பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 21, 2025

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்


மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்

சகுணம் பார்த்தல் இணைவைப்பாகும்

பூணை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும்; கை அரித்தால் செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம். ஆந்தை கத்தினால் வீட்டிற்கு ஆகாது. பல்கத்தினால் அது நற்சகுணம். இப்படி பலவிதமான மூடநம்பிக்கைகளை மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நன்மை வந்தாலும் தீமை ஏற்பட்டாலும் அது அல்லாஹ்வின் நாட்டத்தால் வந்தது என்றுதான் நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (9 : 51)

குறிப்பிட்ட நட்சத்திரங்களால்தான் மழை பெய்கிறது என்ற நம்பிக்கை நபியவர்களின் காலத்தில் சில மக்களிடம் இருந்தது. அல்லாஹ்வால் நடந்தது என்று கூறுவதற்குப் பதிலாக நட்சத்திரத்தால்தான் மழை வந்தது என்று நம்புவதை இறை மறுப்பு என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே நாமும் இதனால்தான் நடந்தது. இதனால்தான் நடக்கவில்லை என்று அல்லாஹ்வை மறந்து கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள்.

தற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினர். அப்போது என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் தயவாலும், அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சைத் பின் காலித் (ரலி)

நூல் : புகாரி (846)

சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும். சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அபூதாவுத் (3411)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும் என்று சொன்னார்கள். மக்கள், நற்குறி என்பதென்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (5754)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (6472)

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல் இணைவைப்பாகும்

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து காரியங்களைத் துவங்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. குறிப்பிட்ட நேரம் தீங்கிழைக்கும் என்றும் குறிப்பிட்ட நேரம் நன்மை பயக்கும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். நன்மை தீமை யாவும் அல்லாஹ் விதித்த விதியின் படியே நடக்கிறது என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக குறிப்பிட்ட காலத்தினால்தான் நன்மையும் தீமையும் ஏற்படுகிறது என்று நம்புவது இணைவைப்பாகும்.

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட காலத்தை கெட்ட காலம் என்று கூறுவது இறைவனை ஏசுவதற்கு நிகரானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (7491)

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத்தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல. எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை. உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை.

அவர்களில் அனேகமாக அனைவருமே தரித்திர நிலையில்தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment