தரீக்காவைப் பின்பற்றுவது இணைவைப்பாகும்
தங்களுடைய சைகுமார்கள் மறைவான விசயங்களையெல்லாம் அறிவார்கள் என்று தரீக்காவைப் பின்பற்றக் கூடியவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டும் இருப்பதால் இவ்வாறு நினைப்பது இணைவைப்பாகும்.
அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!
அல்குர்ஆன் (6 : 50)
அந்த நேரம் எப்போது வரும்? என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்றுதான் வரும் என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
அல்குர்ஆன் (7 : 187)
நபி (ஸல்) அவர்களுக்கே மறைவான ஞானம் இல்லை என்கிற போது வேறு யாருக்கும் மறைவான ஞானம் இருக்கவே முடியாது.
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (7 : 188)
நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று ஒரு சிறுமி நபியவர்களைப் பார்த்து பாடிய போது அவ்வாறு பாடாதே. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானதை அறிய முடியாது என்று நபியவர்கள் கூறினார்கள்.
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸை கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் ரஹ்.. அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள் (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்க் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல் : புகாரி (4001)
நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என யார் உங்களிடம் அறிவிக்கிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிய மாட்டார் (27:65) என்று கூறுகின்றான்.
அறிவிப்பவர் : மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்)
நூல் : புகாரி (7380)
No comments:
Post a Comment