சூனியத்தை நம்புவது என்றால் என்ன?
அல்லாஹ் நாடினால் சூனியம் நடக்குமா?
என்ற கேள்விகளுக்கு பதில்.
சூனியத்தை நம்புவது என்றால் என்ன?
சூனியத்தை நம்புபவன் என்றால் அதன் சரியான பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சூனியம் என்று ஒரு பித்தலாட்டம் இருக்கிறது என்பதை நாமும் நம்புகிறோம். இந்த ஹதீஸ் அதைக் கூறவில்லை. சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று நம்புவதையே இது குறிக்கிறது.
அமைப்பில் கூறப்பட்ட பின்வரும் நபிமொழியில் இருந்து இதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
حَدَّثَنَا عَبْدُ الَّلِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ الَّلِ بْنِ عَبْدِ الَّلِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الُْهَنِِّ
أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ الَّلِ صَلَّى الَّلُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَةَ الصُّبْحِ بِالُْدَيْبِيَةِ عَلَى إِثْرِ سََاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الَّلُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ الَّلِ وَرَحَْتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ
ஸைத் பின் காலித் அல்ஜூஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹூதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹூத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, ‘உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூ தருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினர். அப்போது ‘என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர்.
‘அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி – 1038
இந்த ஹதீஸில் நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும் எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும். அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்றும் நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.
யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. நட்சத்திரத்தையே ஈமான் கொண்டுள்ளான். இது போல் சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாது.
சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினாலே அவன் அல்லாஹ்விற்கு இணைவைத்து விட்டான். அவன் சுவனம் புகமுடியாது என்பதுதான் மேற்கண்ட நபிமொழியின் கருத்து என்பதை பின்வரும் ஹதீஸில் இருந்தும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
(مسند أحمد بن حنبل )
حدثنا عبد الله حدثني أبي ثنا يحيى عن عبيد الله بن الأخنس قال حدثنا الوليد – 2000 بن عبد الله عن يوسف بن ماهك عن بن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال :
ما اقتبس رجل علما من النجوم الا اقتبس بها شعبة من السحر ما زاد زاد تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح رجاله ثقات رجال الشيخين غير الوليد بن عبدالله
எவர் ஒருவர் நட்சத்திர ஜோசியத்திலிருந்து ஒரு கல்வியைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு கிளையையே கற்றுக்கொண்டார். அதிகப்படுத்த வேண்டியதை அதிகப்படுத்திக்கொள்கிறார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அஹ்மத் (2000)
ஏனெனில் நட்சத்திரத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதே இணைவைத்தல் என்பதை முதலாவது நபிமொழியும், அந்த நட்சத்திர ஜோசியத்தை கற்பது சூனியம் என்பதை இரண்டாவது நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது.
நட்சத்திரத்தினால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நம்புவதினாலேயே ஒருவன் நட்சத்திர ஜோசியம் பார்க்கிறான். எனவே நட்சத்திர ஜோசியம் சூனியம் என்பதின் கருத்து “நட்சத்திரத்தினால் பாதிப்பு ஏற்படும்” என்று நம்புவதே. இதன் அடிப்படையில் சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் புகமாட்டான் என்பது “சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதையே குறிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஒருவன் “சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதினாலேயே” சூனியக்காரனிடம் செல்கிறான். எனவே சூனியக்காரனிடம் சென்று சூனியம் வைப்பது கூடும் என்று நம்புபவனும் இணைவைப்பவன்தான். தஜ்ஜால் மூலம் நிகழும் அற்புதங்களை நாம் நம்பவில்லையா அது போன்றுதான் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவதும். அவ்வாறு நம்பினால் இணைவைத்தால் ஆகாது என்று சிலர் வாதிக்கின்றனர்.
இது மிகவும் முட்டாள் தனமான வாதமாகும்.
தஜ்ஜால் இறைவனைப் போன்று அற்புதம் செய்வான் என்று நாம் நம்பிக்கை கொள்ளவில்லை. தஜ்ஜாலுக்கு இறைவனுடைய ஆற்றல் கடுகளவு கூட கிடையாது என்றே நாம் நம்புகிறோம். மாறாக தஜ்ஜால் மூலம் இறைவன் எதை வெளிப்படுத்த வேண்டும் என்று இறைவன் நாடிவிட்டானோ அவற்றை மட்டுமே அவன் மூலம் இறைவன் வெளிப்படுத்துவான்.
ஒரு குழந்தை உயரமான மாடியிலிருந்து விழுந்து உயிர் பிழைத்து விட்டால் அதனை நாம் அந்தக் குழந்தையின் ஆற்றல் என்று கூறமாட்டோம். மாறாக அந்தக் குழந்தையில் இறைவன் வெளிப்படுத்திய அற்புதம் என்றே நாம் நம்புவோம். இது போன்றுதான் தஜ்ஜாலை நாம் நம்பிக்கை கொள்வதும்.
தஜ்ஜால் இறைவனைப் போன்று அற்புதங்களைச் செய்வான் என்று ஒருவன் நம்பினால், அல்லது தஜ்ஜாலுக்கு இறைவன் அற்புதம் செய்யும் ஆற்றலை இறைவன் வழங்கி விட்டான் என்று ஒருவன் நம்பினால் அதுவும் இணைகற்பிக்கும் நம்பிக்கையே.
ஆனால் சூனியத்தை நம்புபவர்கள் “சூனியத்தினால் அல்லாஹ்வைப் போன்று பாதிப்பு ஏற்படுத்தும் சக்தியை இறைவன் நாடினால் வழங்குவான்” என்றே நம்புகின்றனர். அல்லாஹ் தன்னைப் போன்ற ஆற்றலை யாருக்கும் வழங்கமாட்டான். என்பதே தவ்ஹீத் கொள்கை.
“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுக்கு அதிகாரத்தில் எந்தக் கூட்டாளியும் இல்லை. (உதவியாளனை ஏற்படுத்துவது) இழிவு என்பதால் அவனுக்கு எந்த உதவியாளனும் இல்லை” என்று கூறுவீராக! அவனை அதிகமதிகம் பெருமைப்படுத்துவீராக! திருக்குர்ஆன் 17:111
அல்லாஹ்வைப் போன்று சூனியக்காரன் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் நாடுவான் என்பது இணைவைப்புக் கொள்கை. எனவே தஜ்ஜால் தொடர்பான நம்பிக்கையும், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒன்றல்ல . இரண்டிற்கும் வானத்திற்கும், பூமிக்கும், மலைக்கும் மடுவிற்கும் அளவிலான வித்தியாசம் உள்ளது.
வீடியோ வடிவில் அறிய...
https://www.facebook.com/share/v/173scnJEih/
No comments:
Post a Comment