அல் பகரா அத்தியாயத்தின் சிறப்புகள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) வந்து பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான ‘அல்பகரா’ மற்றும் ‘ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இதற்கு வீணர்கள் சக்தி பெற மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: முஸ்லிம் (1470)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். ‘அல்பகரா’ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
நான் ஓர் இரவு பகரா அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் ஒரு சப்தத்தைக் கேட்டேன். என்னுடைய குதிரை ஓடி விட்டது என்று எண்ணினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அபூ அத்தீகே! ஓதும்!” என்றார்கள். நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது வானத்திற்கும் பூமிக்கும் இடையே விளக்குப் போன்ற ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் நபி (ஸல்) அவர்கள் “அபூ அத்தீகே ஓதும்!” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைக் கடந்து (ஓதிச்) செல்ல முடியவில்லை” என்றேன். அப்போது “அது வானவர்களாவர். உன்னுடைய பகரா அத்தியாயத்தின் ஓதுதலுக்காக இறங்கியிருக்கிறார்கள். நீர் தொடர்ந்து (ஓதிச்) சென்றிருந்தால் ஆச்சரியமான விசயங்களைக் கண்டிருப்பாய்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸைத் பின் ஹுளைர் (ரலி), நூல்: இப்னுஹிப்பான் (779)
No comments:
Post a Comment