திருச்சியில் நடந்த ஒரு ஷியா மாநாடு

கடந்த 14.7.2024 அன்று திருச்சி மாவட்ட, மாநகர, வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றது. அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் மாநாடு என்று தலைப்பிட்டிருந்தாலும் நாம் இந்த விமர்சனக் கட்டுரைக்கு திருச்சியில் நடந்த ஷியா மாநாடு என்று தலைப்பிட்டிருக்கின்றோம்.
இவ்வாறு தலைப்பிட்டதற்குக் காரணம் இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் பி.ஏ. காஜா முஹைதீன் பாகவி, சதீத்துத்தீன் பாகவி போன்றவர்கள் தமிழகத்தில் பக்கா ஷியா கொள்கையை பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யக் கூடிய பரேலவிகள். ஷியா கொள்கை பரப்புரையாளர்கள்.
இறந்து போன 12 இமாம்கள் உலகிற்குத் திரும்ப வருவார்கள் என்பது ஷியா மதத்தின் உறுதியான கொள்கையாகும். அந்தக் கொள்கையை எள்ளளவும் எள்முனையளவும் அடிபிறழாது பிசகாது அப்படியே பின்பற்றும் ஆலிம்கள் இவர்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம். இவர்கள் ஓதுகின்ற மவ்லிதுகள் முதல் ஆதாரமாகும். மவ்லிதில் இடம்பெற்றிருக்கும் யாகுத்பா என்ற பாடல் வரிகளில் இடம் பெறும் சில கவிதை வரிகள் இதோ:

ومن ينادي اسمي ألفا بخلوته عزما بهمته صرما لغفوته أجبته مسرعا من أجل دعوته فليدع يا عبد القادر محي الدين

யார் தனிமையில் தனது உறக்கத்தைத் துறந்து உறுதியான நம்பிக்கையுடன் எனது பெயரை ஆயிரம் தடவைகள் அழைக்கின்றாரோ அவர் அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் பதிலளிக்கின்றேன். அதனால் அவர் யா அப்தல் காதிர் முஹ்யித்தீன் என்று அழைக்கட்டும்!
இவ்வாறு அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கவிதை வரிகள் தெரிவிக்கின்றன. இதன் படி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை ஆயிரம் முறைகள் அழைத்து திக்ர் செய்யும் சபைகள் நடைபெறுகின்றன. அதிலும் இந்த திக்ருகள் ஒரு காட்டுக் கூச்சலில் விளக்கை அணைத்துக் கொண்டு இருட்டில் தனித்துவமாக நடைபெறுகின்றன. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி வருகையளிக்கின்றார் என்று திக்ரில் கலந்துக் கொள்பவர்கள் மட்டுமல்ல! பி.ஏ.காஜா முஹ்யித்தீன் பாகவி போன்றோரும் அழுத்தம் திருத்தமாக நம்புகின்றார்கள். இதில் வேதனையும் வேடிக்கையும் என்ன தெரியுமா?

إن الأموات يرجعون إلى الدنيا

‘இறந்தவர்கள் உயிருடன் உலகத்திற்குத் திரும்புவார்கள் என்பது ராஃபிளிய்யா என்ற ஷியா பிரிவினரின் கொள்கையாகும்’ என்று, தான் கைப்பட எழுதிய குன்யத்துத் தாலிபீன் என்ற நூலில் தெரிவித்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களையே, அவர்கள் இறந்த பிறகு மீண்டும் உலகத்திற்கு, தங்கள் ஊருக்கு, தங்கள் வீட்டிற்கு வருகின்றார் என்று நம்பி இந்தப் பரேலவிச பாசறைகள் இரவில் இருட்டில் அன்னாரை ஆயிரம் முறை அழைத்து கூப்பிட்டு, கும்பிட்டு, கும்மாளம் போட்டு கூத்தடிப்பது தான்.
அதனால் தான் இவர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த மாநாட்டை நாங்கள் ஷியா மாநாடு என்று குறிப்பிடுகின்றோம்.
நானும் எனது தோழர்களும் எதில் இருக்கின்றோமோ அது தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்த மாநாட்டில் பேசியோர் விளக்கம் கொடுக்கின்றனர். உண்மையில் அவர்கள் அந்தக் கொள்கையில் தான் இருக்கின்றார்களா? என்றால் இல்லை என்பதை அவர்களின் செயல்பாடு தெளிவாக எடுத்துரைக்கின்றது.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி மட்டும் உலகிற்குத் திரும்பி வருவதாக இவர்கள் நம்பவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உலகத்திற்குத் திரும்பி வருகின்றார்கள் என்றும் இவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். அதனால் பரேலவி ஆலிம்களில் சிலர் தங்களுடைய பயானை முடிக்கும் போது எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களை கனவிலும் நனவிலும் கண்டு களிப்போமாக என்று கூறுகின்றனர்.
முஹ்யீத்தீனே நனவில் அதாவது நேரில், இருட்டில் அவதாரமெடுத்து நேராக வரும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாக வருகையளிக்காமல் இருப்பார்களா? இதுதான் இவர்களது உறுதியான நம்பிக்கை.
இந்த அடிப்படையில் காஜா முஹ்யித்தீன் போன்ற ஆட்கள் பக்கா ஷியா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று அடித்துச் சொல்கின்றோம். அவர் கலந்து கொண்ட இந்த மாநாட்டை ஷியா மாநாடு என்று குறிப்பிடுகின்றோம்.

திருக்குர்ஆன் கூறும் தூய கடவுள் கொள்கை

சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்கும் இவர்களின் செயல்பாடுகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைந்திருக்கின்றதா? என்றால் அறவே இல்லை என்பது நிதர்சனமாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை தூய கடவுள் கொள்கையாகும். அந்தக் கொள்கையை குர்ஆன் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களைப் பிரார்த்தியுங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!
அல்குர்ஆன் 7:194
அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல! எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:20,21
இந்த இறைவசனங்களில் “நீங்கள் அழைக்கும் அந்த நல்லடியார்கள் இறந்தவர்கள் ஆவார்கள்; அவர்கள் ஒருபோதும் செவியுறமாட்டார்கள்” என்று அல்லாஹ் தெளிவாகச் சொல்கின்றான்.
எந்த ஊரை நாம் அழித்து விட்டோமோ, அவர்கள் (இவ்வுலகிற்குத்) திரும்பி வர மாட்டார்கள் என அதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.
அல்குர்ஆன் 21:95
இறந்தவர்கள் திரும்ப வரவே மாட்டார்கள் என்று இந்த வசனம் ஆணித்தரமாக நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் அடித்துச் சொல்கின்றது.
இறுதியாக, அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது “என் இறைவனே! நான் விட்டு விட்டதில் நற்செயலைச் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறல்ல! இது அவன் கூறக் கூடிய (வெற்றுச்) சொற்களே! அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பு உள்ளது.
அல்குர் ஆன் 23:99,100
இறந்தவர்கள் செவியுறுகின்றார்கள் என்றோ, பதிலளிக்கின்றார்கள் என்றோ அல்லது அவர்கள் உலகுக்குத் திரும்புகின்றார்கள் என்றோ நம்புபவர்கள் குர்ஆனை மறுப்பவர்கள் ஆவர். குர்ஆன் கூறும் கடவுள் கொள்கையை மறுப்பவர்கள் ஆவர். அவர்கள் திருக்குர்ஆன் கூறும் இந்தக் கொள்கைக்கு நேர்மாற்றமான நம்பிக்கையைக் கொண்டவர்கள் ஆவார்கள். அந்தப் பட்டியலில் உள்ளவர் பி.ஏ. காஜா முஹைதீன் பாகவி. அதனால் தான் இவரை பக்கா பரேலவி, ஷியா கொள்கையாளர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றோம்.
இவர், இறந்தவர்களை அல்லாஹ்வுக்குச் சமமானவர்களாகக் கொண்டு வந்து நிறுத்தி இணைவைப்பு எனும் ஷிர்கைச் செய்கின்றார்.
அல்லாஹ், அவனைத் தவிர எந்தக் கடவுளுமில்லை. அவன் என்றென்றும் உயிரோடு இருப்பவன்; எப்போதும் நிலைத்திருப்பவன்.
அல்குர்ஆன் 2:255
தான் மட்டுமே என்றும் எப்போதும் நீடித்து நிலைத்திருப்பவன் என்று தன்னைப் பற்றி படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகின்றான். ஆனால் இவரது நம்பிக்கையோ அவ்லியாக்கள் என்றென்றும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று நம்புகின்றார். இந்த அடிப்படையில் இவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார். இது ஷியாக்களின் நம்பிக்கையாகும். அதன் அடிப்படையில் இவர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை ஷியா மாநாடு என்று விமர்சிக்கின்றோம்.

தப்லீக் ஆலிம்களிடம் பப்ளிக்கான கேள்விகள்

இந்த மாநாட்டில் மத்ஹபுகளை நம்பிக்கை கொண்டிருக்கின்ற, அதே சமயம் இறைவனுக்கு இணைவைக்காத ஆலிம்கள் இன்றைய உலமா சபையில் இடம்பெற்றிருக்கின்றார்கள். கப்ரு வணக்கத்திற்கு எதிராக யஃகூப் ஹஜ்ரத் போன்றோரின் சிந்தனைப் பிரதிபலிப்புகளைக் கொண்டவர்கள் இதில் அடங்கியிருக்கின்றார்கள். எங்களை அவர்கள் வெறுத்தாலும் எங்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தாலும் கண்ணியமிக்க அந்த உலமாக்களை நாங்கள் மதிக்கின்றோம்.
இப்போது நாங்கள் அந்த கண்ணியமிக்க ஆலிம்களிடம் வைக்கும் கேள்வி இது தான்: இறந்து போன அவ்லியாக்கள் உயிருடன் இருக்கின்றார்களா? அவர்கள் செவியுறுகின்றார்களா? பக்தர்களின் அழைப்பை ஏற்று கப்ருகளிலிருந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி எழுந்து ஓடோடி வந்து உடனே பதில் அளிப்பார்களா? முஹ்யீத்தீன் அப்துல் காதிர் ஜீலானியை 1000 தடவை அழைத்து திக்ரு செய்வது கூடுமா? அவ்வாறு அழைப்பது இணைவைப்பு இல்லையா? இத்தகைய இணைவைப்பு கவிதை வரிகளைப் பொதிந்திருக்கும் இந்தப் பாடல்களை பாடலாமா? இது தான் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையா? என்பது தான் நாம் அவர்கள் முன் வைக்கும் கேள்வியாகும்.
இவ்வாறெல்லாம் நம்புவது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை இல்லையென்றால் அதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். மவ்லிதுகள் கூடாது; இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது கூடாது என்று தெளிவாகப் போட்டு உடையுங்கள்; அதைத் தெளிவுப்படுத்துங்கள் என்று கனிவாய் கேட்டுக் கொள்கின்றோம். இல்லையென்றால் எங்களை எதிர்ப்பதற்காக ஏகத்துவத்திற்கு எதிராகச் செயல்படும் பி.ஏ. காஜா மைதீன் பரேலவி, சதீத்துன் பரேலவி போன்றோர்களிடம் கூட்டு வைத்திருக்கின்றீர்கள் என்று பொருளாகும். இந்தப் பிரகடனத்தை செய்யவில்லை என்றால் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை என்று போடுவதில் எந்த அர்த்தமில்லை. அது ஷியா கொள்கை பிரகடனமாகத் தான் அமையும்.

குமரிமுனையிலிருந்த வந்த பரேலவிச ஏவுகணை

மாநாடு முடிந்ததும் குமரி முனையிலிருந்து ஓர் ஏவுகணை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாவை நோக்கி வீசப்பட்டது. அது பரேலவிச கோட்டையிலிருந்து, ஷியாவின் பட்டாளத்திருந்து அனுப்பப்பட்ட ஸ்கட் ஏவுகணையாகும்.
“திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் (14/07/2024) ஞாயிற்றுக்கிழமை நடந்த சுன்னத் வல் ஜமாத் கொள்கை விளக்க மாநாட்டில் ஜியாறத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, திருச்சி ஜங்ஷன் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷி. முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி அவர்கள் சுன்னத் வல் ஜமாத் கொள்கைக்கு முற்றிலும் எதிரான பதிலை அளித்ததும், அதை மாநில சபையின் பொறுப்பிலிருக்கும் திருச்சி இன்ஆமுல் ஹஸன் காஷிஃபி அவர்கள் ஆதரித்து தொகுத்து விளக்கியதும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
“ஒழுக்கங்களைப் பேணி பரக்கத்தை நாடி நபிமார்கள், இறைநேசர்கள் அடக்கஸ்தலங்களுக்கு பெண்களும் ஜியாரத்திற்குச் செல்லலாம் என்பதே ஷரீஅத்தின் தெளிவான விளக்கம். அல்லாஹ் கொடுத்த ஆற்றலின் அடிப்படையில் வலிமார்களிடம் உதவி தேடலாம் என்பதுதான் மார்க்கம் காட்டித்தரும் வழிமுறை”
இவைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை சுன்னத் வல் ஜமாத் கொள்கை விளக்க மாநாடு என்ற பெயரில் சுன்னத் வல் ஜமாத் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் கருத்தைப் பதிவு செய்த இருவரையும் அவர்களின் பதிலையும் “குமரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது”
இப்படிக்கு மௌலானா மௌலவி, க்ஷ். மாகின் அபூபக்கர் அன்வரி, செயலாளர் குமரி மாவட்ட ஜ.உ. சபை”
இது குமரி மாவட்ட ஜமாஅத்திலிருந்து கொப்பளிக்கும் பரேலவிசமாகும். மாநில ஜமாஅத் உலமாவின் தலைவர் இந்த ரகத்தைச் சார்ந்தவர் தான். 80களின் மத்திய ஆண்டுகளில் ஜமாஅத் உலமா சபையின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பயணித்தவன் என்ற அடிப்படையில் நான் கண்ட உண்மையை இங்கு பகிர்கின்றேன். ஜமாஅத்துல் உலமாவில் கப்ரு வணக்கத்திற்கு எதிராகப் போராடும் போராளிகள் ஒரு பக்கம்!
கப்ரு வணக்கத்திற்கு முட்டுக் கொடுத்து மக்களை முட்டாள்தனமாக நரகத்திற்கு இழுத்துச் செல்லும் ஒரு கூட்டம் இன்னொரு பக்கம். இப்படித் தான் ஜமாஅத்துல் உலமா இரு நேர் எதிர் எதிர் அணிகளைக் கொண்டு இரு செங்குத்து பிளவுகளைக் கொண்டு பயணிக்கின்றது.
அன்றைய கால கட்டத்தில் தஞ்சையில் நடந்த வலிமார்கள் மாநாடு அதை அப்படியே எதிரொலித்தது. அந்த மாநாடு முழுவதுமே அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்தனை கேட்க வேண்டும் என்று ஓர் அணி! அவ்லியாக்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று மற்றொர் அணி என்று இரு அணிகளாகத் தங்கள் பிரச்சாரத்தை அமைத்துக் கொண்டார்கள்.
அப்போது அந்த மாநாட்டில் உபைதுல்லாஹ் காரி அவர்கள், வலிமார்கள் யார்? என்று குர்ஆன் வசனங்களிலிருந்து அப்படியே பிட்டு பிட்டு வைத்தது அப்படியே நெஞ்சிலிருந்து அகல மறுக்கின்றது. அதே சமயம் மாநாட்டு ஏற்பாட்டார்களுக்கும் பரேலவிச உலமாக்களுக்கு அவர்கள் கொடுத்த வலீ பற்றிய விளக்கம் நெஞ்சு வலியை கொடுத்தது என்பது மறுக்க முடியாது. கொள்கை அடிப்படையில் வட துருவமாகவும் தென் துருவமாகவும் நேர் எதிர் முனையில் செயல்படுகின்ற இரு அணிகளையும் சந்திக்க வைப்பது, சிந்திக்க விடாமல் தடுப்பது தவ்ஹீது ஜமாஅத் எதிர்ப்பு என்ற மையப்புள்ளி தான் என்பதை இங்கு பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருச்சி மாவட்ட ஜமாஅத்தில் உலமாவினர் ஜியாரத் பற்றி அளித்த விளக்கம், குமரி ஜமாஅத்துல் உலமாவின் உள்ளத்தைக் கீறி, கிழித்திருக்கின்றது. அது தான் குமரிமுனையிலிருந்து புறப்பட்ட ஓர் ஏவுகணைக்குக் காரணமாக அமைகின்றது. குமரி மாவட்டத்தின் இந்தக் கொள்கையில் உள்ளவர் தான் மேலப்பாளையத்தைச் சார்ந்த பி.ஏ. காஜா முஹைதீன் பாகவி. அதற்கு ஆதாரம் அவர் பேசி வெளியான வீடியோ பதிவை எழுத்தாக்கமாக தருகின்றோம்.
“ஷிர்க்குனா என்னங்க? அல்லாஹுத்தஆலாவினுடைய இலாஹாக ஆண்டவனாக ஆகியிருப்பதற்கு தகுதியானவர் என்று ஒருவரை சொல்வது. அல்லது இபாதத்திற்கு, வணக்கத்திற்கு தகுதியுடையவர் என்று சொல்வதுதான் ஷிர்க்கு. அல்லாஹுத்தஆலா கொடுத்த ஆற்றலை கொண்டு மற்ற சாதாரணமான மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களை அல்லாஹ் கொடுத்த ஆற்றலைக் கொண்டு நம் மக்கள் செய்கிறார்கள் என்று நம்பினால் அது ஷிர்குனு எங்க இருக்குது. உலகத்தில் எந்தப் பொருளுக்கும் ஆற்றல் கிடையாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர. நன்மக்களான அந்த சாலிஹீன்கள் அல்லாஹ்வின் உடைய அடியார்கள். அல்லாஹ் கொடுத்த ஆற்றலைக் கொண்டு நல்ல காரியத்தைச் செய்கிறார்கள் என்று நம்பும் பொழுது அதில் என்ன ஷிர்க் இருக்குது. காரணப் பொருளை சொல்லலாம் என்று குர்ஆனில் இருக்கிறது,
உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காமல் உறக்கத்தில் இருக்கும்போதும் அவற்றை அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். (ஸுமர்:42)
இன்னொரு இடத்தில் சொல்கிறான்.
உங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் மரணத்தின் வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (ஸஜ்தா:11)
இப்போது யார் மவ்த்தாக்குகிறார்? அல்லாஹுவா? மலக்குல் மவ்த்தா? அசல் சக்திக்குரியவனாக அல்லாஹ் இருக்குறான். அதற்கு காரணப் பொருளை சுட்டிக்காட்டிச் சொல்வது என்பது மார்க்கத்தில் தவறில்லை என்பதை இந்த ஆயத்தை வைத்து பெருமக்கள் நமக்குச் சொல்லியுள்ளார்கள்.
இது பி.ஏ. காஜா முஹைதீன் பேசிய உரையாகும். இதில் அவர் சொல்ல வருகின்றார்?
இறந்த நல்லடியார்கள் அல்லாஹ்வின் ஆற்றலைப் பெற்று உதவி செய்கின்றார்கள் என்று இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்ற கருத்துக்கு, பக்காவாக வக்காலத்து வாங்குகின்றார்.
இப்படி நன்மக்களை ஏஜண்டுகளாக ஆக்கியிருக்கின்றேன், அவரிடம் போய் உதவி கேளுங்கள் என்று அல்லாஹ் எங்காவது சொல்லியிருக்கின்றானா? என்ற கேள்விக்கெல்லாம் இவரிடம் பதிலிருக்காது. இவரது இந்தப் பேச்சு இவர் ஒரு ஷியா என்பதற்குச் சிறந்த ஆதாரமாகும். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பலமுறை பதில் சொல்லியுள்ளது.
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன், தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். தான் நாடியோருக்கு ஆண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். அல்லது ஆண் (பிள்ளை)களையும், பெண் (பிள்ளை)களையும் சேர்த்தே கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்கி விடுகிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.
அல்குர்ஆன் 42:49, 50
குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பது தன்னுடைய தனி அதிகாரத்தில் உள்ளது என இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
“தூய்மையான ஒரு மகனை உமக்குப் பரிசளிப்பதற்காக (வந்துள்ள) நான், உமது இறைவனின் தூதர்தான்!” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 19:19
இந்த வசனத்தில் ஜிப்ரீல் தான் மரியம் (அலை) அவர்களுக்கு மகனைப் பரிசளித்ததாகக் கூறுகிறான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இங்கு காரணமாக இருந்ததால் ஜிப்ரீலிடம் குழந்தையைக் கேட்டுப் பிரார்த்திக்கலாமா? மலக்குல் மவ்த் உயிரைக் கைப்பற்றுவார் என்பதால், துர்மரணத்தை விட்டு மலக்குல் மவ்த்திடம் பாதுகாப்பு தேட வேண்டும் என்றுதான் நபியவர்கள் கற்றுத் தந்தார்களா? அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு கூறினார்களா?
காரணம் என்ற பெயரில் அல்லாஹ்வை டம்மியாக்கி, அவ்லியாக்களை சக்தியுள்ளவர்களாகச் சித்தரிக்கும் இந்தச் சித்தாந்தம் இறைமறுப்பு என்பதைப் பலமுறை நிரூபித்துள்ளோம். அதற்குப் பிறகும் பழைய ரிக்கார்டையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரிடம் போய் பத்து ரூபாய் கடனாகக் கொடு என்று கேட்பதும் உதவி தேடுவதுதான். அல்லாஹ் தான் சக்திக்குரியவன், மனிதர்களில் உதவுபவன் காரணமாக இருக்கிறான். இதுபோன்று தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம், இது ஷிர்க்கா? என்ற இத்துப்போன வாதத்தை முன்வைக்கிறார் பி.ஏ. காஜா முஹைதீன்.
மருத்துவரிடம் போய் காய்ச்சலுக்கு நிவாரணம் கேட்கும்போது அவர் நேரடியாக மருந்து தருகிறார். அதேபோன்று அவ்லியாவும் நேரடியாக கப்ரிலிருந்து தந்து விட்டால்தான் பிரச்சனையே இல்லையே! அல்லாஹ் எப்படி எந்த மருந்தும் இல்லாமல் மறைமுகமாக நிவாரணம் தருவானோ அதேபோன்று அப்துல்காதர் ஜீலானியும் தருவார் என்று நம்புவதுதான் ஷிர்க் என்ற பதிலை களியக்காவிளை விவாதத்தின் போது முன்வைத்தோம். அதையேதான் இப்போதும் கூறுகிறோம்.

ஜமாஅத்துல் உலமா தலைவரின் ஷியா ஆதரவுப் பேச்சு

சுன்னத்வல் ஜமாஅத் பெயரில் திருச்சி தென்னூரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திலேயே ஷியா கருத்தை தெளிவாக எடுத்து வைத்தார். தனது பேச்சை ஆரம்பிக்கும் போது ‘இப்போது இந்தக் கொள்கை மாநாட்டுக்கு என்ன அவசியம்?’ என்று புலம்பியவாறு அங்கலாய்த்துக் கொண்டே தன்னுடைய ஷியா கொள்கை உரையைத் துவக்கினார். அவர் தனது உரையில் வைத்த ஒரு சில ஆதாரபூர்வமான ஹதீஸ்களைத் தவிர மீதி அனைத்தும் பலவீனமான பொய்யான ஹதீஸ்களாகும்.
சஹாபாக்களை பின் பற்ற வேண்டும் என்பதற்குச் சான்றாக, ‘என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் அவர்களில் நீங்கள் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்’ என்று ஒரு ஹதீஸை அவிழ்த்து விட்டார். இந்த ஹதீஸ் பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூபக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹஸ்மு கூறுகிறார்.
இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு கூட நிரூபணமாகவில்லை என்று இப்னுல் கையும், இப்னு ஹஜர் ஆகியோர் கூறுகின்றனர்.

அடிப்படையைத் தகர்க்கும் ஆபத்து நிறைந்த ஹதீஸ்

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் பொய்யர்களும், யாரென அறியப்படாதவர்களும் உள்ளதால் இது பலவீனமாக அமைவதுடன் இதன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
எத்தனையோ விஷயங்களில் நபித்தோழர்கள் நேர்முரணான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அது அறவே சாத்தியமற்றதாகும். மது பானம் விற்பனை செய்வது ஹலால் என்று ஸமுரா பின் ஜுன்துப் என்ற நபித்தோழர் கூறியிருக்கிறார். நபித்தோழரில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற இந்தச் செய்தியின் அடிப்படையில் மதுபானம் விற்றால் அது சரியாகுமா? நோன்பு வைத்துக் கொண்டு ஐஸ் கட்டியைச் சாப்பிட்டால் நோன்பு முறியாது என்று அபூ தல்ஹா என்ற நபித்தோழர் கூறியுள்ளாரே! இதைப் பின்பற்ற முடியுமா? மனைவியுடன் கூடிய பின் விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது அவசியம் இல்லை என்று அலி, உஸ்மான், தல்ஹா, அபூ அய்யூப், உபை பின் கஅப் ஆகியோர் கூறியுள்ளனரே! அதைப் பின்பற்ற முடியுமா? என்று அறிஞர் இப்னு ஹஸ்ம் அவர்கள் கேள்வி எழுப்புகிறார். மேலும் நபித்தோழர்களிடம் ஏற்பட்ட பல தவறான முடிவுகளையும் பட்டியலிடுகிறார்.
இட்டுக் கட்டப்ட்ட இலா ஹீன் ஹதீஸ்
இத்துடன் ஏதோ வித்தியாசமாக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் ஒரு பொய்யான ஹதீஸை அடித்து விட்டார். இழுத்து இராகம் போட்டு இலாஹீன் என்ற ஹதீஸ் எடுத்து வைத்தார். அது என்ன இலா ஹீன் ஹதீஸ்?
நபித் தோழர் தனது மனைவியைப் பார்த்து உன்னை நான் ஒரு ‘ஹீன்’ அதாவது (குறிப்பிட்ட கால) அளவுக்கு தலாக் விட்டேன் என்று சொன்னாராம். இது அவருக்குக் கவலையை கொடுத்து விடுகின்றது. அவரது கவலையைப் பார்த்த சித்திக்குல் அக்பர் அபூபக்ர் (ரலி) அவர்கள், ஏன் கவலையாக இருக்கின்றீர்கள்? என்று வினவுகின்றார்கள். அதற்கு ‘எனது மனைவியை இலா ஹீன் என்று குறிப்பிட்டு விவாகரத்து செய்து விட்டேன். மனைவியை எப்போது திரும்ப மீட்டுவது என்ற கவலை என்னைக் கவலையில் ஆழ்த்துகின்றது’ என்று சொன்னாராம்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இலா ஹீன் என்ற வார்த்தையை அல்லாஹ் இறுதி நாள் வரை என்ற அர்த்தத்தில் குர்ஆனில் பயன்படுத்துகின்றான். அதனால் இறுதி நாள் வரை மீட்ட முடியாது என்று விளக்கம் சொல்லி விட்டார்கள். அவருக்குக் கவலை கூடி விட்டது.
அடுத்து உமர் (ரலி)க்கும் அவருக்கும் அது மாதிரி சந்திப்பு, அதே கேள்வி. இப்போது உமர் (ரலி)

وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ

குறிப்பிட்ட காலம்வரை (அதாவது மரணம்) அவர்களைச் சுகம் அனுபவிக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 10:98) என்ற வசனத்தை கூறி நீ இறக்கும் வரை உன் மனைவியை மீட்ட முடியாது என்று கூறி விட்டார்கள்.
அடுத்து உஸ்மான் (ரலி)க்கும் அவருக்கு அது மாதிரி சந்திப்பு, அது மாதிரி கேள்வி. இப்போது உஸ்மான் (ரலி)

تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا

அது, (நல்ல மரம்) தன் இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு காலத்திலும் (ஆறு மாதம் அல்லது ஒரு வருடம்) தனது கனியைத் தருகிறது (அல்குர்ஆன் 14:25) என்ற வசனத்தைக் காட்டி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்து நீ மீட்டிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள்.
அடுத்து அலீ (ரலி) அவர்களிடம் சென்று இதே கேள்வியைக் கேட்கிறார். அதற்கு அலீ (ரலி),

فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ

நீங்கள் மாலை நேரத்தை அடையும்போதும், காலை நேரத்தை அடையும்போதும் அல்லாஹ்வைப் போற்றுங்கள்! (அல்குர்ஆன் 30:17) என்ற வசனத்தைச் சொல்லி, அதாவது காலை அல்லது மாலை நேரத்திற்குள் நீங்கள் உங்கள் மனைவியை மீட்டிக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள்.
இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதே சந்திப்பு . அப்போது அவர் நபி (ஸல்) நான்கு நபித் தோழர்கள் சொன்னதை தெரிவித்து நான் யார் சொல்வதை எடுப்பது? என்று கேட்கின்றார். அதற்கு அவர் நீ அலீ (ரலி)யின் கருத்தை எடுத்துக் கொள் என்று சொன்னதாக குறிப்பிடுகின்றார்.
இது இவர் அடித்து விட்ட ஹதீஸ் பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். திராஸு தஹப் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது ஒரு நூலை குறிப்பிடுகின்றார். இதற்கு எந்த அறிவிப்பாளர் வரிசையையும் அவர் கூறவில்லை. கூற முடியாது. இந்த இடத்தில் அவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இதற்கு அறிவிப்பாளர் தொடரை கூற முடியுமா? என்று ஒரு பகிரங்க அறைகூவல் விடுகின்றோம். இல்லையேல், மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு பகிரங்கப் பொய்யை இட்டுக் கட்டி சொல்லியிருக்கின்றார் என்றே அர்த்தம் என்று மக்கள் மன்றத்தில் முன் வைக்கின்றோம்.
“என் மீது வேண்டுமென்று இட்டுக் கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி 110)
என்ற ஹதீஸின் எச்சரிக்கையை அவருக்கு சமர்பிக்கின்றோம்.
மேற்கண்ட ‘இலா ஹீன் ஹதீஸ்’ அறிவிப்பாளர் தொடர் இல்லாத மொட்டை ஹதீஸ்! முழுக்க இட்டுக்கட்டப்பட்ட, ஏற்றுக்கொள்ள முடியாத செய்தியாகி விடுகின்றது. கருத்து ரீதியிலும் இது ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக உள்ளது.
அலீ (ரலி)யைத் தூக்கி நிறுத்தி, அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற நபித்தோழர்களை மட்டம் தட்டினாலே அது ஷியாக்களின் பின்னல் வேலைப்பாடு; அது, அவர்களின் குள்ளநரி தந்திர வேலை என்று யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில், இவர் நாசூக்காக சுன்னத்வல் ஜமாஅத் கொள்கை விளக்கக் கூட்டத்திலேயே தந்திரமாக ஷியா சரக்கை அழகாக விற்று விட்டுப் போய் விட்டார். அதனால் இந்த மாநாட்டை பகிரங்கமாக ஒரு ஷியா மாநாடு என்று கூறுகிறோம். இவ்வாறு கூறுவதற்காக, கப்ரு வணக்கத்திற்கு எதிராகப் போராடும் ஆலிம்களிடம் நாங்கள் எங்கள் மனவருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறோம்.