

அல்லாஹ்வைûயும், மற்றவர்களையும் வழிபடுவது இஸ்லாமியக் கொள்கையல்ல. மாறாக அல்லாஹ்விற்கு எந்த இணையும் கற்பிக்காமல் அவனை மட்டும் வணங்குவதே இஸ்லாமியக் கொள்கையாகும். நபியவர்களிடத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்ட போது இணைவைக்காமல் வழிபடுவது என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு நீர் எதனையும் இணையாக்காமல் அவனை வணங்குவதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-50 

இஸ்லாமின் முதல் ஆணிவேராக விளங்கக் கூடிய லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையின் பொருளை விளங்கினால் யாரும் இணைவைக்க மாட்டார்கள். அல்லாஹ் கடவுள் ஆவான் என்ற பொருளை இந்த வார்த்தை தரவில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கடவுள்கள் கிடையாது என்று தெளிவான கருத்தை தரக்கூடிய விதத்தில் இந்த வார்த்தை அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வையே வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (ஆகியனவே அந்த ஐந்தும்.)

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : முஸ்லிம்-20

No comments:

Post a Comment