பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, August 23, 2025

ஸியாரத் என்ற பெயரில் இணைவைப்பு

ஸியாரத் என்ற பெயரில் இணைவைப்பு

மண்ணறைகளைச் சந்தித்து வரும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனென்னறால் மண்ணறைகளை காணும் போது நமக்கு மரணபயம் ஏற்படும். நமது செயல்பாடுகளைத் திருத்தி நல்லவர்களாக வாழ்வதற்கு இந்தப் பயம் உதவும். எனவே எல்லோரும் அடக்கம் செய்யப்படுகின்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் அரங்கேறாத பொது மையவாடிக்குச் சென்று மரண பயத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (1777)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : திர்மிதி (974)

தர்ஹாக்களை சென்று தரிசித்து வருவதற்கு கப்ரு வணங்கிகள் மேற்கண்ட ஹதீஸ்களை ஆதாரம் காட்டுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஸியாரத்திற்கும் தர்ஹாக்களுக்குச் செல்வதற்கும் சம்பந்தமே இல்லை.

கப்ருகளை பூசுவதையும், அதன் மேல் கட்டிடங்களை எழுப்புவதையும் நபியவர்கள் தடைசெய்திருக்க தனிப்பட்ட ஒருவருடைய மண்ணறையைப் பூசி அதன் மேல் கட்டிடம் எழுப்பி விதவிதமான இணைவைப்புக்காரியங்களுக்கு இடமாகத் திகழ்வதுதான் தர்ஹா ஆகும்.

கோயில் திருவிழாக்கள் போல் மேளதாளத்துடன் ஆட்டம்பாட்டத்துடன் உரூஸ் விழா தர்ஹாக்களில் நடைபெறும். பெண்களை தவறாக பார்த்து இரசிப்பதற்காகவே இளைஞர் பட்டாளம் அந்த இடத்தை நோக்கி படையெடுக்கும். மார்க்கம் தடுத்த பெரும்பெரும் பாவங்களின் கேந்திரமாக விளங்கும் தர்ஹாக்களுக்குச் சென்றால் நிச்சயம் மரண பயம் வராது. மாறாக இவையெல்லாம் மரணத்தை சிந்திக்கவிடாமல் உலக கவர்ச்சியின் பால் அழைத்துச் செல்லும். இது போன்ற இடங்களுக்கு செல்லக் கூடாது என்பதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேசெய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் (4 : 140)

மரண பயத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக யாரும் தர்ஹாக்களுக்குச் செல்வதில்லை. மாறாக புனிதம் கருதியே அங்கே செல்கிறார்கள். இவ்வாறு புனிதம் கருதி மூன்று இடங்களைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் போகக் கூடாது என்று நபியவர்கள் தடை விதித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸô ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெங்கும் (புனிதம் கருதி) பயணம் மேற்கொள்ளப்படாது.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (1189)

நூல் : புகாரி (1189)

No comments:

Post a Comment