பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 25, 2025

பெயரில் இணைவைப்பு இருக்கக் கூடாது

பெயரில் இணைவைப்பு இருக்கக் கூடாது

அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களைச் சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்) ஷாஜஹான் (உலகின் அரசன்)‘ஷாகுல் ஹமீது புகழுக்குரியவனின் அரசன் ஆகிய பெயர்கள் சூட்டப்படுகின்றன. இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துச் சூட்ட வேண்டும். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : புகாரி (6205)

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது.

அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானத்தின் தந்தை என குறிப்புப் பெயர் வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விசயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்து கொள்வார்கள்.

(ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷ‚ரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷ‚ரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷ‚ரைஹ் (ஷ‚ரைஹின் தந்தை) ஆகும் எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹானிஃ (ரலி)

நூல் : நஸயீ (5292)

அறியாமைக் காலத்தில் என்னுடைய தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பர் : அப்துர் ரஹ்மான் (ரலி)

நூல் : அஹ்மத் (16944)

No comments:

Post a Comment