பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, August 15, 2025

இணைவைக்காமல் இருப்பவரே முஸ்லிமாக இருக்க முடியும்

இணைவைக்காமல் இருப்பவரே முஸ்லிமாக இருக்க முடியும்

இஸ்லாமியப் பெயர்களைச் சூடிக் கொள்வதாலோ, தொப்பி தலைப்பாகை அணிவதாலோ, தாடியை மட்டும் வைப்பதாலோ, முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ்வதாலோ யாரும் முஸ்லிமாகி விட முடியாது. ஓரிறைக் கொள்கைக்கு முழுக்க முழுக்க எதிரான இணைவைப்பை வேறோடு கிள்ளி எறிந்தால்தான் முஸ்லிமாக இருக்க முடியும்.

இணைவைப்புத்தான் ஒருவரை இஸ்லாமிலிருந்து வெளியேற்றுகின்ற கொடிய பாவமாகும். இஸ்லாமும் இணைவைப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை ஆகும். இந்த இரண்டும் ஒருவரிடத்தில் ஒன்று சேரவே முடியாது. ஒருவர் இறந்தவராகவும் உயிருள்ளவராகவும் இருக்க முடியாது. இறந்தவர் என்றால் உயிரில்லை என்று பொருள். உயிருள்ளவர் என்றால் இறக்கவில்லை என்று பொருள்.

இது போன்றுதான் ஒருவர் முஸ்லிமாக இருந்தால் இணைவைப்பவராக இருக்க மாட்டார். இணைவைப்பவர் முஸ்லிமாக இருக்க மாட்டார்கள். இணைவைத்துக்கொண்டு அல்லாஹ்விடத்தில் முஸ்லிமாக இருக்கவே முடியாது.

اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا‌ وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْ

வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணைகற்பித்தவனல்லன்; (என்றும் கூறினார்).

அல்குர்ஆன் (6 : 79)

 قُلْ اِنَّنِىْ هَدٰٮنِىْ رَبِّىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۚ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைகற்பித்தவராக இருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (6 : 161)

 وَلَا يَصُدُّنَّكَ عَنْ اٰيٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَيْكَ‌ وَادْعُ اِلٰى رَبِّكَ‌ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ
அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணைகற்பிப்பவராக நீர் ஆகாதீர்!

அல்குர்ஆன் (28 : 87)

இஸ்லாமை ஏற்குமாறு ரோம் நாட்டின் அரசருக்கு நபியவர்கள் கடிதம் எழுதிய போது இணைவைக்காதீர்கள் என்றே வலியுறுத்திக் கூறினார்கள். இணைவைக்காதவர்தான் முஸ்லிமாக இருக்க முடியும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வருமாறு ஹெராக்ளியஸ் உத்தரவிட்டார். அக்கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, புஸ்ரா நகர ஆட்சியர் வாயிலாக ஹெராக்ளியஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள். ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:

அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

இறை வாழ்த்துக்குப் பின் (விசயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக் கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இரு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.

வேதக்காரர்களே! எங்களுக்கும், உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அஃது யாதெனில்:) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் எவரையும் நாம் இணைவைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்விற்கு அடிபணிந்தவர்கள்)தான் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்என்று கூறிவிடுங்கள்.

அறிவிப்பவர் : அபூ சுஃப்யான் (ரலி), நூல் : புகாரி-7

No comments:

Post a Comment