சமகால இணைவைப்புக் காரியம்
மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்தல் இணைவைப்பாகும்
நான் நாடியது நடந்தால் ஏழைகளுக்கு உணவளிக்கிறேன். தர்மம் செய்கிறேன் என்று கூறுவது நேர்ச்சை செய்வதாகும். நேர்ச்சை என்பது வணக்கமாக இருப்பதால் அல்லாஹ்விடம் மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும். தர்ஹாக்களுக்குச் சென்று நான் நாடியது நடந்தால் அதை செய்வேன் இதை நிறைவேற்றுவேன் என்று ஒருவன் நேர்ச்சை செய்துவிட்டால் அவன் இணைவைத்தவனாக ஆகி விடுவான்.
நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.
அல்குர்ஆன் (2 : 270)
இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன் என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் (3 : 35 )
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து)த் திரியவிட்டவர் அவர் தாம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (4624)
தர்ஹாக்களில் நேர்ச்சை செய்பவர்கள் நாங்கள் அல்லாஹ்விற்காகத்தான் நேர்ச்சை செய்கிறோம். இதன் நன்மை இறந்துவிட்ட இந்த நல்லடியாருக்குப் போக வேண்டும் என்பதற்காகச் செய்கிறோம் என்று பொய்யான வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். இவர்கள் கூறுவது பொய்யாகும். தர்ஹாக்களுக்குச் செல்லும் அதிகமானோர் இறந்து விட்டவர்களை வணங்கும் அடிப்படையிலேயே இதை செய்கிறார்கள்.
இவர்கள் கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நேர்ச்சையில் அல்லாஹ்விற்காக செய்வது எப்படி முக்கிய நிபந்தனையாக இருக்கிறதோ அது போன்று நேர்ச்சை நிறைவேற்றப்படும் இடம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் அரங்கேற்றப்படும் இடமாக இருக்கக் கூடாது என்பதும் முக்கிய நிபந்தனையாகும்.
மார்க்கத்திற்கு மாற்றமான பல அம்சங்கள் இணைவைப்பு உட்பட தர்ஹாக்களில் அரங்கேறுவதால் அங்கு சென்று அல்லாஹ்விற்காகவும் நேர்ச்சை செய்வது கூடாது. இதை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா என்னுமிடத்தில் ஒட்டகத்தைக் குர்பானி செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆகவே அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் புவானா என்னுமிடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்துள்ளேன். (அதை நிறைவேற்றலாமா…?) என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அறியாமை காலத்தவர்கள் வணங்கிய சிலைகளில் ஏதாவது ஒரு சிலை அங்கிருக்கிறதா..? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் இல்லை என்றார்கள்.
அவர்களின் விழாக்களில் எந்த விழாவாவது அங்கு கொண்டாடப்படுகிறதா? என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் இல்லையென்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய நேர்ச்சையை நீ நிறைவேற்றலாம் (என்று கூறி) அல்லாஹ்வுக்கு மாற்றமான காரியங்களிலும், ஆதமுடைய சந்ததிக்கு சக்திக்கு மீறிய காரியங்களில் நேர்ச்சை நிறைவேற்றுதல் கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி)
நூல்: அபூதாவூத் (2881)
தர்ஹாக்களில் நபியவர்கள் தடுத்த விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. சிலைகளுக்கு பதிலாக கப்ருகள் கட்டப்பட்டு வணங்கப்படுகிறது. எனவே அங்கு செல்வதே கூடாது.
No comments:
Post a Comment