பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, August 23, 2025

தர்ஹாக்கள் இணைவைப்பின் கேந்திரங்கள்


தர்ஹாக்கள் இணைவைப்பின் கேந்திரங்கள்

மண்ணறைகள் மண்ணறைகளாகத்தான் இருக்க வேண்டும். அதை பள்ளிவாசல்களாகவோ புனிதத் தலங்களாகவோ கருதுவது இணைவைப்பாகும். யூத கிறிஸ்தவர்கள் நபிமார்களின் மண்ணறைகளைப் புனிதத் தலங்களாகக் கருதிய காரணத்தினால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள். தர்ஹாக்கள் என்ற பெயரில் நல்லடியார் என்ற சான்று இல்லாதவர்களுக்கும் குடிகாரனுக்கும் குளிக்காதவனுக்கும் புனிதத் தலங்களை ஏற்படுத்துபவர்கள் சந்தேகமில்லாம் இணைவைப்பவர்களே.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கி விட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்தி-ருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (436)

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (427)

ஹராம்களின் ஒட்டுமொத்த உருவம்

நபியவர்கள் தடுத்த பல விசயங்கள் தர்ஹாக்களில் அரங்கேறுவதால் ஹராம்களின் ஒட்டுமொத்த உருவமாக தர்ஹாக்கள் பரிணமித்துக் கொண்டிருக்கிறது.

கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டிடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (1765)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்)

நூல் : முஸ்லிம் (1764)

சந்தனக் கூடு உரூஸ் கொண்டாட்டங்கள்

சந்தனக் கூடு உரூஸ் கொண்டாட்டங்களும் நடுத்தெருவில் கப்பல் இழுப்பதும் கோவில் திருவிழாக்களை காப்பியடித்து உருவாக்கப்பட்டதாகும். இறை மறுப்பாளர்கள் தேரை இழுப்பது போல் கப்ரு வழிபாட்டுக்காரர்கள் கப்பலை இழுக்கிறார்கள்.

இந்த அந்நியக் கலாச்சாரம் இஸ்லாமில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்கு நபியவர்கள் அற்புதமான அரண்களை ஏற்படுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். மக்களிலேயே சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னுடைய மண்ணறையில் விழா கொண்டாடக் கூடாது என்று தடை பிறப்பித்துள்ளார்கள்.

நபியவர்களுடைய மண்ணறையை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடக் கூடாது என்றால் அவர்களின் கால்தூசுக்கும் சமமாகாத முகவரியில்லாத சக்தியற்ற மனிதர்களின் மண்ணறைகளில் விழாக் கொண்டாடுவதற்கு எள்ளளவு கூட அனுமதி கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் வீடுகளை அடக்கத் தலங்கலாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவுத் (1746)

தனது மண்ணறையில் மக்கள் குழும்பிவிடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அது என்னை வந்தடையும் என்று போதிக்கிறார்கள். இதை விளங்காத காரணத்தினால் ஹஜ் என்ற உயர்ந்த வணக்கத்தை புரிபவர்கள் மதீனாவில் உள்ள நபியவர்களின் மண்ணறைக்குச் சென்று அவர்களிடம் பிரார்த்தனை செய்கின்றனர். நபியவர்கள் தாங்கள் சொல்வதைச் செவியுறுகிறார்கள் என்று எண்ணி இந்த இணைவைப்பைச் செய்கின்றனர். நபியவர்கள் மீது நாம் கூறும் சலவாத்தை வானவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பூமியில் சுற்றித் திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமூகத்தினரிடமிருந்து சலாத்தை எனக்கு எத்தி வைக்கிறார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : அஹ்மத் (3484)

No comments:

Post a Comment