பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 14, 2025

ஜின்கள் மனிதனுக்குள் மேலாடுமா?

ஜின்கள் மனிதனுக்குள் மேலாடுமா?

கேள்வி

என்னுடைய உறவினர் ஒருவரை முஸ்லிம் ஜின் ஒன்று பிடித்துள்ளதாகக் கூறுகிறார். அவர் மற்றவர்களைப் பற்றி கூறும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மையாக உள்ளது.

ஜின்கள் மனிதன் மீது வரமுடியாது என்றால் இது எப்படி சாத்தியம்

பதில்

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் "ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது'' என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றது.  அதிலும் இரவில் ஜின் உள்ளத்தைக் கொண்டு தொழுகின்றான், பகலில் தெரியாது என்று கூறுகிறான் என்றெல்லாம் கூறுவது இரண்டு உள்ளங்கள் அவனிடம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

எந்த மனிதராயினும் அவருக்குள் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை

திருக்குர்ஆன் 33:4

மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  இதற்கு மாற்றமாக அந்த மனிதன் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம்.  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடிக்கலாம்.

அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.  இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

அந்நபர் மற்றவர்களைப் பற்றி தகவல்களைக் கூறுவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆச்சரியப்படுவதற்கு இதுவெல்லாம் அபார சக்தி கிடையாது.  மறைமுகமான முறையில் தகவல்களை அறிந்துகொண்டு யார் வேண்டுமானாலும் இவ்வாறு நடித்து மற்றவர்களை ஏமாற்ற முடியும்.

ஜின்களின் சக்தியைப் பற்றி திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

"பெரியோர்களே! அவர்கள் கட்டுப்பட்டோராக என்னிடம் வருமுன் அவளது அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வருவார்?” என (சுலைமான்) கேட்டார்.

ஜின்களைச் சார்ந்த இஃப்ரீத், “உமது இருப்பிடத்திலிருந்து நீர் எழுவதற்கு முன், அதனை உம்மிடம் கொண்டு வருகிறேன். அதற்கு நான் ஆற்றல்மிக்கவன்; நம்பிக்கைக்குரியவன்” என்று கூறியது.

வேத அறிவைத் தன்னிடத்தில் கொண்டிருந்த (ஜின்) ஒன்று, “நீர் கண்மூடித் திறப்பதற்கு முன் அதனை உம்மிடம் கொண்டு வருவேன்” எனக் கூறியது. உடனே அந்த அரியணை தன்னருகில் இருப்பதை அவர் கண்டபோது, “இது என் இறைவனின் அருட்கொடை. நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என அவன் என்னைச் சோதிப்பதற்காகவே (இதை வழங்கியுள்ளான்.) யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் தனக்காகவே நன்றி செலுத்துகிறார். யாரேனும் நன்றி மறந்தால் என் இறைவன் தேவைகளற்றவன்; கண்ணியமிக்கவன்” என அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 27:38-40

கண் மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டிற்குச் சென்று அந்த நாட்டு அரசியின் சிம்மாசனத்தைத் தூக்கி வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் இருந்ததாக அல்லாஹ் இந்த வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.  இதை அபார சக்தி என்று கூறலாம்.

நீங்கள் கூறும் அந்த நபர் இது போன்ற அற்புதத்தைச் செய்து காட்டுவாரா? என்று கேட்டுப் பாருங்கள்.  தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து, காட்டி அதை அபார சக்தி என்று கூறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

அவரால் மற்றவர்களைப் பற்றிய விபரங்களைக் கூற முடியும் என்றால் அதிமான மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு பொருளை கையில் மறைத்துக்கொண்டு இது என்ன? என்று கேளுங்கள். அவர் பார்த்திராத யாரோ ஒருவரை அழைத்து வந்து அவரைப் பற்றிய முழு விபரங்களை துல்லியமாகக் கூறச் சொல்லுங்கள். அவரால் ஒருக்காலும் கூற முடியாது. அவரிடம் ஜின் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி விடும்.

ஒவ்வொரு நாளும் மனிதன் பிறந்துகொண்டும் மரணித்துகொண்டும் இருக்கின்றான். மற்றவர்களைப் பற்றி விபரம் அவருக்குத் தெரியும் என்றால் நாளைக்கு யார் யாரெல்லாம் மரணிப்பார்கள். எங்கு மரணிப்பார்கள். எப்படி மரணிப்பார்கள் என்று கேளுங்கள்.

இதை விடுத்து பிறரை ஏமாற்றும் தந்திர வேலைகளைச் செய்து ஜின் ஒரு மனிதனுக்குள் ஊடுறுவி இருப்பதாகக் கூறுவது தெளிவான ஏமாற்று வேலை!  முறையாக விசாரித்தால் உண்மை வெளியாகும்.

மேலும் ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை என திருக்குர்ஆன் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது. எனவே மற்றவர்களைப் பற்றி ரகசியங்களை இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாராலும் கூற முடியாது. இதற்கு மாற்றமாக ஜின்களுக்கு இந்த சக்தி உண்டு என்று நம்புவது இணைவைப்பாகும். இந்த நம்பிக்கை நம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்.

ஜின்கள் மகத்தான் ஆற்றல் உள்ள படைப்பாக இருந்தாலும் மறைவான விஷயங்களை அறிந்து கொள்வதில் மனிதர்களைப் போன்று பலவீனமானப் படைப்பாகும்.

மறைவான ஞானம் என்பது இறைவனுக்கு மட்டும் உரித்தான அம்சமாகும். இந்த அதிகாரத்தை இறைவன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் வழங்கவில்லை. இறைவனுடைய தன்மைகளில் ஒன்றான மறைவானவற்றை அறியும் ஆற்றல் ஜின்களுக்கு இருப்பதாக ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்தவராக ஆகிவிடுவார்.

"அல்லாஹ்வையன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள்; தாம் எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோம் என்பதையும் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

மறைவான ஞானம் தங்களுக்கு இல்லை என்று ஜின்கள் கூறியதை திருக்குர்ஆன் எடுத்துக்கூறுகிறது.

பூமியில் இருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களுடைய இறைவன், அவர்களுக்கு நல்வழியை நாடியுள்ளானா என்பதை நாங்கள் அறிய மாட்டோம்.

திருக்குர்ஆன் 72:10

ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.  ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார். ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார்.

பிறகு கைத் தடியைக் கறையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகு தான் ஸுலைமான்  இறந்து நீண்ட காலமாகிவிட்டது என்ற செய்தி ஜின்களுக்குத் தெரிகிறது.

தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கின்ற ஸுலைமான் நபி மரணித்துவிட்டதைக் கூட ஜின்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அவருக்கு மரணத்தை நாம் விதித்தபோது, அவரது மரணத்தைப் பற்றி அவருடைய கைத்தடியை அரித்துக் கொண்டிருந்த கரையானைத் தவிர வேறெதுவும் (ஜின்களாகிய) அவர்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்தபோது, தாங்கள் மறைவானதை அறிவோராக இருந்தால் இழிவான வேதனையில் நீடித்திருக்க வேண்டியதில்லை என்பதை ஜின்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டன.
திருக்குர்ஆன் 34:14

No comments:

Post a Comment