பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, August 22, 2025

சமகாலத்தில் உள்ள இணைவைப்புக் காரியம்.

சமகாலத்தில் உள்ள இணைவைப்புக் காரியம்.

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தல்..

 உயர்ந்த ஒருவரின் பெயரைக் கூறி சத்தியம் செய்யும் வழக்கம் மக்களிடம் உள்ளது. அல்லாஹ்வை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். மற்றவர்கள் மீது சத்தியம் செய்வது இணைவைப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (2679)

எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (3836)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸôவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், வா சூது விளையாடுவோம் என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (4860)

யூதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் இணைவைக்கிறீர்கள். (அல்லாஹ்விற்கு) நிகரை ஏற்படுத்துகிறீர்கள். நீ நாடியதும் அல்லாஹ் நாடியதும் (நடந்து விட்டது) என்று கூறுகிறீர்கள். கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுகிறீர்கள். (இது இணைவைப்புத் தானே) என்று கேட்டார். எனவே சத்தியம் செய்ய விரும்பினால் கஃபாவின் இறைவனின் மீது ஆணையாக என்று கூறுமாறும் அல்லாஹ் நாடியதும் பிறகு நீ நாடியதும் (நடந்துள்ளது) என்று கூறுமாறும் மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : குதைலா (ரலி)

நூல் : நஸயீ (3713)

No comments:

Post a Comment