பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 14, 2025

மனிதர்கள் ஜின்களுடன் பேச இயலுமா?

மனிதர்கள் ஜின்களுடன் பேச இயலுமா?

ஜின்கள், ஷைத்தான்கள் பற்றி திருமறைக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் கூறப்பட்டிருப்பவை மறைவான விசயங்களில் உள்ளவையாகும். 

மனிதனுக்கு வழங்கப்பட்ட ஆறு அறிவைப் பயன்படுத்தினாலும் மனிதனால் சுயமாக அறிய முடியாத விசயங்களே மறைவான விசயங்களாகும். 

மறைவான விசயங்களை நம்பிக்கை கொள்வது இறைநம்பிக்கையின் அடித்தளமாகும். 

{قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ} [النمل: 65]

“அல்லாஹ்வையன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள்; தாம் எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோம் என்பதையும் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27 : 65)

திருமறைக் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ள மறைவான விசயங்களை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் 

ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ (2) الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ [البقرة: 2، 3]

இது வேதமாகும். இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. இறையச்சமுடையோருக்கு வழிகாட்டியாகும். அவர்கள் மறைவானவற்றின்மீது நம்பிக்கை கொள்வார்கள்;

(அல்குர்ஆன் 2 : 2, 3)

ஜின்கள் தொடர்பாக திருமறைக்குர்ஆனிலும், ஆதாரப் பூர்வமான நபிமொழிகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளவற்றை ஒரு இறைநம்பிக்கையாளன் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  மனித அறிவு என்பது எல்லைகளுக்கு உட்பட்டது. அனைத்தையும் மனித அறிவினால் சூழ்ந்தறியவோ, ஆழ்ந்தறியவோ இயலாது.  இதனை நம் மனதில் பதிய வைத்துக்கொண்டு  கட்டுரையின் தலைப்பிற்குச் செல்வோம்.

மனிதர்கள் ஜின்களுடன் பேச இயலுமா? என்பதை முடிவு செய்வதாக இருந்தால் வஹியின் சான்றுகளைத் தவிர வேறு ஆதாரங்கள் மூலமாக ஒரு போதும் முடிவு செய்ய இயலாது. 

மறைவானவை தொடர்பான விசயங்களில் வஹியின் ஆதாரங்களோடு நின்றுவிட வேண்டும். இதில் மனிதக் கருத்துக்களின் பக்கம் சென்றால் நிச்சயமாக அது நம்முடைய அறிவையும், நம்பிக்கையையும் வழிகேட்டில் கொண்டு சென்றுவிடும். 

இது  தொடர்பாக குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகள் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

ஜின்களையோ, ஷைத்தான்களையோ மனிதர்கள் காண முடியாது என திருமறைக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. 

{إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ} [الأعراف: 27]

அவனும் அவனது இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாத விதத்தில் உங்களைப் பார்க்கின்றனர். இறைநம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை நேசர்களாக ஆக்கியுள்ளோம்.
அல் குர்ஆன் -   7 : 27

மேலும் ஷைத்தான் மறைந்திருந்தே மனிதர்களிடம் தீய எண்ணங்களை ஏற்படுத்துவான் என்றும் திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. 

{مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ} [الناس: 4]

மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து (பாதுகாவல் தேடுகிறேன்.)
(அல்குர்ஆன் 114 : 4)

ஷைத்தான் நம்முடைய உள்ளத்தில் தீய எண்ணங்களை விதைப்பதாக குர்ஆனிலும், சுன்னாவிலும் கூறப்பட்டவை அனைத்தும் மறைவாக இருந்து அவனை நாம் பார்க்கமுடியாத, உணர முடியாத விதத்தில் தீய எண்ணங்களைப் போடுவதுதான். 

மனிதர்களாகிய நாம் ஜின்களை காண முடியாது என்பதை இந்தத் திருமறை வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது. 

நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் நபித்தோழர்கள் ஜின்களைக் கண்டதாகவும், அவற்றுடன் உரையாடியதாகவும் சில ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர்கள் ரீதியாக பலவீனமாக உள்ளன. 

நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஜின்னைப் பார்த்ததாகவும், அதனுடன் உரையாடியதாகவும் ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான நபிமொழி இடம் பெற்றுள்ளது. 

அந்த ஹதீஸை கவனமாகப் படித்துப் பார்த்தாலே போதும் இறைத்தூதர் அல்லாத பிற மனிதர்கள் ஜின்களைக் காண்பதும், அவற்றுடன் உரையாடுவதும் இறைவல்லமையுடனும், நபியவர்களின் நேரடித் தொடர்புடனும் சம்பந்தப்பட்டது  என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

அந்த ஹதீஸ் பின்வருமாறு :

 ٧٩٦٣ - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللهِ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ عَلَى تَمْرِ الصَّدَقَةِ فَوَجَدَ أَثَرَ كَفٍّ كَأَنَّهُ قَدْ أَخَذَ مِنْهُ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تُرِيدُ أَنْ تَأْخُذَهُ؟» قُلْ: سُبْحَانَ مَنْ سَخَّرَكَ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتُ: «فَإِذَا جِنِّيٌّ قَائِمٌ بَيْنَ يَدَيَّ، فَأَخَذْتُهُ لِأَذْهَبَ بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ: «إِنَّمَا أَخَذْتُهُ لِأَهْلِ بَيْتٍ فُقَرَاءَ مِنَ الْجِنِّ وَلَنْ أَعُودَ» قَالَ: «فَعَادَ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ: «تُرِيدُ أَنْ تَأْخُذَهُ؟» فَقُلْتُ: نَعَمْ فَقَالَ: " قُلْ سُبْحَانَ مَا سَخَّرَكَ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: «فَإِذَا أَنَا بِهِ فَأَرَدْتُ أَنْ أَذْهَبَ بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَاهَدَنِي أَنْ لَا يَعُودَ فَتَرَكْتُهُ، ثُمَّ عَادَ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ: «تُرِيدُ أَنْ تَأْخُذَهُ؟» فَقُلْتُ: نَعَمْ فَقَالَ: «قُلْ سُبْحَانَ مَا سَخَّرَكَ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقُلْتُ: فَإِذَا أَنَا بِهِ فَقُلْتُ: «عَاهَدْتَنِي فَكَذَبْتَ وَعُدْتَ، لَأَذْهَبَنَّ بِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ: «خَلِّ عَنِّي أُعَلِّمْكَ كَلِمَاتٍ إِذَا قُلْتَهُنَّ لَمْ يَقْربْكَ ذَكَرٌ وَلَا أُنْثَى مِنَ الْجِنِّ» قُلْتُ: وَمَا هَؤُلَاءِ الْكَلِمَاتِ؟ قَالَ: «آيَةُ الْكُرْسِيِّ اقْرَأْهَا عِنْدَ كُلِّ صَبَاحٍ وَمَسَاءٍ» قَالَ أَبُو هُرَيْرَةَ: «فَخَلَّيْتُ عَنْهُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ لِي: «أَوَمَا عَلِمْتَ أَنَّهُ كَذَلِكَ»

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ஸகாத்த்துப் பேரீத்தம்பழங்களை பாதுகாத்து வந்தார்கள். (ஒருநாள்) ஒரு கையளவு அதிலிருந்து எடுக்கப்பட்டதைப் போன்ற ஓர் அடையாளத்தைக் கண்டார்கள். எனவே அதைப் பற்றி நபிகளாரிடம் எடுத்துக் கூறினார்கள்.
(அதற்கு நபியவர்கள்) “நீர் அவனைப் பிடிக்க நாடுகிறீரா?” எனக் கேட்டுவிட்டு ."உன்னை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன்(இறைவன்) தூயவன்" எனக் கூறு! என்றார்கள்.
நானும் (அவ்வாறு) கூறினேன்.உடனே ஒரு ஜின் எனக்கு முன்பாக நின்றது என அபூ ஹூரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். 
நான் அவனைப் பிடித்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்ல முயன்றேன்.  அதற்கவன், ஜின்களில் உள்ள ஏழைகளுக்காகவே அதை எடுத்தேன்.இனி நான் மீண்டும் வரவேமாட்டேன்! என்று கூறினான்.
(ஆனால்) அவன் மீண்டும் வந்தான். எனவே அதைப் பற்றி நபிகளாரிடம் எடுத்துக்கூறினேன்.
(அதற்கு நபியவர்கள்) நீர் அவனைப் பிடிக்க நாடுகிறீரா? எனக் கேட்டார்கள்.நான் ஆம் என்றேன்." உன்னை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன்(இறைவன்) தூயவன்" எனக் கூறு! என்றார்கள்.நானும் (அவ்வாறு) கூறினேன்.உடனே நான் அவனுடன் இருக்கும் நிலையில் ,அவனை நபிகளாரிடம் கொண்டு செல்ல முயன்றேன்.
அவன் மீண்டும் வரமாட்டேன் என வாக்களித்ததால் அவனை விட்டுவிட்டேன்..
(ஆனால்) அவன் மீண்டும் வந்தான்.எனவே அதைப் பற்றி நபிகளாரிடம் எடுத்துக்கூறினேன்.
(அதற்கு நபியவர்கள்) நீர் அவனைப் பிடிக்க நாடுகிறீரா? எனக் கேட்டார்கள்.நான் ஆம் என்றேன்.
" உன்னை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன்(இறைவன்) தூயவன்" எனக் கூறு! என்றார்கள்.நானும் (அவ்வாறு) கூறினேன்.
உடனே நான் அவனுடன் இருக்க, நீ! திரும்ப வராமாட்டேன் என வாக்களித்தாய்.ஆனால் நீ பொய்யுரைத்துவிட்டு மீண்டும் வந்துள்ளாய்! நான் உன்னை கட்டாயம் நபிகளாரிடம் கொண்டு செல்வேன் என்றேன்.
அதற்கவன், என்னை விட்டு விடு!நான் உமக்கு சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்.அவற்றை நீர் கூறினால் ஜின்களில் எந்த ஒரு ஆணோ பெண்ணோ உம்மை நெருங்கமாட்டார்கள் என்றான்.
அந்த வார்த்தைகள் எவை? எனக் கேட்டேன்.அவை 'ஆயத்துல் குர்ஸி' எனவும் அதை காலையிலும் மாலையிலும் ஓதுவீராக என்றான்.நான் அவனை விட்டுவிட்டேன்.
அதைப் பற்றி நான் நபிகளாரிடம் எடுத்துக்கூறினேன்.அதற்கு நபியவர்கள் என்னிடம், (ஆயத்துல் குர்ஸி)'அது' அத்தகைய(சிறப்புடைய)து! என நீர் அறியவில்லையா! எனக் கெட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: ஸுனன் நஸாயி அல்குப்ரா(7963).

அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “ஸகாத்துடைய பேரீத்தம் பழங்களில் ஒரு கையளவு எடுக்கப்பட்டதைப் போன்ற ஓர் அடையாளத்தைக் கண்டார்கள்.

இது போன்ற ஓர் அடையாளத்தை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் உணரும் படிச் செய்ததே இறைவனுடைய நாட்டம்தான். ஏனெில் மனிதர்களுடன் ஷைத்தான் பங்கு பெறும் விசயங்களை நாம் உணர்ந்து கொள்ள முடியாது. அதைப் பின்வரும் நபிமொழிச் சான்றுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம்.
ஒருமுறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். 
அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். 
பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். 
பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். 
ஆகவே,இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4105. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை" என்று கூறுகிறான். 
ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது" என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று சொல்கிறான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4106. 

பிஸ்மில்லாஹ் கூறாமல் வீட்டிற்குள் நுழைந்தால் ஷைத்தான் நம்முடைன் தங்குகிறான்., 

பிஸ்மில்லாஹ் கூறாமல் நாம் சாப்பிட்டால் ஷைத்தானும் நம்முடன் சாப்பிடுகிறான். 

இதை நாம் உணரவோ, அறியவோ முடியாது. 

ஆனால் நபியவர்கள் கூறியதால் அந்த மறைவான விசயத்தை சந்தேகமில்லாமல் உறுதியாக நம்புகிறோம். 

எனவே பேரீத்தம் பழங்கள் குறைந்ததைப் போன்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உணர்ந்து கொண்டது இறைவனுடைய நாட்டப்படி நடந்த சம்பவமாகும். 

வஹீ அருளப்பட்ட காலத்தில் பல்வேறு நிகழ்வுகளின் மூலமும் இறைவன் இந்த ஷரீஅத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளான். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் இந்தச் சம்பவம் ஆகும். 

பேரீத்தம் பழங்கள் குறைந்ததற்கான காரணத்தை அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறியவில்லை. இதன் காரணமாகத்தான் நபியவர்களிடம் அதைப்பற்றித் தெரிவிக்கிறார்கள். 

அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவிக்கும் முன்னரே இறைவன் புறத்திலிருந்து அது நபியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் அதை எடுத்தவன் ஜின் என்பதை அபூ ஹுரைராவிற்கு தெரிவிக்கும் வகையில் 

 “நீர் அவனைப் பிடிக்க நாடுகிறீரா?” எனக் கேட்கிறார்கள். 

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் தமது விருப்பத்தை தெரிவித்தவுடன் ” ."உன்னை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன்(இறைவன்) தூயவன்" எனக் கூறு! என்றார்கள். 

எந்த ஒரு இறைத்தூதரும் இறைவனின் கட்டளையில்லாமல் அற்புதத்தைக் கொண்டுவர முடியாது. 

அல்லாஹ் கூறுகிறான் : 

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ [الرعد: 38]
(நபியே!) உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம். அல்லாஹ்வின் ஆணையின்றி எந்தத் தூதராலும் அற்புதத்தைக் கொண்டுவர முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு நிர்ணயம் உள்ளது.  '
அல் குர்ஆன்  -  13 : 38

மனிதர்கள் ஜின்களைக் காண்பதும், அவற்றுடன் உரையாடுவதும், அவற்றைக் கட்டுப்படுத்துவது என்பதும் இயலாத ஒன்றாகும்.  

அல்லாஹ்தான் தனது வல்லமையால் தான் நாடியவர்கள் ஜின்களைக் காணவும், அவற்றுடன் உரையாடவும் சாத்தியமாக்குகிறான். 

ஜின்களுக்கு மார்க்கத்தைக் கூற வேண்டிய அவசியம் இருந்த காரணத்தினால்தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் ஜின்களைக் கண்டுள்ளார்கள். அவற்றுடன் உரையாடியுள்ளார்கள். இவை அனைத்துமே இறைவனுடைய ஆணைப்படி இறைத்தூதருக்கு வழங்கப்பட்டவையாகும். 

இதன் காரணமாகத்தான் நபியவர்கள் 

."உன்னை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன்(இறைவன்) தூயவன்"
என்று கூறச் சொன்னார்கள். 

இதிலிருந்தே  அந்த ஜின்னை நபியவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தவன் இறைவன்தான். இறைவனுடைய கட்டளையின்றி ஜின்னை பார்க்கவோ, அதனுடன் உரையாடவோ இயலாது என்பதை அறிந்து கொள்ளலாம். 

அது போன்று நபி சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்காக இறைவனே தனது ஆணைப்படி ஜின்களை வசப்படுத்திக் கொடுத்ததாக திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.  

இதன் அடிப்படையில்தான் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் பேரீத்தம் பழங்களை எடுத்த ஜின்னைக் காணவிரும்பிய போது 

” ."உன்னை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன்(இறைவன்) தூயவன்"
என்று கூறுமாறு நபியவர்கள் கூறுகிறார்கள். 

இறைவனின் ஆணைப்படி நபியவர்கள் மூலமாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ஜின்னைக் கண்களால் கண்ட அற்புதம் நிகழ்ந்துள்ளது. 

எனவே ஜின்களை மனிதர்கள் காண இயலாது என்ற இறைவசனத்திற்கு இந்தச் சம்பவம் எதிரானதல்ல. 

அது போன்று அபூஹூரைரா(ரலி) அவர்கள் ஓதிய பிரத்யேக வார்த்தைகளை நாம் ஓதினால் அந்த ஜின்னைப் பார்க்கவோ அதனுடன் பேசவோ இயலுமா  என்ற கேள்வி இங்கே எழலாம். 

முடியாது! என்பதுதான் அதற்குரிய பதிலாகும். ஏனெனில் இந்தச் சம்பவத்தில் நபி(ஸல்) அவர்கள் அபூஹூரைரா (ரலி) அவர்களிடம், நீ அவனைப் பிடிக்க விரும்புகிறாயா எனக் கேட்டதிலிருந்தும் அதற்காக ஒரு வாசகத்தைச் சொல்லிக்கொடுத்ததிலிருந்தும் இது அபூஹுரைரா(ரலி) அவர்களுக்கு மட்டும் உரித்தானது என்பதை உணரலாம்.

அதுமட்டுமின்றி இந்த வாசகத்திலிருந்து  பேரீத்தம்பழங்களைத் திருடிய அந்த ஜின்னை ஒரு தடவை மட்டும் அபூஹூரைரா(ரலி) அவர்கள் பார்த்தது விதிவிலக்கானது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய அதே ஜின்னை அபூஹூரைரா(ரலி) அவர்கள் மறுதடவைப் பார்ப்பதற்கு நபிகளார் இந்த வாசகத்தைச் சொல்லி அனுப்புகிறார்கள்.

சற்று இலகுவாகப் புரிந்துகொள்வதாக இருந்தால் ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) போல் ஒவ்வொரு முறையும் அந்த ஜின்னைப் பார்ப்பதற்கு  நபிகளாரிடத்தில் முறையிட்ட பிறகு அந்த ஜின்னைக் காண்கிறார்கள் என்றால் இது ஒரு விதிவிலக்கான நிகழ்வு எனவும் புரிந்துகொள்ளலாம்.

இந்த நிகழ்வுக்குப் பின் அபூஹூரைரா (ரலி) அவர்களே நினைத்தாலும் அந்த ஜின்னை எங்கேயும் எப்போதும் பார்க்க இயலாது எனும்போது நாம் எப்படி பார்க்க இயலும்!

எனவே மனிதர்களாகிய நாம் ஜின்களைக் காணவோ, அவற்றுடன் உரையாடவோ வேண்டுமென்றால் இறைவனின் நாட்டப்படி, நாம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்திருந்து, அவர்களை் நம்மைப் பார்த்து அபூ ஹுரைராவிடம் கேட்டதைப் போன்று கேட்டு, பிறகு அவர்கள் சொல்லித் தந்த வாசகத்தை கூறினால் மட்டுமே அது சாத்தியமானது என்பதை இந்த நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

இன்றைக்கு ஒருவர் வந்து ஜின்னுடன் பேசமுடியும் என்று கூறினால் நிச்சயமாக அவர் பொய் கூறுகிறார் என்பதை மேற்கண்ட வஹியின் ஆதாரங்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment