பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, August 15, 2025

நபித்தோழர்களிடம் இறைத்தூதர் வாங்கிய உறுதிமொழி

நபித்தோழர்களிடம் இறைத்தூதர் வாங்கிய உறுதிமொழி

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடத்தில் இணைவைக்கக் கூடாது என்று உறுதிமொழி வாங்கினார்கள்.

நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதி மொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதி மொழி அளித்து விட்டோம் என்று கூறினோம். பின்னர் அவர்கள் நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று (மீண்டும்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்து விட்டோம் என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக் கூடாதா? என்று கேட்ட போது, நாங்கள் எங்கள் கைகளை நீட்டி அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்க வேண்டும்? என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி), நூல் : முஸ்லிம்-1886 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைகற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபசாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்ல மாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என்ற அடிப்படையிலும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்து விட்டால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்ற அடிப்படையிலும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி), நூல் : புகாரி-3893 

இணைவைக்காமல் வணங்கியவருக்கே வெற்றி உண்டு

இணைவைக்காமல் அல்லாஹ்விற்கு மட்டும் வணக்கங்களைப் புரிந்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள் எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)? என்றனர். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்) (என்று கூறிவிட்டு அவரிடம்), நீர் அல்லாஹ்விற்கு எதனையும் இணைவைக்காமல் அவனை வணங்க வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி), நூல் : புகாரி-1396 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்கியும் தொழுகையை நிலைநாட்டியும் ஸகாத்தைக் கொடுத்தும் பெரும்பாவங்களைச் செய்யாமல் (மறுமையில்) வருபவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி), நூல் : நஸாயீ-4009 (3944)

No comments:

Post a Comment