சாதாரணப் பொருட்களுக்கு இறை சக்தி இருப்பதாக எண்ணுதல்
கப்ரின் மீது போடப்பட்ட போர்வைக்கும், பூவிற்கும் அங்கு ஊற்றப்பட்ட எண்ணெய்க்கும் நோய்களை நீக்கி குணமளிக்கும் ஆற்றல் இருப்பதாக கப்ரு வழிபாட்டுக்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆன் வசனங்களை எழுதித் தொங்கவிட்டால் அதனால் வீட்டிற்கு எந்தத் தீங்கும் வராது என்று சிலர் கருதுகிறார்கள். மந்திரிக்கப்பட்ட கயிற்றுக்கு சக்தி இருக்கிறது என்று கருதுபவர்களும் உண்டு. முட்டையைச் சுற்றி நடுத்தெருவில் உடைத்தால் தீமைகள் வராது என்று நம்புகிறார்கள்.
மிளகாய் உப்பை எடுத்து தலையில் மூன்று முறை சுற்றி அடுப்பில் போட்டால் கண்ணேறு போய்விடும் என்று நினைக்கிறார்கள். கண்ணேறு கழிவதற்காக சிலர் சூடத்தை ஏற்றுகிறார்கள். காத்துக்கருப்பு வரக்கூடாது என்ற தவறான நம்பிக்கையில் வீடுகளுக்கு முன்னால் மஞ்சலையும் பூசணிக்காயையும் கட்டித் தொங்க விடுகிறார்கள். இப்படி ஆதாரமில்லாமல் கற்பணையை அடிப்படையாக வைத்து சாதாரணப் பொருட்களுக்குச் சக்தி இருப்பதாக எண்ணுவது இணைவைப்பாகும்.
இணைவைப்பாளர்கள் தாத்துல் அன்வாத் என்ற மரத்தில் தங்கள் வாட்களைத் தொங்கவிட்டு அங்கே தங்குவார்கள். இவ்வாறு செய்வதால் போரில் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள். இது போன்று ஒரு மரத்திற்கோ, ஒரு கல்லிற்கோ அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சக்தியில்லாத எந்தப் பொருளுக்கோ ஆற்றல் உண்டு என்று நாம் நம்பிவிடக் கூடாது என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இணைவைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு தாதுல் அன்வாத் என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கும் ஒரு தாதுல் அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக! (7 : 138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூவாகித் (ரலி)
நூல் : அஹ்மத் (20892)
No comments:
Post a Comment