பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 21, 2025

மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்


மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்

அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்தல் இணைவைப்பாகும்

மனிதர்களிடம் கேட்பதற்கும் அல்லாஹ்விடம் கேட்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை புத்தகத்தின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம். மனிதர்களிடம் பேசுவது போல் அல்லாஹ்விடம் நாம் பேசுவது கிடையாது.

சப்தமில்லாமல் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழியில் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் அல்லாஹ்வையன்றி வேறு யாரும் சக்திபெறாத விசயங்களில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த அடிப்படையில் மண்ணறைகளை வழிபடக்கூடியவர்கள் இறந்து போனவர்களிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இது இணைவைப்பாகும்.

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

அல்குர்ஆன் (13 : 14)

அல்லாஹ்வே உண்மையானவன். அவனன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் (22 : 62)

நாங்கள் அவ்லியாக்களிடம் அதைக் கொடுங்கள். இதைக் கொடுங்கள் என்று கேட்கவில்லை. மாறாக எங்களுக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். பரிந்துரையை வேண்டினாலும் அதுவும் இணைவைப்பாகும். ஏனென்றால் பிரார்த்தனை செய்வதை வணக்கம் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ் அல்லாதவர்களிடம் சிறியதை வினவினாலும், பெரியதை வினவினாலும் அது நிச்சயம் இணைவைப்புத்தான்.

பிரார்த்தனைதான் வணக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் (40 : 60) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : திர்மிதி (2895)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாளில் நரகத்தின் ஒரு பகுதி கிளம்பும். அதற்குப் பார்க்கும் கண்களும், கேட்கும் செவிகளும், பேசும் நாவும் இருக்கும். வரம்பு மீறி முரண்டு பிடிப்பவன் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளிடம் பிரார்த்தித்தவன் உருவங்களை வரைந்தவர்கள் ஆகிய மூன்று பேரின் மீது நான் சாட்டப்பட்டுள்ளேன் என்று அந்த நரகம் கூறும்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)

நூல் : திர்மிதி (2497)

மற்றவர்களிடம் உதவி தேடுதல் இணைவைப்பாகும்

அல்லாஹ்வின் உதவி எப்படி வருகிறது என்று நமக்குத் தெரியாது . அல்லாஹ்வை நேரில் காணமலேயே அவனிடம் உதவி கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும் என்ற உறுதியுடன் பிரார்த்தனை செய்கிறோம். நமக்கு இயலாதக் காரியங்களிலேயே அல்லாஹ்விடம் உதவி தேடுகிறோம். இது போன்று இறந்து போனவர்களும் உதவி செய்வார்கள் என்று நம்புவது இணைவைப்பாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணைகற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகிவிடாதீர்!

அல்குர்ஆன் (6 : 14)

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

சிறுவனே உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். நீ அல்லாஹ்வுடைய விசயத்தில் பேணுதலாக நடந்து கொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்.

அல்லாஹ்வுடைய விசயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோசமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு. நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது.

அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்து விட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதி (2440)

மற்றவர்களிடம் பாவமன்னிப்பு தேடுதல் இணைவைப்பாகும்

நாம் செய்த பாவத்தினால் பிற மனிதர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டிய முறையில் கேட்கலாம். ஆனால் அல்லாஹ்விற்கும் மனிதர்களுக்கும் மத்தியில் உள்ள விசயங்களில் தவறிழைத்தால் அதை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.

ஏனென்றால் இந்த மார்க்கம் அல்லாஹ்வுடையது. நாம் எவற்றை செய்ய வேண்டும்; எவற்றைச் செய்யக் கூடாது என்பதை அல்லாஹ்தான் தெளிவுபடுத்தினான். நம்மை சொர்க்கவாசியாகவும், நரகவாசியாகவும் முடிவு செய்யும் அதிகாரம் அவனிடம் மட்டுமே உள்ளது. இதைப் புரிந்து கொள்ளாமல் நபி (ஸல்) அவர்களிடத்திலும் மகான்கள் என்று இவர்கள் கருதுபவர்களிடத்திலும் பாவத்தை மன்னிக்குமாறு சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கேட்பது இணைவைப்பாகும்.

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?

அல்குர்ஆன் (3 : 135)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான். நாடியோரைத் தண்டிக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (3 : 129)

உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருக்கும் போது நபியவர்கள் பாவங்களை மன்னிப்பார்கள் என்று நம்புவது அல்லாஹ்விற்கு இவர்கள் செய்யும் மாபெரும் அநியாயம் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

நூல் : புகாரி (6306)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையைக் கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்! என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி)

நூல் : புகாரி (834)

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம் : என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாம-ல்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)

நூல் : புகாரி (6398)

No comments:

Post a Comment